பரிணாமம் - விலங்குகள் மரபற்றுப்போதல் | 12th Zoology : Chapter 6 : Evolution
விலங்குகள் மரபற்றுப்போதல்
விலங்கினங்கள் மரபற்றுபோதல் பொதுவானதும் தவிர்க்க இயலாததும் ஆகும். ஏனெனில் சில சிற்றினங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் பெரிய அளவிலான அல்லது விரைவான மாறுதல்களுக்கேற்ப எப்போதும் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியாது. மரபற்றுப் போதலின் தாக்கத்தை மூன்று நிலைகளில் அறியலாம்.
அட்டவணை 6.2 - கேம்ப்ரியன் காலத்திலிருந்து ஏற்பட்ட பெருந்திரளாக மரபற்றுப்போன ஐந்து நிகழ்வுகளின் விவரம்
சிற்றினம் மரபற்றுப்போதல் என்பது சுற்றுச்சூழலில் ஏற்படும் (வெள்ளம் போன்ற) நிகழ்வின் காரணமாகவும் அல்லது நோய் அல்லது உணவு பற்றாக்குறை போன்ற உயிரியல் காரணங்களாலும் ஒரு சிற்றினம் முழுமையாக நீக்கப்படுவதாகும்.
பெருந்திரள் மரபற்றுப்போதல் ஒருநிலப்பரப்பு அல்லது சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் எரிமலை வெடிப்பு போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் அழிந்து போகின்றன. கேம்பிரியன் பருவத்திலிருந்து ஐந்து முக்கிய பெருந்திரள் மரபற்றுப்போதல் நிகழ்ந்துள்ளன. இவை K-T மறைவு (கிரட்டேஷியல் - டெர்ஷியரி மறைவு) என அழைக்கப்படுகின்றன. இதனை அட்டவணை 6.2ல் காணலாம்.
K-T மறைவு என்பது ஜெர்மானியச் சொற்களான கிரட்டேஷியஸ் மற்றும் டெர்ஷியரி பருவங்களைக் குறிக்கும்.
உலக அளவில் மரபற்றுப்போதல் பெருமளவிலான சிற்றினங்கள் அல்லது பெரிய வகைப்பாட்டுக் குழுக்கள், கண்டங்கள் அளவில் அல்லது உலக அளவில் மரபற்றுப் போகின்றன. உறைபனி உலகம் அல்லது CO2 அளவு அதிகரித்ததன் காரணமாக நிகழ்ந்த மரபற்றுப்போதல் ஆகிய நிகழ்வுகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இவ்வாறு மரபற்றுபோதலால் புதியவாழிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் பெரும்பான்மை அழிவிலிருந்து தப்பிய உயிரினங்கள் விரிந்து பரவிட ஏதுவாகிறது.