Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | இலக்கணம்: இடைச்சொல் - உரிச்சொல்

இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: இடைச்சொல் - உரிச்சொல் | 9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்

இலக்கணம்: இடைச்சொல் - உரிச்சொல்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : இலக்கணம்: இடைச்சொல் - உரிச்சொல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கல்வி – ரு

கற்கண்டு

இடைச்சொல் - உரிச்சொல்


சுசீலா, அவளுடைய தோழி கமீலாவின் வீட்டுக்குப் போனாள். கமீலாவும் சுல்தானும் தொலைக்காட்சி பச் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுல்தானைவிடக் கமீலா இரண்டு ஆண்டுகள் பெரியவள். ஆனால் உருவத்தில் சுல்தான்தான் அண்ணனைப் போல இருப்பான். சுசீலாவைக் கண்டவுடன் கமீலா மகிழ்ச்சியடைந்தாள்.


மேற்கண்ட பகுதியில் இடைச் சொற்களை இனம் காண முடிகிறதா?

இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள்.

பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் ஆகியவற்றைப்போல இடைச்சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை. ஆயினும், இடைச் சொற்களே மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.

இடைச் சொற்கள், பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.

இடைச்சொல் பலவகையாக அமையும்.


இடைச்சொற்களின் வகைகள் 

வேற்றுமை உருபுகள் - ஐ, ஆல், கு, இன், அது, கண் 

பன்மை விகுதிகள் - கள், மார்

திணை, பால் விகுதிகள் - ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், து, அ

கால இடைநிலைகள் - கிறு, கின்று,...

பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் - அ, உ, இ, மல்,...

எதிர்மறை இடைநிலைகள் - ஆ, அல், இல்

தொழிற்பெயர் விகுதிகள் - தல், அம், மை 

வியங்கோள் விகுதிகள் - க, இய

சாரியைகள் - அத்து, அற்று, அம்,...

உவம உருபுகள் - போல, மாதிரி

இணைப்பிடைச் சொற்கள் - உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஓ, ஆகவே, ஆயினும், எனினும்,...

தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள் - உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்

சொல்லுருபுகள் - மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை

வினா உருபுகள் – ஆ, ஓ

இவற்றுள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச்சொற்கள் தற்காலத் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.


உம்

'உம்' என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.

மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை. (எதிர்மறை உம்மை )

பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)


ஓகார இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் என்று நன்னூல் கூறுகிறது.

தற்காலத்தில் ஓகார இடைச்சொல் பிரிநிலைப் பொருளில் அதிகமாக வருகின்றது. அதைத் தவிர ஐயம், உறுதியாகக் கூறமுடியாமை, மிகை, இது அல்லது அது, இதுவும் இல்லை - அதுவும் இல்லை போன்ற பொருள்களிலும் வருகின்றன.

இன்றைக்கு மழை பெய்யுமோ? (ஐயம்)

பூங்கொடியோ மலர்க்கொடியோ பேசுங்கள். (இது அல்லது அது)

பாலுவோ கண்ணனோ பேசாதீர்கள். (இதுவும் இல்லை - அதுவும் இல்லை )


ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.

தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் அழுத்தம்) மட்டுமே வருகிறது.

அண்ணல் காந்தி அன்றே சொன்னார்.

நடந்தே வந்தான்.


தான்

'தான்' என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில்தான் வருகின்றது. சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைப்படுத்துகின்றது. ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமே வருகிறது.

நிர்மலாதான் நேற்று விழாவில் பாடினாள். 

நிர்மலா நேற்றுதான் விழாவில் பாடினாள்.

நிர்மலா நேற்று விழாவில்தான் பாடினாள். 

நிர்மலா நேற்று விழாவில் பாடினாள்தான்.

வேறுபாட்டை உணருங்கள்:

நிர்மலாதான் பாடினாள். (தான் - இடைச்சொல்)

நிர்மலா தானும் பாடினாள். (தான் - தற்சுட்டுப் படர்க்கை ஒருமை இடப்பெயர் - பெயர்ச்சொல்)


மட்டும்

இச்சொல் வரையறைப் பொருள் தருகிறது. முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.

படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்)


ஆவது

இது பல பொருள்களில் வரும் இடைச்சொல்லாகும்.

ஐந்து பேராவது வாருங்கள். (குறைந்த அளவு)

அவனாவது, இவனாவது செய்து முடிக்கவேண்டும். (இது அல்லது அது)

முதலாவது, இரண்டாவது, .... (வரிசைப்படுத்தல்)


கூட

என்னிடம் ஒரு காசு கூட இல்லை . (குறைந்தபட்சம்)

தெருவில் ஒருவர்கூட நடமாடவில்லை . (முற்றுப் பொருள்)

அவனுக்கு வரையக்கூடத் தெரியும். (எச்சம் தழுவிய கூற்று)


வினாப் பொருளில் வரும் இடைச் சொல்லாகும்.

ஆ என்னும் இடைச் சொல், சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் இணைந்து வருகிறதோ, அச்சொல் வினாவாகிறது.

புகழேந்தி நேற்று உன்னுடன் பேசினானா?

புகழேந்தி நேற்று உன்னுடனா பேசினான்?


ஆம்

சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கும் பயன்படுகிறது. 

உள்ளே வரலாம். (இசைவு)

இனியன் தலைநகர் போகிறானாம். (தகவல்)/செய்தி

பறக்கும் தட்டு நேற்றுப் பறந்ததாம். (வதந்தி)/பொய்மொழி

தெரிந்து தெளிவோம்

அன்று என்பது ஒருமைக்கும் 

அல்ல என்பது பன்மைக்கும் உரியன.

(எ.கா.) இது பழம் அன்று . இவை பழங்கள் அல்ல.

எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும் 

எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும் 

(எ.கா.) எத்தனை நூல்கள் வேண்டும்? எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழைமையானது.


உரிச்சொற்கள் 

உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன. உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும். உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை. ஆனால் இவை தனித்து வழங்கப்படுவதில்லை. உரிச் சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

கடி மலர் - மணம் மிக்க மலர் 

கடி நகர் - காவல் மிக்க நகர்

கடி விடுதும் - விரைவாக விடுவோம்

கடி நுனி - கூர்மையான நுனி

- ஒரு சொல் பல பொருளுக்கு உரியது

உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் பொருளில் வருகின்றன.

உறு பசி; தவச் சிறிது; நனி நன்று - பல சொல் ஒரு பொருள்

உரிச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வந்து பொருள் உணர்த்துகின்றன. மேலும் அவை

1) ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும் உண்டு 

2) பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு

மழ, குழ என்பவற்றிலிருந்து உருவானவை மழலை, குழந்தை போன்ற சொற்கள். உவப்பு (உவகை), பசப்பு (நிறம் மங்குதல்), பயப்பு (பயன்) போன்றவை அப்படியே பயன்படுகின்றன. செழுமை என்பது செழிப்பு, செழித்த, செழிக்கும் எனப் பெயராகவும், வினையாகவும் பயன்படுகிறது. விழுமம் என்பது விழுப்பம், விழுமுதல், விழுமிய எனப் பெயராகவும் வினையாகவும் பயன்படுகிறது. பிற உரிச் சொற்களும் அவ்வாறே தற்காலத்தில் பயன்படுகின்றன.

Tags : Chapter 5 | 9th Tamil இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal : Grammar: Idaisol- Urisol Chapter 5 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : இலக்கணம்: இடைச்சொல் - உரிச்சொல் - இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்