Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | இலக்கணம்: அணி இலக்கணம்

பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: அணி இலக்கணம் | 7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam

   Posted On :  12.07.2022 04:52 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்

இலக்கணம்: அணி இலக்கணம்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : இலக்கணம்: அணி இலக்கணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று 

கற்கண்டு 

அணி இலக்கணம்


அணி

அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.

உவமை அணி

மயில் போல ஆடினாள்.

மீன் போன்ற கண்.


இத்தொடர்களைப் படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள 'போல', 'போன்ற' என்பவை உவம உருபுகளாகும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 

இகழ்வார்ப் பொறுத்தல் தலை  (பொறையுடைமை)

பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை. நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). 'போல' என்பது உவம உருபு.

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும்.

எடுத்துக்காட்டு உவமை அணி

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத்து ஊறும் அறிவு (கல்வி

மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும். இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை. மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம். இடையில் 'அதுபோல்' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

இல்பொருள் உவமையணி 

மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது. 

காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.

இத்தொடர்களில் 'பொன்மழை பொழிந்தது போல்', 'கொம்பு  முளைத்த குதிரை போல' என்னும் உவமைகள் வந்துள்ளன. உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை. கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.


Tags : Term 3 Chapter 1 | 7th Tamil பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam : Grammar: Ani ilakkanam Term 3 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : இலக்கணம்: அணி இலக்கணம் - பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்