இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மாவட்ட நிருவாகம் | 3rd Social Science : Term 2 Unit 3 : District Administration
அலகு 3
மாவட்ட நிருவாகம்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
* மாவட்ட நிருவாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதனைப் புரிந்துகொள்வர்
* மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு துறைகள் பற்றிப் புரிந்துகொள்வர்
* மாவட்ட ஆட்சியரின் பொறுப்புகள் பற்றி அறிந்து கொள்வர்
காவேரி வீட்டில் தன் தந்தையுடன் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்து கொண்டிருக்கிறாள்.
அப்பா : மாவட்ட ஆட்சியர் கனமழையின் காரணமாக நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளார்.
காவேரி : ஆஹா ........!
பள்ளிகளுக்கு விடுமுறையா! மாவட்ட ஆட்சியர்......
மாவட்ட ஆட்சியர் என்பவர் யார் அப்பா ?
அப்பா : மாவட்ட ஆட்சியர் என்பவர், மாவட்ட நிருவாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர். ஒரு மாவட்ட நிருவாகம் முறையாகவும் அமைதியாகவும் செயல்பட காரணமானவர்.
காவேரி : அவர் மட்டுமே அனைத்தையும் கவனிப்பாரா?
அப்பா : இல்லை காவேரி, மாவட்ட மருத்துவ அலுவலர், காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் போன்ற துணை அதிகாரிகளும் மற்றும் இதர அலுவலர்களும் மாவட்ட ஆட்சியருக்கு உதவுகிறார்கள். இத்தகைய தலைமைப் பொறுப்பாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பாகின்றனர். அவர்கள் அனைவரும் மாவட்ட நிருவாகத்தின் அங்கமாவர். இருந்தபோதிலும் மாவட்ட ஆட்சியரே அனைத்து துறைகளும் நன்கு செயல்பட முழு பொறுப்பானவர். மேலும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதனையும் உறுதிபடுத்திக் கொள்வார்.
நாம் அறிந்து கொள்வோம்.
மருத்துவ அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு பொறுப்பாளர்கள் ஆவர். அவர்கள் சுகாதாரத்தைப் பற்றியும், உடல் நலத்தைப் பற்றியும் அறிவுரை வழங்குவார்கள்.
சிந்தனை செய்
காவலர்களின் சில கடமைகளைக் கூறுக.
❖ திருடர்களிடமிருந்து மக்களைக் காத்தல்.
❖ சாலை விபத்துகளிலிருந்து மக்களைப் பாதுகாத்தல்.
❖ வாகனங்களின் போக்குவரத்தை முறைப்படுத்துதல்.
❖ சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல்.
நாம் அறிந்து கொள்வோம்.
காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்டத்தின் காவல் துறைக்குப் பொறுப்பாளர் ஆவார். இவர் மாவட்டச் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கிறார். இவருக்கு ஆய்வாளர், துணை ஆய்வாளர் போன்றவர்கள் உதவுகிறார்கள்.
அவசர காலங்களில் காவல் துறையைத் தொடர்புகொள்ள 100 என்ற எண்ணைத் தொலைபேசியில் அழைக்கவும்
செயல்பாடு
நாம் எழுதுவோம்
விடுபட்ட இடங்களைக் குறிப்புகளைக் கொண்டு நிரப்புக.
* மாவட்டத்தின் நிருவாகத் தலைமை மாவட்டஆட்சியர்
* சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பவர் காவலர்
* உடல்நலம் குறித்த அறிவுரை வழங்குபவர் மருத்துவர்
* அறநெறிகளைப் போதிப்பவர் ஆசிரியர்
காவேரி : அப்பா, மாவட்ட ஆட்சியர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
அப்பா : இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் U.P.S.C (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்டத்தின் கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது.
நாம் அறிந்து கொள்வோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) மாநிலப் பொது சேவைப் பணியாளர்களை நியமிக்கிறது.
காவேரி : அப்பா, மாவட்ட ஆட்சியரைப் பற்றி மேலும் கூற முடியுமா?
அப்பா : மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் வருவாய் துறைக்கும் தலைவர் ஆவார்.
* மாவட்ட ஆட்சியருக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க காவல் துறை உதவுகிறது. காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இணங்க பணிபுரிவார். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த தகவல்களை அவ்வப்போது அளிப்பர்.
* மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்புகளான மாவட்ட வாரியம், கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிக் குழுக்கள் போன்றவற்றை மேற்பார்வையிடுவார்.
* இயற்கைப் பேரிடரின் (Natural disaster) போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார்.
* அரசின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பார்.
* நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதனை மாவட்ட ஆட்சியர் உறுதிபடுத்திக் கொள்வார்.
காவேரி : சரி அப்பா! நான் இவ்விவரங்களை என் வகுப்பில்
பகிர்ந்து கொள்வேன். என் ஆசிரியரிடம் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் நமது மாவட்டத்தைப் பற்றிய விவரங்களை மேலும் அறிந்து கொள்வேன்.
கலைச் சொற்கள்
Natural disaster: இயற்கைப் பேரிடர்
Personnel : பணியாளர்கள்
செயல்பாடு
நாம் எழுதுவோம்
சரியா / தவறா எழுதுக.
* மாவட்ட ஆட்சியர் இயற்கைப் பேரிடரின் போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார். ( சரி )
* மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சிஅமைப்புகளை மேற்பார்வையிடமாட்டார். ( தவறு )
* காவல்துறைக் கண்காணிப்பாளர் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யமாட்டார். ( சரி )
* மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளின் தலைமைகளோடு இணைந்து மாவட்ட நிருவாகம் அமைதியாக நடைபெற பணியாற்றுவார். ( சரி )
மீள்பார்வை
* மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிருவாகத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பார்.
* மாவட்டம் நன்கு செயல்பட மாவட்ட ஆட்சியர் பொறுப்பாளர் ஆவார்.
* மாவட்ட நிருவாகம் என்பது காவல்துறை, மருத்துவத்துறை, வனத்துறை மற்றும் கல்வித்துறை போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
* மாவட்ட ஆட்சியர் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க காவல்துறையின் உதவியை நாடுவார்.
* இயற்கைப் பேரிடரின் போது, மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கைகள் எடுப்பார்.