தாவரவியல் - தனிமங்களின் தீர்வுக்கட்ட செறிவு மற்றும் நச்சுத்தன்மை | 11th Botany : Chapter 12 : Mineral Nutrition
தனிமங்களின்
தீர்வுக்கட்ட செறிவு மற்றும் நச்சுத்தன்மை
உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நச்சுத்தன்மையை தவிர்க்கவும் தனிமங்களின் தீர்வுக்கட்ட செறிவைப் பற்றி அறிவது அவசியம். தீர்வுக்கட்ட செறிவைவிடக் குறைவான அளவு கனிமங்களின் செறிவு உள்ளபோது பற்றாக்குறை அறிகுறிகளையும், இதைவிடச் செறிவு அதிகரிக்கும் போது நச்சுதன்மையையும் ஏற்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட தனிமச் செறிவின் போது, தாவரத்தின் உலர் எடையில் 10% திசு இழப்பு ஏற்பட்டால், அது நச்சுதன்மை அளவு எனக் கருதப்படுகிறது. படம் 12.2, தீர்வுகட்ட செறிவினைப் பற்றி விளக்குகிறது.
மாங்கனீசு செறிவு அதிகரிக்கும் போது இரும்பு மற்றும் மெக்னீசியத்தை எடுத்துக்கொள்ளும் திறனைத் தடுக்கிறது. மேலும் கால்சியம் தண்டின் நுனிப்பகுதிக்குக் கடத்தப்படுவதையும் தடுக்கிறது. இதன்மூலம் Fe, Mg மற்றும் Ca பற்றாக்குறை நோயை ஏற்படுத்துகிறது. மாங்கனீசு நச்சுதன்மையின் அறிகுறிகள் பழுப்பு புள்ளிகள் சூழ்ந்து பச்சையச் சோகையுடைய நரம்புகள் தோன்றுவதாகும்.
அலுமினியத்தின் நச்சுதன்மை காரணமாக நியூக்ளிக் அமிலமானது வீழ்படிகிறது, ATPயேஸ் நொதியின் செயல்பாடு தடைபடுகிறது. செல் பகுப்பை தடை செய்தல் மற்றும் பிளாஸ்மா சவ்வுடன் கால்மோடுலின் பிணைவதைத் தடுக்கிறது.
கனிமங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் கோட்பாடுகளுக்கு பாடம்-11 யைப் பார்க்கவும்.
இரும்பு மற்றும் மாங்கனீஸ் போட்டிப் பண்பை வெளிப்படுத்துகிறது. இதன் பற்றாக்குறை அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இரும்பு நச்சுத்தன்மை மாங்கனீஸ் உறிஞ்சுதலை பாதிக்கும். அதிக இரும்பு பிணைப்பு காரணிகள் பயன்படுத்தலும், மண்ணின் அமிலத்தன்மை அதிகரித்தலும் இரும்பு நச்சுத்தன்மை ஏற்பட இரும்பும் மாங்கனீசும் சமநிலை விகிதத்தில் உள்ள உரங்கள் பயன்படுத்தினால் இரும்பு மற்றும் மாங்கனீஸ் நச்சுத்தன்மையை தீர்க்கலாம்.