வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் | 12th Chemistry : UNIT 15 : Chemistry in Everyday Life
அலகு 15
அன்றாட வாழ்வில் வேதியியல்
விளாடிமிர் பிரிலாக்
விளாடிமிர் பிரிலாக் என்பார் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியல் விஞ்ஞானி ஆவார். 1975 ஆம் ஆண்டு ஜான் W கார்ன் ஃபார்த் என்பாருடன் இணைந்து முப்பரிமாண மாற்றிய வேதியலுக்காக நோபல் பரிசு பெற்றார். மேலும் அவர் அல்கலாய்டுகள் எதிர் உயிரிகள் நொதிகள் மற்றும் பல தாவர மற்றும் உயிரிகளிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பொருள்களை ஆய்வு செய்தார். அவர் நவீன முப்பரிமாண மாற்றிய வேதியியலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவர் பிரிலாக் அடைமென்லின் போரோமைசின் அனலாய்டுகள் மற்றும் ரைபாமைசின்கள் ஆகிய பல இயற்பொருட்களை தொகுத்ததுடன் அவற்றின் முப்பரிமாண வேதியியலையும் ஆராய்ந்தார்.
கற்றலின் நோக்கங்கள் :
இந்த பாடப்பகுதியை கற்றறிந்த பின்னர் ,
• மருந்துப்பொருள் மற்றும் வேதி மருத்துவம் போன்ற சொற்கூறுகளை அங்கீகரித்தல்.
• மருந்துப்பொருளை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல்.
• மருந்து - இலக்கு இடையீடுகளை விளக்குதல்.
• சில முக்கியமான மருந்து வகைகளை விளக்குதல்.
• அழுக்கு நீக்கும் காரணிகள் பற்றிய வேதியியலை விளக்குதல்.
• உணவில் உள்ள வேதிப்பொருட்களை பற்றி விளக்குதல்.
• பலபடியாக்கல் வேதியியலிலுள்ள முக்கிய சொற்கூறுகளை விளக்குதல்.
• சில முக்கியமான தொகுப்பு பலபடிகளை விளக்குதல்.
• நம் அன்றாட வாழ்வில் பலபடிகளின் முக்கியத்துவத்தை மெச்சுதல். ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்.
பாட அறிமுகம்
நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் வேதியியல் உள்ளது. நம் வாழ்வின் மூன்று அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவை அனைத்தும் அடிப்படையில் வேதிப்பொருட்களே ஆகும். உண்மையில், சிக்கலான, ஒன்றுக்கொன்று தொடர்புடைய வேதிச் செயல்முறையினால் தான் நாம் உயிர்வாழ்கிறோம். இந்த பாடப்பகுதியில், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், உணவுப் பொருட்கள், அழுக்கு நீக்கும் காரணிகள் மற்றும் பலபடிகள் பற்றி கற்க உள்ளோம்.