வரலாறு - பாமினி அரசு | 11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms

   Posted On :  18.05.2022 05:45 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

பாமினி அரசு

கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகளுக்கிடையிலான வளமான ரெய்ச்சூர் பகுதியைக் கைப்பற்றுவதில் பாமினி, விஜயநகர அரசுகளிடையே ஏற்பட்ட போட்டி பாமினி அரசின் தொடக்க கால வரலாற்றைக் குறிப்பததோடு மட்டுமல்லாமல் இரு நூற்றாண்டுகளுக்கு நீடித்த அம்சமாக இருந்தது.

பாமினி அரசு

 

அலாவுதீன் ஹசன் பாமன்ஷா (1347-1358)

கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகளுக்கிடையிலான வளமான ரெய்ச்சூர் பகுதியைக் கைப்பற்றுவதில் பாமினி, விஜயநகர அரசுகளிடையே ஏற்பட்ட போட்டி பாமினி அரசின் தொடக்க கால வரலாற்றைக் குறிப்பததோடு மட்டுமல்லாமல் இரு நூற்றாண்டுகளுக்கு நீடித்த அம்சமாக இருந்தது. வாரங்கல்லின் கிழக்குப் பகுதி மற்றும் ஒரிசா ஆட்சியாளர்களுக்கு எதிராக பாமன்ஷா தன் போராட்டத்தைத் தொடங்கினார். சுமூகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றிய இவர் தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ் எனப்பட்டன. பிரிக்கப்பட்டட நான்கு பகுதிகளுக்கும் ஒவ்வொரு ஆளுநர் நியமிக்கப்பட்டார். அவர்களே அப்பகுதியின் படைகளையும் வழிநடத்தினர். குல்பர்கா, தௌலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்களாகும். மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரி வசூல் போன்றவற்றிற்கு முழுப்பொறுப்பாவர். வலிமையான அரசர்களின் கீழ் நன்கு செயல்பட்ட இம்முறை, திறமை குன்றிய அரசர்களின் காலத்தில் ஆபத்தாக மாறியது. 11 ஆண்டுகள் பாமன்ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சி செய்தார். வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியவற்றிடமிருந்து முயற்சி பல போர்களுக்கு இட்டுச் சென்றது. அனைத்திலும் அவர் வெற்றிபெற்றார். இவர் தான் பெற்ற வெற்றிகளை நினைவுகூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக்கொண்டார்.

 

முதலாம் முகமது (1358-1375)

பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகம்மது. விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்களை அவர் மேற்கொண்டார். அவற்றில் பல ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியோடு தொடர்புடையதாகும். இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டாலும் யாரும் அப்பகுதியை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இவர் மேற்கொண்ட இரண்டு கடுமையான போர்களால் பலன் ஏதும் இல்லை. 1363இல் வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். வாரங்கல் போர் நஷ்டஈட்டை வாரி வழங்கியது. கோல்கொண்டா கோட்டை அவர் வசமானது. அங்கிருந்த கருவூலங்கள், ரத்தினக்கற்கள் பாமினி அரசின் வசமாயின. அங்கிருந்த ரத்தினச் சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனமாயிற்று.

ஆகாய நீல வண்ணத்திலுள்ள ரத்தினக்கற்கள் ஓரளவு விலை மதிப்புள்ள கற்களாகும். இம்மாணிக்கக் கற்களினால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது என பிர்தௌசியின் ஷாநாமா குறிக்கின்றது.

முதலாம் முகமது சிறந்த அரசு முறை நிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரச முறையைப் பின்பற்றிச் சிறப்பாக இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. அவர் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அதன் படி 1. வகில்-உஸ்-சுல்தானா படைத்தலைவர்; அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவர். 2. வசீர் - - குல்: மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர். 3. அமீர் -ஜும்லா : நிதியமைச்சர் 4. வசீர் - -அஷ்ரப்: வெளியுறவு அமைச்சர், அரசு விவகாரத்துறை அமைச்சர், அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்புடையவர். 5. நசீர் : நிதித்துறை இணையமைச்சர். 6 பேஷ்வா: அரசப் படைகளின் பொறுப்பாளர். 7. கொத்வால் காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி 8. சதர் - -ஜஹான்: தலைமை நீதிபதி ; சமய அறநிலையத்துறை அமைச்சர்.

வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார். நிறுவன மற்றும் புவியியல் ரீதியில் முகமது ஷா ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது. அவர் குல்பர்காவில் இரு மசூதிகளை எழுப்பினார். அதில் ஒரு மசூதி 1367 ஆம் ஆண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அது சிறந்த கட்டடமாகும். முதலாம் முகமதுஷாவிற்குப் பின் சில சுல்தான்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் திறமையற்றவர்கள். தென்பகுதி ஆட்சியாளர்களுடன் அவர்கள் அடிக்கடி போரிட்டனர். 1425 இல் வாரங்கல் மற்றும் அதன் கிழக்கிலிருந்த பகுதிகளை ஒரிசாவின் ஆட்சியாளர்கள் கைப்பற்றினர். இந்நிலையில் தலைநகரம் குல்பர்காவிலிருந்து 1429இல் பீடாருக்கு மாற்றப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த மூன்றாம் முகமது (1463-1482) காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய முகமது கவான் சிறந்த அரசியல் இராஜதந்திரியாவார்.

முகமது கவான்

பாரசீகத்தில் பிறந்த முகமது கவான் புகழ்பெற்ற இஸ்லாமிய சமய வல்லுநராகவும், பாரசீக மொழியில், கணிதத்தில் புலமை பெற்றவராகவும் விளங்கினார். அவர் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். பீடாரில் ஒரு மதரசாவை நிறுவிய அவர் அதில் ஒரு பெரிய நூலகத்தையும் அமைத்தார். அந்நூலகத்தில் 3000 கையெழுத்து நூல்கள் இருந்தன. இவை இவருடைய புலமையை உணர்த்த வல்லன. மூன்றாம் முகம்மதுவின் தலைசிறந்த பிரதம மந்திரியாக விளங்கிய கவான் சிறந்த நிர்வாகத் திறனுடன் பாமினி அரசின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாகத் திகழ்ந்தார். கொங்கணம், ஒரிசா, விஜயநகர மன்னர்களுக்கு எதிராக வெற்றிகரமாகப் போரை நடத்தினார். சிறந்த நிர்வாக நுணுக்கங்களை அறிந்திருந்த இவர் பாரசீக வேதியியல் வல்லுநர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தைப் பயன்படுத்தினார். மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திச் சிறப்பான ஆட்சி அமைப்புக்கு கவான் அடித்தளமிட்டார். பாமினி அரசை நிர்வகிக்க வசதியாக நாட்டை எட்டு மாகாணங்களாகப் பிரித்தார். ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே எல்லை வரையறை செய்யப்பட்டு அவற்றிற்கெனத் தனித்தனியே ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். சில மாவட்டங்களை கவானே தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். ஆளுநர்களின் ராணுவ அதிகாரத்தை குறைத்தார். ஒரு ஆளுநருக்கு ஒரு கோட்டையே அனுமதிக்கப்பட்டது. மற்ற கோட்டைகள் சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. அரசு அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதில் நிலங்கள் தரப்பட்டன.

கவான் அறிமுகப்படுத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் அரசின் நிலையை உயர்த்தின. ஆனால் மாகாணத் தலைவர்களுக்குத் தரப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அவர்களில் பலர் தக்காணத்தை சேர்ந்தவர்களாவர். தக்காணத்தில் அவர்களுக்கிடையே இரு பிரிவுகள் உண்டாயின. அவ்விரு பிரிவினர் 1) தக்காண முஸ்லீம்கள் 2) வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்கள் ஆவர். அவ்விரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் நிர்வாகச் சீர்குலைவும் வீழ்ச்சியும் ஏற்பட்டன. இந்தப் போட்டியில் கவான் பலியானார். கவானின் வளர்ச்சியால் பொறாமை கொண்ட அவர்கள் கவான் சுல்தானுக்கு எதிராக சதி செய்கிறார் என்னும் போலிக் கடிதத்தை தயாரித்து சுல்தானின் கைகளில் கிடைக்குமாறு செய்தனர். ஏற்கனவே கவான் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதாக எண்ணிய சுல்தான் அவர்மீது அதிருப்தி கொண்டார். சுல்தானுடன் இருந்த விரிசலைச் சரி செய்ய கவான் அவரிடம் மன்னிப்பு கோரினார். ஆனால் சுல்தான் மன்னிக்கத் தயாராக இல்லை. அரசனுக்கெதிராகச் செயல்பட்டதாக கவான் கொல்லப்பட்டார். சுல்தான் மூன்றாம் முகம்மதுவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு கவானின் மறைவு காரணமாயிற்று.

 

கோல்கொண்டா கோட்டை: ராஜா கிருஷ்ண தேவ் என்ற வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்ட காகத்திய வம்ச அரசர் கட்டிய கோட்டை இது. 1495-1496இல் இக்கோட்டை சுல்தான் குலிகுதுப்ஷாவிற்கு ஒரு ஜாகீராகத் (நிலமாக) தரப்பட்டது. அவர் அக்கோட்டையைக் கருங்கற்கள் கொண்டு புனரமைத்தார். அதன்பின் இக்கோட்டைப் பகுதி இருந்த நகரம் முகம்மது நகர் எனப்பட்டது. பிற்காலத்தில் பாமினி அரசின் கைவசமாகி, அதன்பின்னர் குதுப்ஷாகி வம்ச அரசின் தலைநகரானது. குதுப்ஷாகி வம்சத்தின் ஐந்தாவது சுல்தானான முகம்மது குலி குதுப்ஷா காலத்தில் கம்பீரமான கோட்டையாக கோல்கொண்டா கோட்டை திகழ்ந்தது. பாமினி சுல்தானியத்தின் வீழ்ச்சிக்குபின் இந்நகரம் வளர்ச்சியடைந்தது. 17ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச் சந்தையாகத் திகழ்ந்தது. கோஹினூர் வைரம் உட்பட மிகச்சிறந்த வைரங்களை உலகிற்கு வழங்கியது.

கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலைமீது 120 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோல்கொண்டா கோட்டை அதன் ஒலி அம்ச அடிப்படையில் சிறந்த கட்டடக் கலையின் அம்சமாகும். இக்கோட்டையின் உயர்ந்த பகுதி பாலா ஹிசார் என்றழைக்கப்படுகிறது. இதில் ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதை உள்ளது. அது தர்பார் அறையிலிருந்து மலையின் கீழுள்ள அரண்மனைக்குச் செல்வதாகச் சொல்லப்படுகின்றது. இக்கோட்டையில் அரச அவையும் (Durbar Hall) உள்ளது. இதில் ஒரு மாளிகையும் உள்ளது.

 

கோல்கொண்டா கோட்டையில் குதுப்ஷாகியின் கல்லறையும் உள்ளது. இதில் இருவிதத் தனி வழிகள் உள்ளன. இவை கோல்கொண்டா கட்டடக்கலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகத் கருதப்படுகிறது. பீரங்கிகள், பாலங்கள், அரச அரண்மனைகள், அறைகள், மசூதிகள், தொழுவங்கள் உட்பட நான்கு சிறிய கோட்டைகளும் இதனுள் அடங்கும். இக்கோட்டையின் நுழைவாயில் பகுதி பதேதர்வாசா () வெற்றி நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது. ஒளரங்கசீப் எட்டு மாதங்கள் முற்றுகையிட்டு 1687இல் ஆப்கானிய வாசல் காப்பாளரின் துரோகம் காரணமாக கோல்கொண்டா கோட்டையை அதன் ஆட்சியாளரிடமிருந்து கைப்பற்றினார்.



 

கலை மற்றும் கட்டடக்கலை

பாமினி அரசர்கள் குல்பர்கா, பீடார் மற்றும் பீஜப்பூர் போன்ற நகரங்களில் பல கட்டடங்களை கட்டினர். ஏராளமான மசூதிகள், மதராஸாக்கள் மற்றும் நூலகங்கள் கட்டப்பட்டன. குல்பர்காவில் உள்ள ஜாமி மஸ்ஜித், ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, பீஜப்பூரில் உள்ள கோல்கும்பாஸ் மற்றும் பீடாரில் சாந்த் மினார் ஆகியவை பாமினி கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும். சுல்தான்கள் இந்தோ - சாரசெனிக் பாணியிலான கட்டடக்கலைகளை உருவாக்கினர்.

பாமினி அரசின் வீழ்ச்சி

மூன்றாம் முகம்மது இறந்தபின் பாமினி அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன்பின் அவரது வம்சத்தைச் சார்ந்த 5 மன்னர்கள் ஆட்சி செய்தனர். அரசும் நான்கு சுதந்திர அரசுகளாகப் பிரிந்தது (பீஜப்பூர், அகமது நகர், பெரார், கோல்கொண்டா ). அதன்பின் ஐந்தாவதாக பீடார் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் பீஜப்பூர் வலிமையான அரசானது. பீடார், பெரார் போன்றவை அதில் இணைக்கப்பட்டன. அதே நேரத்தில் அகமது நகர், கோல்கொண்டா போன்றவை சுதந்திர அரசுகளாயின. ஆனால் பொது எதிரியான விஜயநகர அரசை எதிர்க்கும் வகையில் ஐந்து அரசுகளும் இணைந்து 1565இல் தலைக்கோட்டைப் போரில் (ராக்சஷி தங்கடி போர்) விஜயநகர அரசைத் தோற்கடித்தன. ஆனால் தலைக்கோட்டைப் போருக்குப் பின் தக்காண சுல்தானியங்கள் முகலாய அரசுடன் இணைக்கப்பட்டன.



Tags : History வரலாறு.
11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms : Bahmani Kingdom History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் : பாமினி அரசு - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்