வரலாறு - விஜயநகரப் பேரரசு | 11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms
விஜயநகரப் பேரரசு
தோற்றமும் விரிவாக்கமும்
விஜயநகரப் பேரரசின் உருவாக்கம் தொடர்பாக பல மரபுசார்ந்த செய்திகள் உள்ளன. சமகாலக் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில், பொதுவாக ஏற்கப்படும் கருத்து யாதெனில் சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோர் ஹொய்சாள அரசரிடம் சில காலம் பணி செய்த பின்னர் தங்களை சுதந்திர அரசர்களாக நிலைநிறுத்திக் கொண்டு 1336இல் புதிய அரசுக்கான அடித்தளத்தை அமைத்தனர். இந்நிகழ்வு ஹொய்சாள அரசர் மூன்றாம் பல்லாலர், மதுரை சுல்தானால் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்றிருக்க வேண்டும். தொடக்கத்தில் துங்கபத்திரை நதியின் வடக்குக் கரையில் அனகொண்டி அருகே தலைநகர் அமைந்திருந்தது. ஆனால் விரைவில் ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே) என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது. தலைநகரம் விரிவுபடுத்தப்பட்ட பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது. இதன் பின்னர் அவர்கள் தங்களை விஜயநகர அல்லது கர்நாடக - விஜயநகர அரசர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். 1346ஆம் ஆண்டு ஹரிஹரரின் முடிசூட்டு விழா கொண்டாடப்பட்டது. வரலாற்றறிஞர்கள் ஹரிஹரர், புக்கர் தொடங்கிய இவ்வரச வம்சத்தை அவரின் தந்தையாரின் பெயரில் அல்லது மூதாதையரின் பெயரில் சங்கம வம்சம் என அழைத்தனர். விஜயநகர அரசர்கள், சாளுக்கியரின் முத்திரையான பன்றி (வராகம்) உருவத்தைத் தங்களது அரச முத்திரையாகக் கொண்டனர்.
சில மரபுக் கதைகளின்படி புகழ்பெற்ற சைவத் துறவியும், சமஸ்கிருத அறிஞருமான வித்யாரண்யர் (மாதவர்) அறிவுறுத்தலுக்கு இணங்க ஹரிஹரரும் புக்கரும் சுல்தான் துக்ளக்கிடம் செய்துவந்த பணியிலிருந்து விலகி, சுல்தானால் சிறை பிடிக்கப்பட்டபோது முஸ்லீம் மதத்திற்கு மாறியிருந்த இவர்கள் மீண்டும் இந்துக்களாக மாறினர் என்று கூறப்படுகிறது. விஜயநகரப் பேரரசு நிறுவியதில் வித்யாரண்யர் முக்கியப் பங்காற்றினார். ஆனால் இது சந்தேகத்திற்குரியது என்பர். ஏனெனில் சில கல்வெட்டுச் சான்றுகளின்படி வித்யாரண்யர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த வர். அதாவது விஜயநகரப் பேரரசு உருவான அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்தவர்.
விஜயநகர அரசு நான்கு அரச வம்சத்து அரசர்களால் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது. சங்கம வம்சம் (1336-1485), சாளுவ வம்சம் (1485-1505), துளுவ வம்சம் (1505-1570), ஆரவீடு வம்சம் (1570-1650) என இவ்வரசின் வரலாற்றை நான்கு கட்டங்களாக விவரிக்கலாம்.
தொடக்கத்தில் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளூர் தலைவர்களால் ஆளப்பட்டு வந்த பல சிற்றரசுகளைப் போலவே விஜயநகர அரசும் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டின் பெரிய அரசுகளான தமிழ்நாட்டில் பாண்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஹொய்சாளர், ஆந்திர காகத்தியர் ஆகிய மூன்று அரசுகளும் பதினான்காம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் தில்லி சுல்தானியத்தின் படையெடுப்புகளால் அழிவுற்று பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்த இச்சூழ்நிலை சங்கம வம்சத்தை சேர்ந்த ஹரிஹரர் முதலான ஐந்து சகோதரர்களுக்கு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைக்கவும் விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பினை வழங்கியது. மேலும் சற்றே முன்னதாக உருவாக்கப்பட்ட மதுரை சுல்தானியமும், 1347இல் உருவான பாமினி அரசும் தில்லியின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திர அரசுகளாயின. தில்லி சுல்தானியமே பலவீனம் அடைந்ததால் அது தென்னிந்தியாவின் மேல் அதிக ஆர்வம் காட்டவில்லை .
விஜயநகர அரசு உருவான நாற்பதாண்டுகளுக்கு உள்ளாகவே ஐந்து சகோதரர்களும் வெவ்வேறு திசைகளில் மேற்கொண்ட படையெடுப்புகளின் விளைவாகக் குறுநில அரசு என்ற நிலையிலிருந்து பெரிய அரசாக மாறியது. முதலில் கர்நாடகாவில் ஹொய்சாள அரசின் இதயமாக இருந்த பகுதிகள் விஜயநகரோடு இணைக்கப்பட்டன. தொடர்ந்து கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அவை இறுதி வரை நாட்டின் முக்கியப் பகுதியாகவே இருந்தன. பல துறைமுகங்களைச் சென்றடையும் வாய்ப்பினை இப்பகுதி கொண்டிருந்ததால் இப்பகுதியின் பிரதானிகள் அல்லது ஆளுநர்கள் இப்பகுதியின் நிர்வாகத்தில் அக்கறை செலுத்தினர். முதலாம் புக்கரின் ஆட்சியின் போது தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதியின் மீது கவனம் திரும்பியது. தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சம்புவராயர் ஆண்டு வந்தனர். இளவரசர் கம்பணர்- ஆல் (வழக்கமாக குமார கம்பணர் என்பர்) தன் நம்பிக்கைக்குரிய தளபதி மாரையா நாயக்கரின் உதவியுடன்இ ப்பணியை வெற்றிகரமாக முடித்தார். மேலும் மதுரை சுல்தானை 1370இல் கொன்றதன் மூலம் மதுரை சுல்தானிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பெருமையும் குமார கம்பண்ணாவைச் சாரும். இச்செய்தி குமார கம்பண்ணாவின் மனைவி கங்காதேவி சமஸ்கிருத மொழியில் எழுதிய மதுரா விஜயம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மதுரை உள்ளிட்ட பாண்டிய நாடு அப்போது விஜயநகர அரசோடு இணையவில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1500 வாக்கில் பாண்டிய நாடு விஜயநகர அரசின் ஒரு பகுதியானது. அதுவரையிலும் தமிழகத்தின் வடபகுதிகளும் காவேரி வடிநிலப் பகுதி வரையிலான மத்தியப் பகுதிகளுமே சங்கம – சாளுவ வம்ச அரசுகளின் நேரடி நிர்வாகத்தின் கீழிருந்தன.
விஜயநகர் - பாமினி மோதல்
தொடக்கத்திலிருந்தே பாமினி விஜயநகர அரசுகள் தொடர்ந்து மோதிக் கொண்டன. இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம் வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும். கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க ரெய்ச்சூர் பகுதியை இணைத்துக்கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும் இருவருமே விரும்பினர். ஆனால் இருவராலும் முழுமையான வெற்றியைப் பெற இயலவில்லை. நிலையற்ற சிறிய வெற்றிகளுக்காகப் பெருமளவில் ரத்தம் சிந்தப்பட்டது. சில வரலாற்று ஆய்வாளர்கள் இந்து விஜயநகரத்திற்கும் இஸ்லாமிய பாமினி அரசுகளுக்கு இடையே நிலவிய மதப் பகைமையே தொடர்ந்த போர்களுக்கான அடிப்படைக் காரணமென்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் விஜயநகர அரசர்கள் முஸ்லீம்கள் அல்லாத இந்து அரசுகளான வாராங்கல், கொண்டவீடு, ஒரிசா ஆகியவற்றுடன் போரிட்ட போது முஸ்லீம் அரசுகள் சில சமயம் விஜயநகருக்கு ஆதரவாகவும் சில சமயம் எதிர்தரப்புக்கு ஆதரவாகவும் பங்கேற்றனர். கோவா மற்றும் ஏனைய துறைமுகங்கள் வழியாக நடைபெற்ற குதிரை வாணிகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் ஏற்பட்ட போட்டி இப்போர்களுக்கு மற்றொரு காரணமாகும். தொடர்ந்து போரிட்டுக்கொண்டாலும் கிருஷ்ணா நதியே ஏறக்குறைய இவ்விருவரையும் பிரிக்கும் எல்லைக் கோடாக அமைந்திருந்தது.
ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் அதிகாரத்திற்கான போட்டி ஒரிசாவைச் சேர்ந்த கஜபதி அரசுக்கும் விஜயநகருக்குமிடையே நடைபெற்றது. இரண்டாம் தேவராயர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை இப்பிரச்சனையில் விஜயநகரால் பெரும் வெற்றி என எதையும் பெற இயலவில்லை. இரண்டாம் தேவராயர் (1422-46) ஒரியர்களைச் சில போர்களில் தோற்கடித்தார். இப்போர்கள் அனைத்தும் கப்பம் வசூல் செய்வதற்காகவே நடைபெற்றன. இடங்கள் கைப்பற்றப்பட்டு இணைக்கப்படவில்லை. சங்கம வம்ச அரசர்களுள் மிகச் சிறந்த அரசர் இரண்டாம் தேவராயர் ஆவார். தன்னுடைய குதிரைப் படையின் வலிமையைப் பெருக்குவதற்காகப் பயிற்சி பெற்ற முஸ்லீம் குதிரைப்படை வீரர்களைத் தனது படைகளில் சேர்த்துக் கொண்டார். இரண்டாம் தேவராயரின் காலத்தில் இங்கு வந்த பாரசீக நாட்டின் தூதுவர் அப்துர் ரஸாக் கொச்சி சாமரின் அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகை தந்தார். இரண்டாம் தேவராயர் மிகப்பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார் என்று குறிப்பிடுகின்றார். இரண்டாம் தேவராயர் இலங்கை அரசனிடமிருந்தும் கப்பம் பெற்றார்.
இரண்டாம் தேவராயருக்குப் பின்னர் பிரச்சனைகள் தலைதூக்கின. வாரிசுரிமைச் சண்டைகளும் திறமையற்ற அரசர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதின் விளைவாக கஜபதி அரசர்கள் ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். 1460-65க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் கஜபதி படைகள் பலமுறை தாக்குதல்களை மேற்கொண்டன. மேலும் திருச்சிராப்பள்ளி வரை வெற்றிகரமாகப் படையெடுத்து வந்த கஜபதி படைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதோடு கோவில்களின் செல்வத்தையும் கொள்ளையடித்தன. இச்சூழலை சாதகமாகப் பயன்படுத்திய குறுநில மன்னர்கள் சுதந்திர அரசர்களாயினர். சாளுவ வம்ச அரசர்களின் எழுச்சி வரை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி பகுதிகளில் திருமலைத்தேவர், கோனேரித்தேவர் போன்ற குறுநில மன்னர்கள் ஒரு சில பத்தாண்டுகள் சுதந்திர அரசர்களைப் போல ஆட்சி நடத்தினர்.
காலத்தின் நகர்வில் அரசியல் அதிகாரம் நம்பிக்கைக்குரிய தளபதி சாளுவ நரசிம்மரின் கைகளுக்குச் சென்றது. அவர் கஜபதிகளிடமிருந்து நாட்டைக் காத்து, ஆந்திரக் கடற்கரை பகுதிகளை மீட்டார். 1485இல் அரசாட்சியைக் கைப்பற்றி தன்னையே அரசரென அறிவித்து, குறுகிய காலமே ஆட்சி செய்து சாளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். அவருடைய தளபதியும் மாபெரும் போர்வீரருமான நரச நாயக்கர் அவருக்குத் துணை நின்றார். அவர் தென்பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட உள்ளூர் தலைவர்களை அடக்க முயன்றார். 1491இல் சாளுவ நரசிம்மர் மரணமடைந்தார். அதற்கு முன்பாக தனது இளம் வயது மகன்களை நரச நாயக்கரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். உண்மையான ஆட்சி அதிகாரம் தனது கைகளுக்கு வரப்பெற்ற நரச நாயக்கர் தனது மரணம் வரையிலும் நாட்டைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1505இல் அவருடைய மூத்த மகன் வீரநரசிம்மர் துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். சிறிது காலமே ஆட்சி செய்தாலும் அவரது ஆட்சிக் காலம் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டதாய் அமைந்தது. அவரைத் தொடர்ந்து அவருடைய தம்பி கிருஷ்ணதேவராயர் அரியணை ஏறினார்.
கிருஷ்ண தேவராயர் (1509-1529)
கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசர்களில் மகத்தானவராகக் கருதப்படுகிறார். தனது தந்தையும் அண்ணனும் அமைத்துக் கொடுத்த வலுவான ராணுவ அடித்தளத்தின் மீது அவர் ஒரு பேரரசைக் கட்டினார். தனது நாட்டின் பெருமைக்குக் குறை ஏற்படாமலிருக்கப் பல படையெடுப்புகளை மேற்கொண்டார். தனது ஆட்சியின் தொடக்கத்தில் மைசூருக்கு அருகேயிருந்த கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனைத் தோற்கடித்துப் பணியச் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் இரு முனைகளில் போரிட வேண்டியிருந்தது. ஒன்று பரம்பரை எதிரிகளான பாமினி சுல்தான்களுடன், மற்றொன்று ஒரிசாவின் கஜபதி அரசர்களுடன். அவருடைய கிழக்குத்திசை படையெடுப்பின் போது கஜபதி அரசர்களின் வசமிருந்த உதயகிரி கோட்டையைப் போன்று பல கோட்டைகள் கைப்பற்றப்பட்டதைப் பற்றிப் பல கட்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன. முடிவில் அவர் தனது வெற்றித் தூணை சிம்மாச்சலத்தில் நிறுவினார்.
பாமினி படைகளை முறியடிப்பதற்காகக் கிருஷ்ணதேவராயர் ஒன்றுக்கும் மேற்பட்ட படையெடுப்புகளை ஆண்டுதோறும் மேற்கொள்ள நேர்ந்தது. ஏனெனில் ஆண்டுக்கு ஒருமுறை என்ற கணக்கில் பாமினிப் படைகள் விஜயநகரை ஊடுருவின. ஒரு சில படையெடுப்புகளின் போது, மலபார், கொங்கணக் கடற்கரைப் பகுதிகளில் தங்களுடைய அதிகாரத்தை நிறுவுவதற்கு முயன்று கொண்டிருந்த போர்த்துகீசியர் விஜயநகருக்கு இராணுவ உதவிகளைச் செய்தனர். மேலும் பகல் என்னும் இடத்தில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றனர். அவர் மிகப்பெரும் வெற்றியாளராக இருந்தபோதிலும் கிருஷ்ணதேவராயர் பெற்ற வெற்றிகள், தங்களுக்கிடையே தொடர்ந்து போர் செய்து கொண்டிருந்த தக்காண சுல்தானிய அரசுகளை ஒற்றுமை கொள்ளச் செய்தன.
கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசர் எனப்போற்றப்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. ஸ்ரீசைலம், திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள சைவ, வைணவக் கோவில்களுக்குப் பெருமளவில் கொடையளித்தார். பல கோவில்களில் அவர் எழுப்பிய கோபுரங்கள் இன்று வரை உள்ளன. விஜயநகருக்கு வருகை தந்த சமகாலத்து வெளிநாட்டுப் பயணிகளான நூனிஸ், பயஸ் போன்றோர் அவருடைய ஆளுமை குறித்தும் விஜயநகரத்தின் உயர் நிலை, செல்வச் செழிப்பு ஆகியன பற்றியும் பாராட்டுகளை விட்டுச் சென்றுள்ளனர். அவருடைய அரசவையை அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா போன்ற தலைசிறந்த புலவர்கள் அலங்கரித்தனர். கிருஷ்ண தேவராயரே பெரும் அறிஞராக கருதப்படுகிறார். ஆமுக்தமால்யதா (ஆண்டாளின் கதை) எனும் நூலை இயற்றியுள்ளார். ஆனாலும் அவருடைய தலை சிறந்த சாதனை, ஒரு மதிநுட்பம் மிக்க நிர்வாகியாக அவர் நாயக்கர் அல்லது நாயங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்ததாகும். அது நிர்வாக முறை என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.
தலைக்கோட்டைப் போர் (1565)
கிருஷ்ணதேவராயர் இறந்த போது அவருடைய மகன் குழந்தையாக இருந்ததால் அவருடைய சகோதரர் அச்சுததேவராயர் ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆனால் விரைவிலேயே வாரிசு உரிமைப் பிரச்சனை தலை தூக்கியது.
கிருஷ்ணதேவராயரின் மருமகனான ராமராயர் அச்சிறு வயது இளவரசனுக்குப் பட்டம் சூட்டுவதன் வழியாக அரசியல் மேலாதிக்கம் செலுத்த விரும்பினார். இருந்தபோதிலும் அச்சுதராயருக்கு செல்லப்பா (சாளுவநாயக்கர் என்றும் அறியப்படுபவர்) என்பாரின் ஆதரவு இருந்தது. அக்கால கட்டத்தில் சிறப்பிடம் வகித்த இவர் தமிழகத்தின் பெரும்பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். காலப்போக்கில் இவரே கிளர்ச்சியில் ஈடுபட அச்சுதராயர் பெரும்படையோடு தென்னகம் வந்து இவரை அடக்கினார். அச்சுத் தேவராயர் பாமினி சுல்தான்களோடும் சில போர்களை மேற்கொண்டார். 1542 இல் அவர் மரணமடைந்தபோது அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் அரச பதவியேற்று ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆண்டார் (1542-70). ஆனால் உண்மையான அதிகாரம் ராமராயரின்கைகளில் இருந்தது. பல நெருங்கிய உறவினர்களின் (ஆரவீடு வம்சாவளியினர்) ஆதரவு அவருக்கு இருந்தது. அரசின் பல முக்கியப் பொறுப்புகளில் அவர் தன் உறவினர்களை அமர்த்தினார்.
சிறந்த வீரரும் ராணுவ வல்லுநருமான ராமராயர் பாமினி சுல்தான்களை ஒருவரோடு ஒருவரை மோதச் செய்யும் திறமை பெற்றிருந்தார். போர்த்துகீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசருக்குக் குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தினார். சில காலம் கழித்து கோல்கொண்டா, அகமதுநகர் சுல்தான்களுக்கு எதிராக பீஜப்பூரோடு கைகோர்த்தார். இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி விஜயநகருக்கு எதிராகப் பெரும் பகையை வளர்த்தது. இதன் விளைவாக, தக்காண சுல்தான்கள் தங்களது பரஸ்பர பகையை மறந்து ஒன்றுபட்டு, பொது எதிரிக்கு எதிராக இறுதிப்போர் புரிய கைகோத்தனர். ஜனவரி 23, 1565இல் தலைக்கோட்டை அல்லது ராக்சஷி - தங்கடி போர் நடைபெற்றது. தனது வயது முதிர்வையும் பொருட்படுத்தாது ராமராயரே படைப்பிரிவுகளுக்குத் தலைமை ஏற்று தனது சகோதரர்கள், ஏனைய உறவினர்களோடு போர்க்களம் புகுந்தார். போரின் இறுதிக் கட்டத்தில் விஜயநகரம் தோல்வியடைந்தது. ராமராயர் கைது செய்யப்பட்டு உடனடியாகக் கொல்லப்பட்டார். வெற்றிபெற்ற பாமினிப் படைகள், தங்களது வரலாற்றில் முதன்முறை விஜயநகரத்துக்குள் புகுந்தன. பல மாதங்கள் அந்நகரைக் கொள்ளையடித்துச் சூறையாடி பாழ்படுத்தின.
பொதுவாக இப்போர் விஜயநகர் அரசின் முடிவின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அரசர் சதாசிவராயரும் அவருடைய வீரர்களும் பெனுகொண்டாவுக்குத் தப்பிச் சென்றனர்.
ராமராயரின் சகோதரர் திருமலை 1570இல் தன்னை அரசராக அறிவித்து நான்காவது அரசமரபான ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகன்களும் பேரன்களும் அளவில் சுருங்கிய அரசை இருதலைமுறை காலத்திற்கு 1630 வரை ஆட்சி புரிந்தனர். வேறுசில அரசர்கள் நிரந்தரத் தலைநகரமில்லாமல் நாடோடிகளாகத் திரிந்து 1670 வரை ஆட்சி புரிந்தனர். பல நாயக்கத் தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உண்மையான அதிகாரத்தோடு ஆட்சி புரிந்தனர். அவர்களில் சிலர் அரசரை ஆதரித்தனர். வேறு சிலர் அரசரை எதிர்த்தனர். இவ்விரு பிரிவுகளுக்கிடையே சில போர்கள் நடைபெற்றனர். 1601இல் அரசு விசுவாசிகள் பெரும்பேடு என்னும் ஊரைச் சேர்ந்த யச்சம நாயக்கர் தலைமையிலும் எதிர் தரப்பினர் வேலூர் நாயக்கர் (வேலூர்) தலைமையிலும் உத்திரமேரூரில் கடுமையான போரில் ஈடுபட்டனர். இப்போரில் சுதந்திர அரசுகளாக மாறிவிட்ட தஞ்சாவூர், மதுரை, செஞ்சி நாயக்க அரசுகள் வேலூர் நாயக்கரை ஆதரித்தனர்.