அரசியல் அறிவியல் - சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் | 12th Political Science : Chapter 12 : Environmental Concerns and Globalisation
சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்
கற்றலின் நோக்கங்கள்
* புவியின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் தேவையைப் புரிந்து கொள்ளல்.
* பன்மைத்துவம் கொண்ட சுற்றுச்சூழல் செயல் அமைப்புகளின் தோற்றம், வளர்ச்சி, முக்கியத்துவம் மற்றும் பங்களிப்பு ஆகியவன குறித்து அறிதல். பன்னாட்டுச் சுற்றுச்சூழல் அமைப்பின் மீதான இந்தியாவின் நிலையை மதிப்பிடல்.
* பூர்வக்குடி மக்கள், பூர்வக்குடி தன்மை மற்றும் பூர்வக்குடிகளின் உரிமைகள் ஆகிய கருத்துகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.
* குறிப்பாக இந்திய பொருத்தப்பாட்டில் வளர்ந்து வரும் உலகமயமாக்கலின் தாக்கம் குறித்து விளக்குதல்.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
இயற்கை மூல வளங்களை பராமரிப்பதில் தவறினால் எதுவும் சரியான வழியில் செல்லாது.
ஒரு உலகளாவிய தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில் மயமாக்குதலுக்குப் பிந்தைய அம்சமாகும். காடுகள் அழிப்பு, தொழிற்சாலை மாசு, பசுமைக்குடில் வாயு கசிவுகள், ஓசோன் படலத்தின் துளை, புவி வெப்பமாதல் மற்றும் கடல் மட்டம் தொடர்ந்து உயருதல் போன்றவை முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளாகவும் இவை உடனடியான தலையீடுகளைக் கோருவனவாகவும் இல்லாவிடில் மிக மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்க கூடியதாகவும் உள்ளன. ஐக்கிய நாடுகள் பொது அவை 1982இல் "இயற்கைக்கான உலக சாசனம்" என்ற பிரகடனத்தை வெளியிட்டது. அதில் ஒட்டுமொத்த மனித குலமும் இயற்கையின் அங்கம் எனவும், இயற்கையைச் சார்ந்தே வாழ்க்கை அமைகிறது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வளம் குன்றா வளர்ச்சி என்ற கருத்துருவின் அடிப்படையிலேயே சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த தற்கால விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழல் மாசுவைத் தடுக்க உயிர் பன்மையத்தை பராமரித்தல், சதுப்பு நிலப்பகுதிகளை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றிக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றன. உலக அளவில் உலக சுற்றுச்சூழல் ஆளுகையின் அரண் காப்பாளராக ஐக்கிய நாடுகள் அவை செயல்படுகிறது. அதன் அங்கங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு முகமைகள் மூலமாக செயல்படுத்துகிறது.
கார்பன் வாயுவை வெளியிடும் முதல் பத்து நாடுகள்
1. சீனா
2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்
3. ஐரோப்பிய ஒன்றியம்
4. இந்தியா
5. ரஷ்யா
6. ஜப்பான்
7. ஜெர்மனி
8. ஈரான்
9. சவுதி அரேபியா
10. தென் கொரியா
நிறுவனப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினை உருவாக்குதல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரித்தலுக்கான விவாதத் தலைப்புகள் என்பது மனித வாழ்க்கைக்கும், சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் நிலவும் குழப்பமான உறவு நிலைகளிலிருந்து எழுகிறது. இயற்கை தன்னளவில் ஒரு வாழ்க்கை ஆதார அமைப்பு என்ற அளவில் சுற்றுச்சூழல், அமைதி, மோதல், மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தாக்கங்களை நிகழ்த்துகிறது. உயிர் வாழ்வை நிலைத்திருக்க செய்வதில் இயற்கை நிகழ்த்தும் பங்களிப்பிற்கு மாற்று கிடையாது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிறுவனப்படுத்தப்பட்ட அணுகுமுறை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கான ஒரே வாய்ப்பாக சுற்றுச்சூழல் சட்டம் உருவானது.
சுற்றுச்சூழல் சமநிலைக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இச்சட்டம் செயல்படுத்தும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உலகளாவிய ஆர்வம் உருவாகியதால் சட்ட வரையறைகளும் நிறுவனப்படுத்தப்பட்ட செயல்பாடுகளும் இருபதாம் நூற்றாண்டின் உருவாக்கமாக இருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிறுவனப்படுத்தப்பட்ட அணுகுமுறை எனும் சிந்தனை விதை 1872ஆம் ஆண்டு முதலே விதைக்கப்பட்டது.ஆர்வம் கொண்ட சில தனி நபர்களால் அரசு-சாரா பேரவை ஒன்று இதன் நோக்கில் அப்போது அமைக்கப்பட்டது. இதுதான் பின்னர் பெர்ன் நகரில் ஆலோசனை ஆணையமாக விரிவடைந்து, உலகளாவிய இயற்கைப் பாதுகாப்புப் பிரச்சனைகளை அணுகியது. இருந்தபோதும் முதல் உலகப் போரால் இந்த அமைப்பு முடக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நாடுகளுக்கிடையேயான முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாக புத்துருவாக்கம் பெற்று தமக்கான சட்ட அங்கீகாரங்களுடன் செயல்பட்டது.
சுவிஸ் லீக் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பிற்கான ஃபுரூனன் மாநாடு 1947ஆம் நடைபெற்றது. அதில் இயற்கை பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் என்ற புதிய அமைப்பிற்கான அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கான விவகாரங்களுக்கான கூடுதலான நிறுவனப்படுத்தப்பட்ட பரிமாணங்கள் உருவாக்கப்பட்டன. ஐக்கிய நாடுகளைப் பொறுத்தவரை பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கான குழு (ECOSOC) என்ற ஒரு அமைப்பு மட்டுமே சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் வரம்புக்குள் உருவாக்கப்பட்டுள்ள தனித்தன்மை கொண்ட எட்டு அமைப்புகள் சுற்றுச்சூழல் அக்கறைகளில் நேரடியாக ஈடுபடுகின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் போருக்குப் பிந்தைய காலகட்டம் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் உலக நாடுகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக்குவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த வளர்ச்சிப் போக்கை தொடர்ந்து 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இயற்கைப் பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCL) என்ற அமைப்பு ஒரு முக்கியத் திருப்பமாகும். இந்த அமைப்பு உலகளாவிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஒரு மேலான நிலைக்கு எடுத்துச் சென்றது.
அதன் பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பன்னாட்டுசட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. சுற்றுச்சூழல் சட்டம் என்பது அதன் கொள்கைப் பரிணாமங்களை பொறுத்தவரை உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் சிறப்பு மாநாடுகள், பிரகடனங்கள், கொள்கைகள், தீர்ப்பாயர்களின் கருத்துகள், சுற்றுச்சூழல் உரிமைகள், நடவடிக்கைகள் மீதான நாடுகளுக்கிடையேயான
பரஸ்பர அங்கீகாரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். சுற்றுச்சூழல் சட்டத்தின் வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை வரம்பிற்குள்
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த பன்னாட்டு அரசுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைவிற்கான ஒரு செயல் திட்டம் உருவாவதைச் சார்ந்துள்ளது.