Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: குடும்ப விளக்கு

பாரதிதாசன் | இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: குடும்ப விளக்கு | 9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal

   Posted On :  19.08.2023 07:30 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்

கவிதைப்பேழை: குடும்ப விளக்கு

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : கவிதைப்பேழை: குடும்ப விளக்கு - பாரதிதாசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கல்விரு

கவிதைப் பேழை

குடும்ப விளக்கு

- பாரதிதாசன்



நுழையும்முன்

புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள். இயற்கையைப் போற்றுதல், தமிழுணர்ச்சி ஊட்டுதல், பகுத்தறிவு பரப்புதல், பொதுவுடைமை பேசுதல், விடுதலைக்குத் தூண்டுதல், பெண்கல்வி பெறுதல் போன்ற பாடுபொருள்களில் தோன்றிய பல்வேறு இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று, பாவேந்தர் பாரதிதாசனின் குடும்பவிளக்கு.



1. கல்வி இல்லாத பெண்கள்

களர்நிலம் அந்நி லத்தில் 

புல்விளைந் திடலாம் நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை

கல்வியை உடைய பெண்கள்

திருந்திய கழனி அங்கே 

நல்லறிவு உடைய மக்கள்

விளைவது நவில வோநான்!

சொல்லும் பொருளும்:

களர்நிலம் - பண்படாத நிலம், 

நவிலல் - சொல்லல்.


2. வானூர்தி செலுத்தல் வைய

மாக்கடல் முழுது மளத்தல் 

ஆனஎச் செயலும் ஆண்பெண்

அனைவர்க்கும் பொதுவே! இன்று 

நானிலம் ஆட வர்கள்

ஆணையால் நலிவு அடைந்து 

போனதால் பெண்களுக்கு 

விடுதலை போனது அன்றோ !

சொல்லும் பொருளும்:

வையம் - உலகம்; 

மாக்கடல் - பெரிய கடல்,


3. இந்நாளில் பெண்கட்கு எல்லாம்

ஏற்பட்ட பணியை நன்கு 

பொன்னேபோல் ஒருகை யாலும்

விடுதலை பூணும் செய்கை 

இன்னொரு மலர்க்கை யாலும்

இயற்றுக! கல்வி இல்லா

மின்னாளை வாழ்வில் என்றும் 

மின்னாள் என்றே உரைப்பேன்!

சொல்லும் பொருளும்

இயற்றுக - செய்க; 

மின்னாளை - மின்னலைப் போன்றவளை; 

மின்னாள் – ஒளிரமாட்டாள்.


4. சமைப்பதும் வீட்டு வேலை

சலிப்பின்றிச் செயலும் பெண்கள்

தமக்கே ஆம் என்று கூறல் 

சரியில்லை ; ஆடவர்கள்

நமக்கும் அப் பணிகள் ஏற்கும் 

என்றெண்ணும் நன்னாள் காண்போம்!

சமைப்பது தாழ்வா ? இன்பம்

சமைக்கின்றார் சமையல் செய்வார்!


5. உணவினை ஆக்கல் மக்கட்கு!

உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு 

பணத்தினால் அன்று! வில்வாள்

படையினால் காண்ப தன்று! 

தணலினை அடுப்பில் இட்டுத்

தாழியில் சுவையை இட்டே 

அணித்திருந் திட்டார் உள்ளத்(து)

அன்பிட்ட உணவால் வாழ்வோம்! 

சொல்லும் பொருளும்: 

தணல் - நெருப்பு; 

தாழி - சமைக்கும் கலன்; 

அணித்து - அருகில்.


6. சமைப்பது பெண்க ளுக்குத்

தவிர்க்கொணாக் கடமை என்றும்

சமைத்திடும் தொழிலோ, நல்ல

தாய்மார்க்கே தக்கது என்றும் 

தமிழ்த்திரு நாடு தன்னில் 

இருக்குமோர் சட்டந் தன்னை

இமைப் போதில் நீக்கவேண்டில்

பெண்கல்வி வேண்டும் யாண்டும்! 

சொல்லும் பொருளும்: 

தவிர்க்க ஒணா – தவிர்க்க இயலாத; 

யாண்டும் – எப்பொழுதும்.


பாடலின் பொருள்

1. கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அதுபோல கல்வி அறிவிலாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள். கல்வியைக் கற்ற பெண்கள் பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

2. வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை. இன்று உலகமானது ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால்தான் பெண்களுக்கு விடுதலை பறிபோனது.

3. இன்று பெண்களுக்கென உள்ள வேலைகளையும் அவர்களின் விடுதலைக்கான செயலையும் பெண்களே செய்தல் வேண்டும். மின்னல் போல் ஒளிரும் இயல்புடையவள் பெண்; ஆனால் கல்வியறிவு இல்லாத பெண் தன் வாழ்வில் என்றும் ஒளிரமாட்டாள் என்றே நான் சொல்வேன்.

4. சமைப்பது, வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வது போன்றவை பெண்களுக்கே உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது. அவை நமக்கும் உரியவை என்று ஆண்கள் ஏற்றுக்கொள்ளும் எண்ணம் வரவேண்டும். அந்த நன்னாளைக் காண்போம். சமைப்பது தாழ்வென எண்ணலாமா? சமைப்பவர் உணவை மட்டும் சமைப்பதில்லை. அதற்கும் மேலாக இன்பத்தையும் படைக்கின்றார்.

5. உணவைச் சமைத்துத் தருவது என்பது உயிரை உருவாக்குவது போன்றதாகும். "வாழ்க்கை" என்பது பொருட்செல்வத்தாலோ வீரத்தாலோ அமைவதன்று. அடுப்பில் நெருப்பு மூட்டி சமைக்கும் கலத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ளத்து அன்போடு உணவு பரிமாறுதலில்தான் வாழ்வு நலம்பெறுகிறது.

6. சமைக்கும் பணி, பெண்களுக்குத் தவிர்க்க முடியாத கடமை எனவும் அப்பணி நல்ல தாய்மார்களுக்கே உரியது எனவும் தமிழ்த்திரு நாட்டில் இருக்கின்ற வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

இலக்கணக்குறிப்பு 

மாக்கடல் - உரிச்சொல்தொடர்;

ஆக்கல் - தொழில்பெயர்;

பொன்னே போல் - உவம உருபு; 

மலர்க்கை - உவமைத்தொகை;

வில்வாள் - உம்மைத்தொகை;

தவிர்க்காணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம் 

விளைவது = விளை + வ் +அ + து

விளை - பகுதி; வ் - எதிர்கால இடைநிலை; 

அ - சாரியை; து - தொழிற்பெயர் விகுதி.

சமைக்கின்றார் = சமை + க் + கின்று + ஆர்

சமை - பகுதி; க் - சந்தி; கின்று – நிகழ்கால இடைநிலை; ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

.

நூல் வெளி 

குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது; கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது; குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும். இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன.

பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம். இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள். இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் 'பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்' என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Tags : by Bharathidasan | Chapter 5 | 9th Tamil பாரதிதாசன் | இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal : Poem: Kudumba vilakku by Bharathidasan | Chapter 5 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : கவிதைப்பேழை: குடும்ப விளக்கு - பாரதிதாசன் | இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்