பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: அணி இலக்கணம் | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku
இயல் இரண்டு
கற்கண்டு
அணி இலக்கணம்
உருவக அணி
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர்க் கற்றோம். உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.
'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை ஆகும். தமிழாகிய தேன் என்னும் பொருளில் 'தமிழ்த்தேன் என்று கூறுவது உருவகம் ஆகும். வெள்ளம் போன்ற இன்பத்தை ‘இன்ப வெள்ளம்' என்று கூறுவதும் கடல் போன்ற துன்பத்தைத் 'துன்பக்கடல்' என்று கூறுவதும் உருவகம் ஆகும்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று
இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.
ஏகதேச உருவக அணி
அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.
இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகதேசம் - ஒரு பகுதி)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (திருக்குறள்)
விளக்கம்
வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்.