பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஐரோப்பா | 6th Social Science : Geography : Term 3 Unit 1 : Asia and Europe

   Posted On :  05.07.2023 12:39 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா

ஐரோப்பா

உலகின் பரப்பளவில் ஐரோப்பா ஆறாவது பெரிய கண்டமாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இது பல்வேறுபட்ட நிலத்தோற்றங்களையும், பல வகையான மக்களையும் கொண்டது. இக்கண்டம் மேற்கத்திய நாகரிகங்கள், (கிரேக்க, ரோம நாகரிகங்கள்) மக்களாட்சி மற்றும் தொழிற் புரட்சி ஆகியவற்றின் பிறப்பிடமாகும். இவ்வுலகில் மிகுந்த வளர்ச்சியடைந்த கண்டமாக இது திகழ்கின்றது. இக்கண்டத்தைப் பற்றிச் சற்று ஆராய்வோம்.

பகுதி ஆ

ஐரோப்பா

உலகின் பரப்பளவில் ஐரோப்பா ஆறாவது பெரிய கண்டமாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இது பல்வேறுபட்ட நிலத்தோற்றங்களையும், பல வகையான மக்களையும் கொண்டது. இக்கண்டம் மேற்கத்திய நாகரிகங்கள், (கிரேக்க, ரோம நாகரிகங்கள்) மக்களாட்சி மற்றும் தொழிற் புரட்சி ஆகியவற்றின் பிறப்பிடமாகும். இவ்வுலகில் மிகுந்த வளர்ச்சியடைந்த கண்டமாக இது திகழ்கின்றது. இக்கண்டத்தைப் பற்றிச் சற்று ஆராய்வோம்.


அமைவிடம்

ஐரோப்பா கண்டம் 34°51' அட்சத்திலிருந்து 81°47' வடஅட்சம் வரையிலும், 24° 33' மேற்கு தீர்க்கக்கோட்டிலிருந்து 69° 03' கிழக்கு தீர்க்கம் வரை பரவியுள்ளது. முதன்மை தீர்க்க ரேகையான O°தீர்க்கரேகை இங்கிலாந்திலுள்ள கிரீன்விச் வழியே கடந்து செல்கின்றது. ஐரோப்பா கண்டம் 10.5 மில்லியன் ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. இது வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இக்கண்டம் வடக்கே ஆர்டிக் பெருங்கடல், தெற்கில் கருங்கடல் மற்றும் மத்தியதரைக்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கே யூரல் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு மிகப்பெரிய தீபகற்பம் போன்று தோற்றமளிக்கின்றது.

 

உயர்சிந்தனை வினா

ஐரோப்பா கண்டம் தீபகற்பங்களின் தீபகற்பம்' என அழைக்கப்படுவது ஏன்?

 

உங்களுக்கு தெரியுமா?

ஐரோப்பிய ஒன்றியம்: ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்பது 28 உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுமமாகும். இது தனக்கென ஒருதனி கொடியும், பொதுவான நாணய (யூரோ) மதிப்பும் (€) கொண்டது.


 

தகவல் பேழை

நெதர்லாந்து: நெதர்லாந்தில் சுமார் 25 சதவீத நிலப்பரப்பு கடல் மட்டத்திற்குக் கீழாகக் காணப்படுகின்றது. எனவே டைக் (dikes) எனப்படும் பெருஞ்சுவர்களை எழுப்பியுள்ளனர். இந்த டைக்குகளினால் கடலிலிருந்து நிலத்தை மீட்டெடுத்துள்ளனர். கடலிலிருந்து மீட்டெக்கப்பட்ட இந்நிலங்கள் 'போல்டர்கள்' என அழைக்கப்படுகின்றன.


 

இயற்கைப் பிரிவுகள்

ஐரோப்பா, மலைகள், சமவெளிகள், பீடபூமிகள், தீபகற்பங்கள், விரிகுடா, தீவுகள் மற்றும் ஆற்றுப்படுகைகள் ஆகிய பல்வேறுபட்ட இயற்கை பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது நான்கு பெரும் இயற்கை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. வடமேற்கு உயர்நிலங்கள்

2. மத்திய பீடபூமிகள் / உயர்நிலங்கள்

3. ஆல்பைன் மலைகள்

4. வட ஐரோப்பியச் சமவெளிகள்

 

1. வடமேற்கு உயர்நிலங்கள்

இப்பிரதேசம் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மலைகள் மற்றும் பீடபூமிகளை  உள்ளடக்கியது. இது மிக அழகிய பிளவுபட்ட (fiord) கடற்கரையினைக் கொண்டது. இக் கடற்கரைகள் கடந்த காலங்களில் நடைபெற்ற உருவானவை ஆகும். பனியாறுகளினால் இப்பகுதியில் ஏரிகள் அதிகமாக உள்ளன. இந்த ஏரிகள் நீர்தேக்கங்களாகவும் செயல்படுவதால், அவற்றிலிருந்து நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகிலேயே, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நீர் மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன.

தகவல் பேழை

ஃபியார்ட் (fiord) (பிளவுபட்ட கடற்கரை) செங்குத்தான ஓங்கல் அல்லது மலைகளுக்கிடையே(பனியாற்றுச் செயல்பாடுகளின் காரணமாக) உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை எனப்படும்.

பின்வரும் வழிகளில் பயன்படுகிறது

1 இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைக்கின்றன

2. கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன. எனவே இப்பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது.



2. மத்திய பீடபூமிகள்

பீடபூமிகள் மத்திய ஐரோப்பாவின் குறுக்கே கிழக்கு மேற்கு திசையில் பரவிக் காணப்படுகின்றன. டேன்யூப், வோல்கா மற்றும் டாகஸ் போன்ற பல ஐரோப்பிய ஆறுகள் இப்பீடபூமியில் உற்பத்தியாகின்றன. இப்பகுதியில் காணப்படும் முக்கிய பீடபூமிகளான, பென்னைன்ஸ் (இங்கிலாந்து), மெஸட்டா (ஸ்பெயின்), மத்திய மேசிப் மற்றும் ஜுரா (பிரான்ஸ்) கருங்காடுகள் (ஜெர்மனி) போன்றவற்றில் கனிம வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. பென்னைன்ஸ் இங்கிலாந்தின் முதுகெலும்பு என அழைக்கப்படுகின்றது.


உங்களுக்கு தெரியுமா?

கருங்காடுகள் : கருத்த நிறமுடைய, செழித்து வளரும் அத்தி மற்றும் பைன் மரங்கள் இப்பகுதிக்குக் கருமை நிறத்தை அளிக்கின்றன.

 

3.ஆல்பைன் மலைத் தொடர்

ஆல்பைன் மலைத்தொடர் தெற்கு ஐரோப்பிய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான இளம் மடிப்பு மலைகள் ஆகும். அங்குக் காணப்படும் முக்கிய மலைத்தொடர்கள் சியாரா நெவேடா, பைரினீஸ், ஆல்ப்ஸ், அப்னின்ஸ், டினாரிக் ஆல்ப்ஸ், காகசஸ் மற்றும் கார்பேதியன் மலைத்தொடர்கள் ஆகும். பைரனீஸ் மலைகள் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் இயற்கை எல்லையாக விளங்குகின்றன. ஐரோப்பாவின் மிக உயரமான சிகரம் காகசஸ் மலைத்தொடரிலுள்ள எல்ப்ராஸ் சிகரமாகும் (5645மீ) ஆல்ப்ஸ் மலையில் உள்ள மாண்ட் பிளாங்க் (4807மீ) சிகரம் ஆல்பைன் மலைத் தொடரில் காணப்படும் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமாகும். ஆல்பைன் மலைத்


தொடரில் பல செயல்படும் எரிமலைகள் உள்ளன. எட்னா, வெசூவியஸ் மற்றும் ஸ்ட்ரோம்போலி எரிமலைகள் ஐரோப்பாவில் காணப்படும் முக்கிய எரிமலைகளாகும். இப்பிரதேசத்தில் நிலநடுக்கங்கள் சாதாரணமாக நிகழும். ஸ்ட்ரோம்போலி எரிமலை 'மத்திய தரைக்கடல் பகுதியின் கலங்கரை விளக்கம்' என்றழைக்கப்படுகின்றது.

உங்களுக்கு தெரியுமா?

மேட்டர்ஹார்ன் : பிரமிடு வடிவத்தில் காணப்படும் மேட்டர்ஹார்ன் மலை சுவிஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 4478மீ ஆகும். இம்மலை இதன் வடிவத்திற்குப் புகழ் பெற்றதாகும்.


 

4. வட ஐரோப்பிய சமவெளி

வட ஐரோப்பிய சமவெளி மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து கிழக்கில் யூரல் மலைகள் வரை பரந்து காணப்படுகின்றது. வடக்கில் இச்சமவெளி பால்டிக் கடலாலும், தெற்கில் ஆல்பைன் மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. இது மேற்கில் குறுகியதாகவும் கிழக்கில் விரிந்தும் காணப்படுகின்றது. செயின், ரைன், டேன்யூப் மற்றும் டான் ஆகிய முக்கிய ஐரோப்பிய ஆறுகள் இச்சமவெளியில் குறுக்கு நெடுக்காக ஓடி தங்கள் வண்டலைப் படிய வைக்கின்றன.

அண்டலூசியா, ஹங்கேரியன் மற்றும் வாலச்சியன் ஆகிய சமவெளிகளும் இங்குக் காணப்படுகின்றன. இங்கு இரும்புத் தாது மற்றும் நிலக்கரி செறிந்துள்ளன. வட ஐரோப்பிய சமவெளியில் மக்கள் தொகை மிக அடர்ந்து காணப்படுகின்றது. பாரிஸ், மாஸ்கோ மற்றும் பெர்லின் ஆகிய நகரங்கள் இங்கு அமைந்துள்ளன.

 

வடிகால் அமைப்பு

ஐரோப்பாவின் வளர்ச்சியில் அதன் ஆறுகள் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. இவ்வாறுகள் வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியினையும், மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகின்றன.


பெரும்பான்மையான ஆறுகள் ஆல்ப்ஸ் மலைகள் மற்றும் மத்திய பீடபூமி ஆகியவற்றில் உருவாகின்றன. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் உள்நாட்டு நீர்ப்போக்குவரத்திற்கு இவ்வாறுகள் பெரிதும் உதவுகின்றன. வோல்கா ஆறு ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு ஆகும். டேன்யூப் ஆறு

ஐரோப்பாவின் பத்து நாடுகள் வழியாகப் பாய்கின்றது.


உயர் சிந்தனை வினா

ஐரோப்பிய ஆறுகள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கு உகந்ததாக உள்ளன. ஏன்?

 

காலநிலை

ஐரோப்பிய காலநிலை மிதவெப்ப மண்டல காலநிலை முதல், துருவ காலநிலை வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. தென்பகுதியில் காணப்படும் மத்தியதரைக் கடல் பகுதி காலநிலை மிதமான கோடைகாலமும், குளிர்கால மழையையும் கொண்டதாகும். வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் பொதுவாக மிதமான, ஈரக் காலநிலையைக் கொண்டதாகும். மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் காலநிலை ஈரப்பதம் வாய்ந்த கண்டகாலநிலை ஆகும். துணை துருவ மற்றும் நூந்திரக் காலநிலை வடகிழக்கில் காணப்படுகின்றது அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து வீசுகின்ற மேற்கத்திய காற்றுகளின் மிதமான தாக்கத்திற்கு ஐரோப்பா முழுவதும் உட்படுகின்றது.

காலநிலை பிரிப்பான் : ஆல்ப்ஸ் மலைதொடர் மத்தியத் தரைகடல் ஐரோப்பாவில் காணப்படும் குளிர்ந்த காலநிலையையும் வட காலநிலையும் பிரிக்கின்ற ஒரு அரணாக உள்ளது.

தகவல் பேழை

வடஅட்லாண்டிக் வெப்பக்கடல் நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிக்கு மிதமான வெப்பத்தை அளிக்கின்றது. மேலும் மேற்கத்திய காற்று ஐரோப்பா முழுவதும் வெப்பத்தைக் கடத்துகின்றது.

 

இயற்கைத் தாவரம்

ஐரோப்பாவின் இயற்கை தாவரம் ஐந்து வகைப்படும். அவையாவன:

1. தூந்திரம்

2. டைகா அல்லது ஊசியிலைக் காடுகள்

3. கலப்பினக் காடுகள்

4. மத்தியத் தரைக்கடல் காடுகள்

5. புல்வெளிகள்

ஆர்டிக் மற்றும் வட ஸ்காண்டினேவிய உயர்நிலங்கள் தூந்திர வகை இயற்கைத் தாவரங்களைக் கொண்டுள்ளன. இங்கு லிச்சன்ஸ் மற்றும் பாசி வகைகள் காணப்படுகின்றன.


தூந்திரப்பிரதேசத்தின் தெற்கில் அமைந்துள்ள நார்வே, சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் ஊசியிலை அல்லது டைகா காடுகள் காணப்படுகின்றன. இங்கு பைன், ஃபிர், ஸ்புரூஸ் மற்றும் லார்ச் போன்ற முக்கிய மரவகைகள் காணப்படுகின்றன.

பிர்ச், பீச், பாப்லர், ஓக் மற்றும் மேபிள் மரங்களைக் கொண்ட கலப்பினக் காடுகள் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்சின் மேற்குப்பகுதி, பெல்ஜியம், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. மத்தியத் தரைக்கடல் பகுதி மரங்களான சைப்ரஸ், கார்க், ஓக், ஆலிவ் மற்றும் செடார் ஆகியன மத்தியத் தரைக்கடலின் எல்லைப்பகுதிகளில் காணப்படுகின்றன. புல்வெளிகள் (ஸ்டெப்பி) கிழக்கு ஐரோப்பாவில் காணப்படுகின்றன.

 

ஐரோப்பாவின் வள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும்

கிடைக்கப்பெறும் வளங்கள், ஆற்றலுடைய படித்த வேலையாட்கள், ஆராயும் தன்மை, மற்ற நாடுகளுடனான தொடர்பு, புதுமையை நாடுதல் ஆகியவை ஐரோப்பாவை ஒரு புதுமை வாய்ந்த, பொருளாதார முன்னேற்றமடைந்த கண்டமாக மாற்றியுள்ளது.

ஐரோப்பா, தொழில்துறையில் வளர்ச்சியடைந்த ஒரு கண்டமாக இவ்வுலகில் திகழ்கின்றது. இது நில அமைப்பு, காலநிலை மற்றும் மண் ஆகியவற்றில் வேறுபட்டு காணப்படுகிறது. இவை ஒன்றுடன் ஒன்று இடைவினை ஆற்றுவதால் மத்தியதரைப் பகுதி வேளாண்மை, பால் பண்ணை, கலப்புக் கால்நடை வளர்ப்பு, பயிர் வளர்ப்பு மற்றும் தோட்டப் பயிர் வேளாண்மை ஆகிய பல்வேறு வகையான வேளாண் முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.


ஐரோப்பா முழுவதும் காணப்படும் முதன்மையான பயிர் கோதுமை ஆகும். பார்லி, ஓட்ஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ரை, உருளைக்கிழங்கு, கால்நடை தீவன புற்கள் ஆகியன பொதுவாக விளையும் பயிர்களாகும். மேலும் மக் காச்சோளம் டேன்யூப் தாழ்நிலங்கள், தென்மேற்கு ஐரோப்பிய ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் விளையும் முக்கியப் பயிராகும். நெல்(வடஇத்தாலி) சிட்ரஸ் பழங்கள், ஆலிவ் மரங்கள் (ஸ்பெயின், சிசிலி) போன்றவை நீர்ப்பாசன வசதியுடன் விளைவிக்கப்படுகின்றன.

வடக்கில் அமைந்துள்ள நாடுகள் பெரும்பாலும் ஓட்ஸ் போன்ற தானியங்களை விளைப்பதோடு, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை தொழிலிலும் அதிக கவனம் செலுத்துகின்றன.


கலப்புமுறை விவசாயம் மற்றும் சிறப்பான பயிர் சுழற்சி முறைகள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் திராட்சை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய ரஷ்யா, உக்ரைன் பெலாரஸ் ஆகிய நாடுகள் தொழிற்பயிர்களான ஆளி விதை, சணல் போன்ற நார்ப்பயிர்கள் (hemp), சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை மிக அதிகமாக விளைவிக்கின்றன. பெலாரஸ், பல்கேரியா, இத்தாலி மற்றும் மாசிடோனியன் கிரீஸ் ஆகிய இடங்களில் புகையிலை விளைவிக்கப்படுகின்றது.


ஐரோப்பிய ரஷ்யா, சுவீடன், பின்லாந்து ஆகியன மென்மரங்கள் மற்றும் கடினமரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. நார்வே, ஐஸ்லாந்து, ரஷ்யா, டென்மார்க், ஐக்கிய பேரரசு, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் மீன் பிடித்தல் மிகப் பெரிய தொழிலாக நடைபெறுகின்றது. வட கடலிலுள்ள டாகர் திட்டு (Dogger Banks) ஐரோப்பாவின் மிக முக்கிய மீன்பிடித்தளமாக விளங்குகின்றது.


தொழில்கள்

உலகின் எஃகு மற்றும் இரும்புத்தாது ஆகியவைகளைக் கணிசமான அளவில் ஐரோப்பா உற்பத்தி செய்கின்றது. கப்பல் கட்டுதல், மோட்டார் வாகனங்கள், விமானம் தயாரித்தல் ஆகிய தொழில்கள் ஐரோப்பா முழுவதும் காணப்படுகின்றன. மேலும் ஐரோப்பா, மருந்து வகைகளை மிக அதிக அளவில் உற்பத்தி செய்கின்றது.

ஐரோப்பா முழுவதும் சிறுதொழிலகங்கள் (நிலைத்த தன்மையற்ற பொருட்களைத் தயாரிப்பவை) பரவிக் காணப்படுகின்றன. சில நாடுகள் தங்கள் நாட்டுக்கென சிறப்பம்சம் பொருந்திய பொருட்களைக் தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்குகின்றன. இங்கிலாந்து, இத்தாலி மற்றும் டச்சு மிதிவண்டிகள், சுவீடன் மற்றும் பின்லாந்து கண்ணாடிகள், பாரிஸ் வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மேலும் சுவிஸின் துல்லியமான கருவிகள் போன்றவை இதில் அடங்கும்.

 

ஐரோப்பாவின் கலாச்சாரக் கலவை

ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து  உலகின் மூன்றாவது மிக அதிக மக்கள்தொகையைக் கொண்டது ஐரோப்பா ஆகும். 2018 ஆம் ஆண்டில் 742 மில்லியனாக இருந்த ஐரோப்பாவின் மக்கள்தொகை, உலக மக்கள் தொகையில் 9.73 சதவிகிதமாகக் காணப்பட்டது. ஐரோப்பிய மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 34 நபர்கள் ஆகும். அதிக மக்கள் அடர்த்தி ஐரோப்பிய நிலக்கரி சுரங்கங்களுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. சுரங்கத்தொழில், உற்பத்தி தொழில்கள், வர்த்தகம், பெரும் சந்தைகளாகச் செயல்படுதல், மனிதவளம் மற்றும் வேளாண் உற்பத்தி ஆகியன மக்கள்தொகை மிகுந்து காணப்படக் காரணமாக அமைகின்றன. மொனாக்கோ, மால்டா, சான் மரினோ மற்றும் நெதர்லாந்து ஆகியன் மிகுந்த மக்கள் அடர்த்தியைக் கொண்ட நாடுகளாகும். ஐஸ்லாந்து மற்றும் நார்வே ஆகியன மிகக்குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. பொதுவாக மலைப்பாங்கான பகுதிகள், சில உயர்நிலங்கள், ஸ்பெயின் நாட்டின் மிக வறண்ட பகுதிகள் மற்றும் ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசங்கள் ஆகியன மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. ஐரோப்பாவில் உள்ள மொனாக்கோ நாட்டில்தான் உலகிலேயே அதிக மக்கள் அடர்த்தி காணப்படுகின்றது. (26,105 நபர்கள் / ச.கி.மீ). ஐஸ்லாந்து மிக குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடாகும் (3 நபர்கள் / ச. கி.மீ).

 

சமயம் மற்றும் மொழி

ஐரோப்பா கண்டம் மொழி மற்றும் கலாச்சாரங்களில் மிகுந்த வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகின்றது. ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்ச்சுகீசு, பிரெஞ்சு, இத்தாலியன் மற்றும் ஸ்லோவிக் மொழிகள் ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். ஐரோப்பாவின் முதன்மை சமயம் கிருத்துவம் ஆகும். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்களும் இக்கண்டத்தில் பரவிக் காணப்படுகின்றனர். இங்கு வாழும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் காகசாய்டு இனத்தவர் ஆவார்.

 

கலை மற்றும் கட்டடக்கலை

ஐரோப்பிய கலை மற்றும் கட்டடக்கலை சாதாரண மனிதனை உலகறிய செய்துள்ளது. அஃது உலகெங்கும் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. அக்ரோபோலிஸ், கோலோசியம், டேவிட் சிலை, சிந்திப்பவர் சிலை, ஈபிள் கோபுரம், பிக் பென் கடிகாரம், பைசா கோபுரம் மற்றும் மோனாலிசா ஆகியன ஐரோப்பிய கலை மற்றும் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.



 

உணவு மற்றும் திருவிழாக்கள்

ரொட்டி, மீன், இறைச்சி, உருளைக் கிழங்கு மற்றும் பால் பொருட்கள் ஐரோப்பாவின் பிரதான உணவுப் பொருட்களாகும். ஐரோப்பியர்கள் சமய திருவிழாக்கள், விடுமுறை நாட்கள் ஆகிய இரண்டையும் கொண்டாடுகின்றனர்.


கிறிஸ்மஸ், ஈஸ்டர், புனித வெள்ளி, புனிதர்கள் நாள், ரெடன் டோர், தக்காளி மற்றும் கார்னிவல் ஆகியன ஐரோப்பாவின் முக்கிய பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களாகும். பனிச்சறுக்கு, ரக்பி, கால்பந்து, கூடைப்பந்து மற்றும் ஐஸ் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் இங்குப் புகழ் பெற்றவை. ஸ்பெயின் நாட்டின் எருதுச்சண்டை உலகப்புகழ் பெற்ற விளையாட்டாகும்.

 

ஆசியா மற்றும் ஐரோப்பா - ஓர் ஒப்பீடு

ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் புவியியல் அமைப்பினால் ஒன்றுபட்டும், அரசியல் பிரிவுகளால் பிரிக்கப்பட்டும் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய தீபகற்பமாக ஐரோப்பா திகழ்கின்றது. ஆசியாவின் ஆசியாவின் இமயமலையும், ஐரோப்பாவின் ஆல்ப்ஸ்மலையும் ஒரேபுவியியல் காலகட்டத்தில் தோன்றியவை. ஸ்டெப்பி புல்வெளிகளும், ஊசியிலைக் காடுகளும் பல நூறு கிலோமீட்டர், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை பரவிக் காணப்படுகின்றன. இவ்விரு கண்டங்களிலும் சமவெளிகள் வடக்குப்பகுதியிலும், மலைகள் தெற்குப் பகுதியிலும் காணப்படுகின்றன.ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் பண்டைய நாகரிகங்கள் தோன்றிய இடங்களாகும். பண்டைய காலம் முதலே இவ்விரு கண்டங்களும் நறுமணப் பாதை மற்றும் பட்டுப்பாதை மூலம் வணிகத்தொடர்பு கொண்டிருந்தன. புவியியல் அமைப்பில் இவை இரண்டும் பலவகைகளில் ஒன்றுபட்டுக் காணப்பட்டாலும் இவ்விரண்டு கண்டங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேற்றுமைகளும் காணப்படுகின்றன.


Tags : Term 3 Unit 1 | Geography | 6th Social Science பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 3 Unit 1 : Asia and Europe : Europe Term 3 Unit 1 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா : ஐரோப்பா - பருவம் 3 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா