கவிமணி தேசிக விநாயகனார் | பருவம் 3 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஆசிய ஜோதி | 6th Tamil : Term 3 Chapter 3 : Innuyir kapom
இயல் மூன்று
கவிதைப்பேழை
ஆசியஜோதி
நுழையும்முன்
இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று, மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும். பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும். அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது. உலக உயிர்கன் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர். அவரின் அறவுரையை அறிவோம் வாருங்கள்.
முன்கதைச் சுருக்கம்
அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான். பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார். யாகசாலையை அடைந்தார். மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.
நின்றவர் கண்டு நடுங்கினாரே
- ஐயன்
நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;
துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு
சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா!
வாழும் உயிரை வாங்கிவிடல்
- இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;
வீழும் உடலை எழுப்புதலோ
- ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா!
யாரும் விரும்புவது இன்னுயிராம்; -
அவர்
என்றுமே காப்பதும் அன்னதேயாம்;
பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப்
- படும்
பாடு முழுதும் அறிந்திலிரோ?
நேரிய உள்ளம் இரங்கிடுமேல்
- இந்த
நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
பாரினில் மாரி பொழிந்திடவே
- வயல்
பக்குவ மாவது அறிந்திலீரோ?
காட்டும் கருணை உடையவரே
- என்றும்
கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார்-
இந்த
மர்மம் அறியாத மூடரையா!
காடு மலையெலாம் மேய்ந்துவந்து – ஆடுகன்
கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு
தீய செயலென எண்ணினீரோ?
அம்புவி மீதில்இவ் ஆடுகளும்
- உம்மை
அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்
நன்மை உமக்கு வருமோ ஐயா?
ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம்
- ஏழை
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை விட்டுச்
செல்வது ஒருநாளும் இல்லைஐய!
ஆதலால் தீவினை செய்யவேண்டா
- ஏழை
ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா;
பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும்ஐயா!
-
கவிமணி தேசிக விநாயகனார்
சொல்லும் பொருளும்
அஞ்சினர் -
பயந்தனர்
முற்றும் -
முழுவதும்
கருணை –
இரக்கம்
மாரி -
மழை
வீழும் -
விழும்
கும்பி -
வயிறு
ஆகாது -
முடியாது
நீள்நிலம் -
பரந்த உலகம்
பூதலம் -
பூமி
பார் –
உலகம்
பாடலின் பொருள்
யாகசாலையில் நின்றவர் அனைவரும் புத்தர்பிரானைக் கண்டு நடுங்கினர். அவர் முன்னால் நிற்கவும் அஞ்சினர். கூடி இருந்த மக்களின் முன்னால் இரக்கமே உருவான புத்தர்பிரான் கூறிய உரையைக் கேளுங்கள்.
வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.
எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ?
நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ?
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர், இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர்.
காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா?
ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.
ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.
நூல் வெளி
தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா [Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.