பருவம் 3 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: அணி இலக்கணம் | 6th Tamil : Term 3 Chapter 3 : Innuyir kapom
இயல் மூன்று
கற்கண்டு
அணி இலக்கணம்
எதிலும் அழகைக் காண விரும்புவது மனிதர்களின் இயல்பு. நாம் நம்மை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொள்கிறோம். அதுபோல் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை வினக்குவது அணி இலக்கணம் ஆகும். அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.
கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.
இயல்பு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
(எ.கா)
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
- அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு
- உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு
- பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
- கவிமணி தேசிக விநாயகனார்
இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
உயர்வு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
(எ.கா)
குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே கருக்குமென்று
ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா
என்று ஒரு தாய் தாலாட்டுப் பாடுகிறாள். இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.