விலங்கியல் - பரிணாமம் :பாடச்சுருக்கம் | 12th Zoology : Chapter 6 : Evolution
பாடச்சுருக்கம்
பரிணாம உயிரியல் என்பது பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரின வகைகளின் வரலாறு குறித்து படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும். உலகம் எவ்வாறு தோன்றியது? உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின? இந்தப் பேரண்டப் பெருவெளியில் மனித இனத்தின் முக்கியத்துவம் என்ன? ஆகியவை நம் மனதில் எழும் முக்கிய வினாக்கள் ஆகும். இந்தப் பாடத்தில் உயிரினத் தோற்றம் குறித்த பல்வேறு கோட்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. பரிணாம் நிகழ்ச்சிக்கான முக்கிய சான்றுகளாகிய புதைபடிவங்கள், கருவியல், புறத்தோற்றவியல், மூலக்கூறு உயிரியல் ஆகியவை பொதுவான மூதாதையிலிருந்து உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்குகின்றன.
லாமார்க், டார்வின் மற்றும் ஹியூகோ-டிவிரிஸ் ஆகியோரால் முன் வைக்கப்பட்ட பரிணாமக் கோட்பாடுகள் சிக்கலான பரிணாம நிகழ்ச்சியை விளக்குகின்றன. புவியியற்கால அட்டவணையில் உள்ள பல்வேறு பெருங்காலங்கள், பருவங்கள் மற்றும் சிறுகாலங்கள் அந்தந்தக் காலங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த சிற்றினங்கள் குறித்த விபரங்களை அளிக்கிறது. மரபணு மற்றும் மரபணுவாக்க நிகழ்வெண்களின் கணித முறையிலான பரவல், சிறிய சிற்றினத் தொகுதிகளில் மாறாமல் சமநிலையில் உள்ளன என ஹார்டி மற்றும் வீன்பெர்க் (1608) தெரிவித்துள்ளனர். இயற்கைத் தேர்வு மற்றும் மரபணுகுழுமம் ஆகிய காரணிகள் ஹார்டி - வீன்பெர்க் சமநிலையைப் பாதிக்கின்றன.
மனித இனம் பிரைமேட்டுகளிலிருந்து அல்லது மனிதக் குரங்கு போன்ற மூதாதையிலிருந்து தோன்றியிருக்கலாம் என மனிதப் பரிணாமவியல் தெரிவிக்கிறது. மனிதக்குரங்கு மற்றும் நஞ்சுக்கொடி பாலூட்டியிலிருந்து மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ்) தனித்த இனமாகத் தோன்றியதும், அவற்றின் மூளை அளவு, உணவுப் பழக்கம் மற்றும் பிற பண்புகளில் உள்ள ஒற்றுமை ‘ஒரு தனி உயிரியின் கரு வளர்ச்சி அதன் இன வரலாற்றைப் தொகுத்துரைக்கிறது’ என்பதனை நிரூபிக்கிறது.
ஒரு இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்கள் சிறுபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் மரபியல் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உயிரினத் தனிமைப்படுத்துதல் முறைகள் மற்றும் சிற்றினமாக்கல் நிகழ்ச்சி, வெவ்வேறு சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கிடையே அகக்கலப்பு நடைபெறுவதைத் தடுக்கிறது. உயிரினங்கள் மறைவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் இப்பாடப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.