Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சிறப்பு வகை தாவர உணவூட்டம்
   Posted On :  06.07.2022 11:38 am

11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம்

சிறப்பு வகை தாவர உணவூட்டம்

1. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் 2. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஒட்டுண்ணி உணவூட்டம் 3. கூட்டுயிர் வாழ்க்கை உணவூட்டம் 4. பூச்சியுண்ணும் உணவூட்டம்

சிறப்பு வகை உணவூட்டம் (Special modes of nutrition)


உணவூட்டம் என்பது உயிரினங்கள் உணவை எடுத்துக் கொள்வது மற்றும் அதனைப் பயன்படுத்தும் முறையாகும். இரண்டு வகை உணவூட்டங்கள் முதன்மையானவை அவை முறையே தற்சார்பு உணவூட்டம் மற்றும் பிற சார்பு உணவூட்டம் ஆகும். 

தற்சார்பு உணவூட்டமானது, ஒளிச்சேர்க்கை (Photosynthetic) மற்றும் வேதிச்சேர்க்கை உணவூட்டம் (Chemosynthetic) என இருவகைப்படும். பிறசார்பு உணவூட்டமானது, சாறுண்ணி, ஒட்டுண்ணி, கூட்டுயிர் வாழ்க்கை, மற்றும் பூச்சியுண்ணி வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இப்பாடப் பிரிவில் சிறப்பு வகை உணவூட்டம் பற்றி நீங்கள் கற்க உள்ளீர்கள்.


1. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் (Saprophytic mode of nutrition in Angiosperms)


இறந்த மற்றும் மக்கிய உடல்களிலிருந்து உணவைப் பெறுவது சாறுண்ணி அல்லது மட்குண்ணி உணவூட்டம் எனப்படுகிறது. பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் சாறுண்ணி உணவூட்டத்திற்கான முதன்மை உயிரினங்களாகும்.

சில ஆஞ்சியோஸ்பெர்ம்களும் சாறுண்ணி வகை உணவூட்டத்தை மேற்கொள்கின்றன. எடுத்துக்காட்டு. நியோட்டியா (பறவைக்கூடு ஆர்க்கிடு). நியோட்டியாவின் வேர்களானது வேரி பூஞ்சைகளுடன் இணைந்து ஊட்டச்சத்துக்களை சாறுண்ணி போன்று எடுத்துக்கொள்கிறது.

மோனோட்ரோபா (இண்டியன் பைப்) அடர்ந்த காட்டில் மட்கிய உடலங்கள் மீது வளர்கிறது. இவை வேரி பூஞ்சைகளின் உதவியுடன் உணவை உள்ளெடுக்கின்றன (படம் 12.9). 

 


2. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஒட்டுண்ணி உணவூட்டம்:


ஓம்புயிர் தாவரங்களிலிருந்து உணவைப் பெற்று அவற்றிற்கு நோயை உண்டாக்கும் உணவூட்ட முறை ஒட்டுண்ணி உணவூட்டம் எனப்படும்.

அ . கட்டாய அல்லது முழு ஒட்டுண்ணி (Obligate or Total parasite):

இவ்வகை உணவூட்டத்தில் ஓம்புயிர் தாவரத்தை முழுமையாக தன் வாழ்க்கைக்காக ஒட்டுண்ணி சார்ந்திருக்கும். அத்துடன் ஹாஸ்டோரியம் எனும் உறிஞ்சு உறுப்பை உருவாக்குகிறது.

(i) முழு தண்டு ஒட்டுண்ணி (Obligate stem parasite): கஸ்குட்டா (டோடர்) வேர் இல்லாத ஒரு இலைகளற்ற தாவரம். இதன் முழுத் தண்டும் ஓம்புயிரி (இலந்தை, சிட்ரஸ் மற்றும் பிற) தாவரங்கள் மேல் படர்ந்து ஹாஸ்டோரியங்களை உருவாக்குகிறது.

(ii) முழு வேர் ஒட்டுண்ணி (Obligate root parasite): தண்டு அச்சைப் பெற்றிராது பிற ஓம்புயிரி தாவரங்களின் வேர்களில் இருந்து நீரையும் உணவையும் பெற்று ஒட்டுண்ணியாக வாழ்ந்து ஹாஸ்டோரியங்களை உருவாக்கும் தாவரங்கள்.

எடுத்துக்காட்டு: ராஃப்ளெஸியா, ஒரபாங்கே மற்றும் பெலனோஃபோரா.

ஆ. பகுதி ஒட்டுண்ணிகள் (Partial Parasite) - இவ்வகை தாவரங்கள் பச்சையம் பெற்றிருப்பதால், கார்போஹைட்ரேட்டை தயாரிக்கக் கூடியவை, நீர் மற்றும் கனிமங்களுக்காக மட்டுமே இவை ஒம்புயிர் தாவரங்களைச் சார்ந்துள்ளன.

(i) பகுதி தண்டு ஒட்டுண்ணி : லொரான்தஸ் தாவரம் அத்தி மற்றும் மாமரத்தின் சைலத்திசுவிலிருந்து நீர் மற்றும் கனிம உப்புகளை ஹாஸ்டோரியத்தின் உதவியினால் உறிஞ்சுக் கொள்கிறது. எடுத்துக்காட்டு:

லொரான்தஸ், விஸ்கம் (மிஸ்ஸில்டோ).


(ii) பகுதி வேர் ஒட்டுண்ணி : நாற்று நிலையில் இதன் வேர்கள் பிற தாவரவேர்களின் மீது வளர்ந்து ஹாஸ்டோரியங்கள் உதவியுடன் நீரை உறிஞ்சுக் கொள்கிறது.

எடுத்துக்காட்டு: சாண்டலம் ஆல்பம் (சந்தன மரம்) (படம் 12.10).

 

3. கூட்டுயிர் வாழ்க்கை உணவூட்டம்:


அ. லைக்கன்கள் (Lichens): ஆல்காக்களும் பூஞ்சைகளும் இணைந்த கூட்டுயிர் வாழ்க்கையாக இது உள்ளது. ஆல்காக்கள் உணவை தயாரிப்பதற்கும் பூஞ்சைகள் நீரை உறிஞ்சுவதற்கும் மற்றும் உடல் அமைப்பை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது.

ஆ. மைக்கோரைசா (Mycorrhizae) (வேரி பூஞ்சைகள்): பூஞ்சைகளும் உயர்தாவர வேர்களும் இணைந்த கூட்டுயிர் வாழ்க்கையாக இது உள்ளது. எடுத்துக்காட்டு. பைனஸ் என்ற ஜிம்னோஸ்பெர்ம் தாவரம்.

இ. ரைசோபியம் மற்றும் லெகூம் கூட்டுயிர் வாழ்க்கை (Rhizobium and Legumes): இந்த கூட்டுயிர் வாழ்க்கை நைட்ரஜன் நிலைநிறுத்தத்திற்கு உதவுகிறது

ஈ சயனோ பாக்டீரியா மற்றும் பவள வேர்கள் (Cyanobacteria and Coralloid roots): இந்த கூட்டுயிர் வாழ்க்கை சைகஸ் தாவரத்தில் காணப்படுகிறது. இதன் பவளவேர்களில் சையனோபாக்டிரியங்கள் (நாஸ்டாக்) கூட்டுயிர் வாழ்க்கை செய்கின்றன (படம் 12.11).



4. பூச்சியுண்ணும் உணவூட்டம் (Insectivorous mode of Nutrition)


நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள இடங்களில் இவ்வகை தாவரங்கள் பூச்சியுண்ணும் வளரியல்பை பெற்று நைட்ரஜன் பற்றாக்குறையை சரிசெய்ய பூச்சிகளின் உடலில் இருந்து நைட்ரஜன் சத்துக்களைப் பெறுகின்றன.

அ) நெப்பந்தஸ் (Pitcher plant): குடுவை என்பது இலையின் மாற்றுரு. இக்குடுவையினுள் செரிமான நொதிகளை உருவாக்கும் வளரிகள் உள்ளன. குடுவையின் வாய் விளிம்பில் தேன் சுரப்பிகள் காணப்படுவதோடு, குடுவையின் மூடி பகுதிபூச்சிகளைக் கவரும் வண்ணங்களும் காணப்படுகிறது. பூச்சிகள் குடுவையினுள் விழுந்தவுடன் புரத செரிமான நொதிகள் பூச்சிகளின் உடலை செரிக்க உதவுகிறது.

ஆ) ட்ரஸீரா (Drosera-Sundew plant): இவை நீண்ட தடித்த உணர் நீட்சிகளை கரண்டி வடிவ இலைகளில் பெற்றவை. இவை ஒட்டக்கூடிய செரிமான திரவத்தை சுரந்து, பூச்சிகளை ஈர்க்கிறது. இது பார்ப்பதற்கு சூரிய பனித்துளி போன்று உள்ளது.

இ) யுட்ரிகுலேரியா (Bladderwort): இது ஒரு நீரில் மூழ்கி காணப்படும் தாவரம். இவற்றின் இலைகள் பை போன்று மாற்றுரு அடைந்து பூச்சிகளை சேகரித்து செரிக்க செய்கிறது.

ஈ) டயோனியா (Venus fly trap): இவற்றின் இலைகள் வண்ணமயமான பொறியாக மாற்றமடைந்துள்ளது. இரண்டு மடல்களுடைய இலைகளின் உள்ளே உணர் இழைகள் காணப்படும். பூச்சிகள் உணர் இழைகளை தொட்டவுடன் இலைகள் மூடி அவை சிறைப்படுகின்றன (படம் 12.12).

 

உங்களுக்குத் தெரியுமா?

லைக்கன்கள் :

சல்பர்டை ஆக்ஸைடு (SO2) காற்று மாசுபடுதலை காட்டும் மாசு காட்டியாக உள்ளது. வறள் தாவரபடிநிலை வளர்ச்சியில் முதல் தோன்றும் முன்னோடி தாவரமாக லைக்கன்கள் உள்ளன.

 

நீங்கள் கற்றதை சோதித்தறிக.

நைட்ரோஜினேஸ் நொதியினை ஊக்குவிப்பதற்கு X என்ற கனிமம் தேவைப்படுகிறது. சர்க்கரை இடப்பெயர்ச்சியில் Y என்ற கனிமம் பங்குபெறுகிறது. மேலும் Z என்ற கனிமம் ரைபோசோம் அமைப்பை நிலைநிறுத்துகிறது. X,Y,Z கனிமங்களை கண்டறிக.

11th Botany : Chapter 12 : Mineral Nutrition : Special modes of plant nutrition in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம் : சிறப்பு வகை தாவர உணவூட்டம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம்