பருவம் 3 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 6th Tamil : Term 3 Chapter 3 : Innuyir kapom
திருக்குறள்
அறன் வலியுறுத்தல் (4)
1) சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
2) அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
3) ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.
4) மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
5) அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
6) அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
7)
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
8) வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
9) அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.
10) செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.
ஈகை (23)
1) வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
2) நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று.
3)
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான் கண்ணே உள.
4)
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
5)
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
6)
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
7)
பாத்துஊண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
8)
ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்
9) இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
10) சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை.
இன்னா செய்யாமை (32)
1) சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.
2) கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.
3) செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.
4) இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
5) அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.
6) இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
7)
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
8)
தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
9) பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
10) நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
கொல்லாமை (33)
1)
அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.
2)
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
3)
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
4) நல்ஆறு எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
5) நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
6) கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிர்உண்ணும் கூற்று.
7) தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.
8) நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றுஆகும் ஆக்கம் கடை.
9) கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.
10) உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
பெரியாரைப் பிழையாமை (90)
1) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
2) பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
3) கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
4) கூற்றத்தைக் கையால் விளித்துஅற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
5) யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
6) எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்துஒழுகு வார்.
7) வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
8) குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றுஅன்னார் மாய்வர் நிலத்து.
9)
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
10) இறந்துஅமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்துஅமைந்த சீரார் செறின்.
வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும். அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளின் 50 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன அலகிடுவதற்காக அன்று.
திருக்குறள் கருத்துகளை
மாணவர்களிடையே பரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்
• நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் திருக்குறளைப் பொருளுடன் கூறலாம்.
• வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தலாம்.
• இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகளைக் கூறலாம்.
• திருக்குறள் கருத்துகளை விளக்கும் நாடகங்களை நடத்தச் செய்யலாம்.
• திருக்குறள் கருத்துகளை விளக்கும் ஒவியப் போட்டியை நடத்தலாம்.
• குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து வினாடி வினா நடத்தலாம்.
• சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் கருத்துகளை விளக்கலாம்.
• உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள் இசைப்பாடல்கள் சித்திரக் கதைகள் அசைவூட்டப் படங்கள் ஆகியவற்றை உருவாக்கி அவற்றின் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்