பருவம் 3 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: மனிதநேயம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 3 : Innuyir kapom
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
அ) மனித வாழ்க்கை
ஆ) மனித உரிமை
இ) மனித நேயம்
ஈ) மனித உடைமை
[விடை : இ) மனித நேயம்]
2.
தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ......... காட்டியவர் வள்ளலார்.
அ) கோபம்
ஆ) வெறுப்பு
இ) கவலை
ஈ) அன்பு
[விடை : ஈ) அன்பு]
3.
அன்னை தெரசாவிற்கு ............ க்கான 'நோபல் பரிசு' கிடைத்தது
அ) பொருளாதாரம்
ஆ) இயற்பியல்
இ) மருத்துவம்
ஈ) அமைதி
[விடை : ஈ) அமைதி]
4.
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்
ஆ) குழந்தைகளை நேசிப்போம்
இ) குழந்தைகளை வளர்ப்போம்
ஈ) குழந்தைகள் உதவி மையம்
[விடை : அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்]
பொருத்துக
1.
வள்ளலார் –
நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2.
கைலாஷ் சத்யார்த்தி –
பசிப்பிணி போக்கியவர்
3.
அன்னை தெரசா –
குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
விடை
1. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. மனிதநேயம்
2. உரிமை
3. அமைதி
4.
அன்புசெய்தல்
விடை
1. மனிதநேயம் – காந்தியடிகள், மனிதநேயமே சிறந்தது என்று கூறியுள்ளார்.
2. உரிமை – நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை உரிமையுடனும் மகிழ்வுடனும் வாழ வேண்டும்.
3. அமைதி – அமைதியான சூழலில்தான் நம் சிந்தனை புத்துணர்ச்சி பெறும்.
4. அன்புசெய்தல் – அனைத்து உயிர்களிடத்திலும் நாம் அன்பு செய்தல் வேண்டும்.
குறுவினா
1.
யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?
விடை
மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2.
வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?
விடை
வள்ளலார் மக்களின் பசிப்பிணியை நீக்க தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார். இவரின் மனிதநேயச் செயல் வடலூரில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
3.
அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது?
விடை
(i) சாலையோரத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரை அன்னை தெரசா பார்த்தார். தன் முகத்தைத் துணியால் மூடியபடியும், ஒரு கையில் பூனைக் குட்டியையும் வைத்திருந்தாள். அம்மூதாட்டியின் கைகளில் விரல்கள் இல்லை.
(ii) மனம் கலங்கியவராய் அம்மூதாட்டியைத் தொட்டுத் தூக்கினார். “சாலை ஓரத்தில் படுத்திருப்பது ஏன்?” எனக் கேட்டார்.
(iii) “என்னைத் தொடாதீர்கள், என் நோய் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். என் உறவினர்களே என்னை வெறுத்து விலக்கிவிட்டனர். என்னுடன் பேசுவதில்லை. என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்தப் பூனை மட்டுமே என்னுடன் இருக்கிறது” என அழுதார் மூதாட்டி. இதைக்கேட்ட அன்னை தெரசா கண்ணீர் விட்டார்.
சிறுவினா
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது?
விடை
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக் கால நிகழ்வு:
(i) இவர் சிறுவயதில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார். அவன் தன் தந்தையுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பான். ஏன் அந்தச் சிறுவன் தன்னைப் போல் பள்ளிக்கு வரவில்லை என்ற கேள்வி அவர் உள்ளத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது.
(ii) தன் ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார். “பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை. வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்.” என்ற பதில் கிடைத்தது. அந்தப் பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது.
(iii) அவருடைய மனிதநேயம் பிற்காலத்தில் அவரைப் பள்ளி செல்லாத குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. இந்த இளமைக்கால நிகழ்வு கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்தது.
சிந்தனை வினா
அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.
விடை
அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றி வேறு ஒரு நிகழ்வு :
ஒருநாள் அன்னை தெரசா வீட்டின் வாசற்படியில் நோயால் ஒரு பெண் மயங்கிக் கிடந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், கால தாமதத்தால் அந்தப் பெண் இறக்க நேரிட்டாள். இந்தக் கோர சம்பவத்தால் அன்னை தெரசா “சிறிய அளவில் மருத்துவமனை” ஆரம்பிப்பது என முடிவு செய்தார்.
கற்பவை கற்றபின்
1. நாளிதழ்களில் வந்துள்ள மனிதநேயம் பற்றிய செய்திகளைச் சேகரித்துக் கூறுக.
விடை
‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்கு ஜெகத்ரட்சகனின் ரேலா மருத்துவமனை உதவி டாக்டர்கள் மூலம் மருந்து வினியோகம், சென்னை , நவ.-26-2018.
முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் டாக்டர் ரேலா மருத்துவமனை தேசிய கல்லீரல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 25பேர் கொண்ட மருத்துவக்குழு ‘கஜா’ புயல் நிவாரண மருத்துவச் சேவைக்காக கடந்த 22ந்தேதி சென்னையில் இருந்து நாகை மாவட்டம் சென்றனர். 23-ந்தேதி தலைஞாயிறு, புஷ்பவனம் மற்றும் வெள்ளைப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 700 பேருக்குச் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது.
24-ந்தேதி தீவுக் கிராமமான வண்டல் கிராமத்துக்குப் படகு மூலம் சென்று 600 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு உள்ளது. 25-ந்தேதி அரவேற்காடு பகுதிகளில் நடந்த மருத்துவ முகாமில் சுமார் 450 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல் டாக்டர் ரேலா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதநேயத்தோடு செய்த இச்சேவையை அங்குள்ள மக்கள் பாராட்டினர்.
பட்டுக்கோட்டை அருகே மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய வாலிபர்கள், பட்டுக்கோட்டை, நவ.-1-2018.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை காசி விசுவநாதர் கோவில் முன்பு கடந்த பல நாட்களாக சின்னப்பொண்ணு (வயது 65) என்ற மூதாட்டி பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி தனது கை, கால்கள் கழுவுவதற்காக அங்குள்ள கோவில் குளத்தில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், குளத்திற்குள் தவறி விழுந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரையில் போட்டனர்.
அப்போது அங்கு வந்த பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த விக்னேஷ்(23) ஹானஸ்ட்ராஜ்(26) ஆகிய இருவரும் அந்த மூதாட்டியை மீட்டு, மோட்டார் சைக்கிளில் ஏற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். இதற்குக் காரணமான வாலிபர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.
2.
எவரேனும் ஒருவருக்கு நீங்கள் உதவி செய்த அனுபவத்தைக் கூறுக.
விடை
அப்பா என்னிடம் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் “அன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு ஒருநாள் உணவுக்கு பணம் கொடுக்கலாம். அதுமட்டும் இல்லாமல் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் அங்கே இருக்கிறவங்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்றேன். அப்பாவும் சரி என்று சம்மதித்தார். நாங்களும் அவ்வில்லத்திற்குச் சென்று உதவிகளைச் செய்தோம். இந்நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக உள்ளது.
3.
ஒற்றுமையாக வாழும் பண்பே சிறந்தது என்பது பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுக.
விடை
எழில் : ஜெயஸ்ரீ. வணக்கம், நலமாக இருக்கிறாயா?
ஜெயஸ்ரீ : நான் நலம், நீ எப்படி இருக்கிறாய்?
எழில் : நானும் நலமாகவே இருக்கிறேன்.
ஜெயஸ்ரீ : நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
எழில் : பண்பாக இருக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : எப்படி?
எழில் : எல்லோரையும் மதிக்க வேண்டும். யாரையும் குறை கூறக்கூடாது. மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : அப்புறம்!
எழில் : ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : அதுமட்டுமல்ல எழில், ஒருவருக்கொருவர் அன்பு, பாசம் காட்ட வேண்டும்.
எழில் : ஆமாம்! சரியாகச் சொன்னாய்.
ஜெயஸ்ரீ : பண்பை வெளிப்படுத்தினால் நாம் எப்போதும் ஒற்றுமையாக வாழலாம்.
எழில் : ஒற்றுமையாக வாழ்வோம் வா!