Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | துணைப்பாடம்: உண்மை ஒளி

பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: உண்மை ஒளி | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku

   Posted On :  12.07.2022 06:36 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு

துணைப்பாடம்: உண்மை ஒளி

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : துணைப்பாடம்: உண்மை ஒளி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு 

விரிவானம் 

உண்மை ஒளி


நுழையும்முன்

உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தவராகக் கருதுவதே உயர்ந்த மனிதப்பண்பு ஆகும். அப்பண்பைப் பெறுவதே சிறந்த அறிவாகும். அத்தகைய அறிவுடைய சான்றோர்கள் துன்பப்படும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். அவ்வாறு உதவும்போது தமக்கு இழப்பு ஏற்படினும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இக்கருத்துகளை விளக்கும் ஜென் கதை ஒன்றைப் படக்கதையாகக் காண்போம்!
ஜென் குரு ஒருவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தைகளே! உண்மையான ஒளி எது என்பதைப் பற்றி இன்று அறிந்து கொள்ளப் போகிறோம்.

அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஐயா!

பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே . பசி, தாகம், தூக்கம் ஆகியவை எல்லா உயிர்களுக்கும் உண்டு

மேலும் இரவும் பகலும் மாறி மாறி வருவது போல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா?

இருள் கலைந்து, வெளிச்சம் வந்துவிட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள்?

தொலைவில் நிற்கும் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் வெளிச்சம் வந்துவிட்டதை நான் அறிவேன் ஐயா.

இல்லை . வேறு யாராவது கூறுங்கள் பார்ப்போம்.

தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா? அரசமரமா? என்பதை அடையாளம் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்துவிட்டது என்பதை அறியலாம். சரிதானே ஐயா?

இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?

எங்களுக்குத் தெரியவில்லை ஐயா. தாங்களே கூறி விடுங்கள்.

ஒரு மனிதரைக் காணும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்.

இரவும் பகலும் வெறும் காலவேறுபாடுகள்தான். உண்மையான ஒளி உள்ளத்தின் உள்ளே ஏற்பட வேண்டியது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் ஐயா.

உள்ளுக்குள் ஒளி இல்லையென்றால் உச்சி வெயில்கூடக் காரிருளே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம்.

வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து செல்கின்றனர்.

குரு அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்படுகிறார். 

இருட்டுவதற்குள் ஊரை அடைய வேண்டும்.

வழியில்.....

! யாரது சாலையோரம் படுத்துக்கிடப்பது!

குதிரையை நிறுத்தி, கீழே இறங்கிய குரு அந்த மனிதனை எழுப்புகிறார்.

குழந்தாய்! எழுந்திரு. நீ யார்? ஏன் இங்கே படுத்திருக்கிறாய்?

இவன் மயக்கம் அடைந்திருக்கிறான்.

படுத்திருப்பவருக்கு நீரைப் பருகத் தருகிறார்.

குழந்தாய்! எழுந்திரு. இந்த நீரைக் கொஞ்சம் குடி.

மயக்கமடைந்தவர் எழுந்து உட்காருகிறார்.

பசியால் மயங்கி விழுந்து விட்டேன் ஐயா. நான் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும்.

அப்படியா! சரி என்னிடம் குதிரையிருக்கிறது. நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்.

குரு, அவனைத் தன் குதிரையின்மீது உட்காரவைக்கிறார்.

மெதுவாக ஏறுப்பா! பார்த்து உட்கார்.

குதிரையில் ஏறிய அவன் குதிரையை அடித்து விரட்டத் தொடங்குகிறான்.

! என்ன இது? ஓ! இவன் திருடன் போல இருக்கிறது. என் குதிரையைத் திருடவே இப்படி நடித்திருக்கிறான்.

(குரு ஏமாற்றத்துடன் நடந்து ஊரை அடைகிறார்.)

இங்கு எப்படியாவது ஒரு குதிரையை வாங்கிக் கொண்டுதான் ஊருக்குத் திரும்ப வேண்டும்.

குரு குதிரைச் சந்தைக்குச் செல்கிறார்

! அதோ அங்கு நிற்பது என்னுடைய குதிரையைப் போல் உள்ளதே!

குருவிடம் குதிரையைத் திருடியவன் அங்கு நிற்கிறான். குரு அவன் தோளைத் தொடுகிறார்.

குழந்தாய்!

! நீங்களா?

குரு மெல்லச் சிரிக்கிறார்.

யாரிடமும் சொல்லாதே!

எதை? ஏன்?

குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே.

இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.

நீ நினைப்பது எனக்குப் புரிகிறது குழந்தாய்! ஆனால், நான் ஏமாந்து போனது தெரிந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட அவர்களுக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள். புரிகிறதா? குறுகிய தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்து விடக்கூடாது. இதை நீ தெரிந்துகொள்.

குருவின் பெருந்தன்மையை உணர்ந்த அவன் வெட்கித் தலைகுனிகிறான்.

நூல் வெளி 

ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள். புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள். இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமது சிந்தனைகளைச் சிறு நிகழ்ச்சிகள், எளிய கதைகள் ஆகியவற்றின் மூலம் விளக்கினர்.


Tags : Term 3 Chapter 2 | 7th Tamil பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku : Supplementary: Unmai Oli Term 3 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : துணைப்பாடம்: உண்மை ஒளி - பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு