வரலாறு - சமூகமும் பொருளாதாரமும் - விஜயநகர அரசுகள் | 11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms
சமூகமும் பொருளாதாரமும்
தொடர் போர்களும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட அளவிலாத் துயரங்களும் தொடக்ககால, இடைக்கால சமூகங்களின் பொதுவான அம்சங்களாகும். பாமினி விஜயநகர் அரசுகளின் காலமும் இதற்கு விதிவிலக்கல்ல. கண்களால் பார்த்த சாட்சியங்களின் குறிப்புகள் அதிக அளவில் கிடைப்பதால் இவ்வம்சம் பெரியதாகவே தெரிகிறது. மற்றொரு முக்கியமான, நூற்றாண்டுகளைக் கடந்து நீடித்திருக்கும் விளைவு மக்கள் இடம் விட்டு இடம் சென்றதும் புலம் பெயர்ந்ததுமாகும். இப்பாடத்தில் நாம் காணும் மூன்று நூற்றாண்டு காலப்பகுதியில் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற குடிபெயர்வைக் காணமுடிகிறது. பாமினி அரசவைகளில் நடைபெற்ற மோதல்களுக்குத் தக்காணப் பகுதிகளில் துருக்கியர், ஆப்கானியர், பாரசீகர் ஆகியோர் குடியேறியதே காரணமாயிற்று. விஜயநகரப் பகுதிகளைப் பொறுத்த அளவில் கன்னட, தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தோரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர். பெரும்பாலான நாயக்கத் தலைவர்கள் இவ்விரு மொழியினரே. மற்றொரு முக்கிய விளைவு ஆளும் வர்க்கத்தினருக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்கும் இருந்த மிகப் பெரிய இடைவெளியாகும். அனைத்து அயல்நாட்டு பயணிகளும் அரசர்கள், அரசு அதிகாரிகள், சமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர்கள், விஜயநகரம், பீஜப்பூர் போன்ற நகரங்களில் வாழ்ந்தோரின் செல்வச் செழிப்பையும் ஆடம்பர வாழ்வையும் குறிப்பிடும் போதே பெருவாரியான மக்கள் வறுமையில் வாடியதையும் குறிப்பிட்டுள்ளனர். அடிமைமுறை நிலவியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்களின் மீது வரிவிதிப்பின் மூலமே அரசு வருமானத்தைப் பெற்றது. சங்கம் வம்ச அரசர்களின் காலத்தில் விஜயநகரத்தின் ஆட்சி புதிய பகுதிகளுக்குப் பரவியபோது வரிவசூல் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால் உழைக்கும் மக்கள் கிளர்ச்சி செய்ததாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சி 1430இல் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளில் நடை பெற்றுள்ளது. இக்கிளர்ச்சியில் அடிப்படை உற்பத்தியாளர்கள் தங்கள் சாதி வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒன்றுபட்டிருந்தனர். அரசு பிரதானி (ஆளுநர்) அவருடைய படைவீரர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் உட்பட நியாயத்திற்குப் புறம்பாக அதிக வரி கட்டும்படி மக்களை வற்புறுத்தியதன் காரணமான இக்கிளர்ச்சி ஏற்பட்டது. விஜயநகர இளவரசர் இது விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு மக்களைச் சமாதானப்படுத்தி வரித் தொகையைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில், நாயக்க நிர்வாக முறையில் நாயக்குகள் நெசவு போன்ற கைவினைத் தொழில்களை வளர்ப்பதற்காக அவ்வப்போது வரிச்சலுகை வழங்கினர்.
விஜயநகர அரசின் காலத்தில் வேளாண் சாராத கைவினைத் தொழில் உற்பத்தி வியத்தகு வளர்ச்சியை அடைந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பொருளாதாரம் பெருமளவில் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. பணப் பொருளாதாரத்தின் தொடக்கத்தோடு, நாணயப் பணத்தின் பயன்பாடும், அதன் செலாவணியும் பலமடங்காகப் பெருகியது. சமூகத்தில் நெசவு செய்வோர் உலோக வேலை செய்வோர். கட்டடக் கலைஞர்கள் போன்ற கைவினைஞர்கள் முக்கியத்துவம் பெற்றனர். வேளாண் அல்லாத பிரிவுகளைச் சார்ந்த ‘பட்டடை’ அல்லது ‘காஸய – வர்க்கம்’ என்றழைக்கப்பட்ட இவர்கள் வரிகளைப் பணமாகவே வழங்கினர். தமிழகத்தின் வடபகுதி, ராயலசீமை, ஆந்திரக் கடற்கரைப்பகுதி ஆகியவற்றில் பெரும் எண்ணிக்கையில் வணிக மையங்களும் நெசவு மையங்களும் உருவாயின. இயல்பாகவே தென்னிந்தியத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்களில் ஜவுளி முக்கியப் பண்டமாக விளங்கியது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஜவுளி வணிகமானது இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர் மற்றும் ஏனைய ஐரோப்பிய வணிகர்களைப் பெரிதும் ஈர்த்த ஒன்றாகும்.