Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | உரைநடை: கல்வியில் சிறந்த பெண்கள்

இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: கல்வியில் சிறந்த பெண்கள் | 9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal

   Posted On :  19.08.2023 07:27 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்

உரைநடை: கல்வியில் சிறந்த பெண்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : உரைநடை: கல்வியில் சிறந்த பெண்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கல்விரு

உரைநடை உலகம்

கல்வியில் சிறந்த பெண்கள்



நுழையும்முன்

கையிலுள்ள செல்வத்தைக்காட்டிலும் நிலைத்த புகழுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வின் இறுதிவரையிலும் கைகொடுக்கிறது. கல்வி பெறுதலே பெண்களுக்கு அழகு. சங்ககாலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி, இடைக்காலத்தில் ஒடுங்கிப்போனது. பெண்கல்வியை மீட்டெடுக்க உலகம் முழுவதும் சான்றோர் பலர் பாடுபட்டிருக்கின்றனர். மருத்துவர் முத்துலட்சுமி முதல் மலாலா வரை சாதனைப் பெண்கள் ஒவ்வொருவரின் வரலாற்றிலும் ஒரு சோதனைக் காலமும் ஒரு வேதனை முகமும் இருக்கின்றது. இனி, பெண்கல்வி காலூன்றிக் கடந்து வந்த பாதைகளில் நடந்து செல்லும் வில்லிசையைச் செவிமடுப்போம்.


வில்லுப்பாட்டு

பங்கு பெறுவோர் 

வில்லுப்பாட்டுக் குழுத்தலைவர், குழுவினர்


வில்லுப்பாட்டுக் குழுத்தலைவர்: தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட

குழுவினர்: ஆமாம், வில்லினில் பாட 

குழுத்தலைவர்: வந்தருள்வாய் தமிழ்மகளே!

குழுவினர்: ஆமாம், வந்தருள்வாய் தமிழ்மகளே!

அண்ணே, என்னண்ணே, இன்னைக்கு எதைப் பத்திப் பாடப்போறோம்?

குழுத்தலைவர்: நாடும் தாய்தான் நகரும் நதியும் தாய்தான் .... மொழியும் தாய்தான் சுழலும் புவியும் தாய்தான்

குழுவினர்: பீடிகை போடாம செய்திக்கு வாங்கண்ணே!

குழுத்தலைவர்: இப்படி எல்லாத்தையும் பெண்ணாகப் பார்த்து வணங்கற நாம எல்லாரும், வீட்டில் இருக்கும் பெண்ணை மதிக்கிறோமா?

குழுவினர்: அண்ணே ... மதிக்க என்ன இருக்கு. எல்லார் வீட்டிலயும் இப்படித்தானே?

குழுத்தலைவர்: சரி, இதுவே ஒரு பெண் ஆட்சியர் வந்தா என்ன செய்வ?

குழுவினர்: என்ன அண்ணே கேள்வி இது? உடனே எழுந்து நின்று வணக்கம் சொல்வேன்.

குழுத்தலைவர்: அப்போ , ஒரு பெண் படிச்சுப் பெரிய பதவிக்கு வரும்போது, தானா மரியாதை வருதுல்ல? அதான், இன்னிக்குப் பெண் கல்வியின் அவசியம் பத்தியும் கல்வியில் சிறந்த பெண்களைப் பத்தியும் பாடப்போறோம்.

படிக்க வேண்டும் பெண்ணே – அப்பத்தான்

பார்முழுதும் போற்றிடும் கண்ணே ... 

சுயமாகச் சிந்திக்கத் துணையாகும் கல்வி

சொந்தக்காலில் நின்றிடவே உடனுதவும்

கல்வி... (படிக்க)

குழுவினர்: ஆமா, பார் முழுதும் போற்றிடும் கண்ணே .

ஆமாண்ணே, எனக்கொரு சின்ன ஐயம். அந்தக் காலத்தில எந்தப் பெண்ணைப் படிக்க வச்சாங்க? அப்பல்லாம் நாடு நல்லா இல்லையாண்ணே!

குழுத்தலைவர்: தம்பி, உனக்கு விவரம் பத்தாது. சொல்றேன் கேட்டுக்கோ.

கற்காலம் முதலே கனிந்திருந்த தமிழின் 

பொற்காலம் எனவே புகழப்படும் காலம் 

எக்காலம்? அது எக்காலம்? 

பாட்டும் தொகையும் உருவான காலம் 

ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம் 

சங்ககாலம்... அது சங்ககாலம்... 

ஔவையும் குயத்தியும் வெறிபாடிய

கண்ணியும் 

கொவ்வைத் தமிழைக் கொண்டு பாடிய

மாசாத்தியும்

செழித்திருந்த காலம்... புகழ் வளர்த்திருந்த 

காலம் ...

குழுவினர்: ஓகோ! சங்க காலத்தில் பெண்பாற் புலவர் பலர் இருந்ததச் சொல்றீங்களா அண்ணே, மேலே சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்கணும். நம்ம மக்களும் தெரிஞ்சு நடந்துக்கட்டும்

தெரிந்து தெளிவோம்

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர் 

ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், 

ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், 

பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார்,

நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், 

வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.

வில்லுப்பாட்டுக் குழுத்தலைவர்:

பெண்பாற் புலவர்கள் வந்தாங்க... 

பெண்ணுணர்வைப் பாடலில் தந்தாங்க... 

தூது போனாங்க... துயரைத் தீர்த்தாங்க... 

ஓதும் தமிழாலே உயர்வைப் பெற்றாங்க...

குழுவினர்: படிச்ச பெண்களுக்குக் கிடைச்ச பெருமையை இன்னும் சொல்லுங்கண்ணே!

குழுத்தலைவர்: சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்திலே, மாதவி மகள் மணிமேகலை கல்வி கற்ற பெண்ணாக இருந்தாங்க.

குழுவினர்: அப்படியா அண்ணே , வேற யாரெல்லாம் படிச்சுப் பெருமை அடைஞ்சாங்க?

குழுத்தலைவர்: பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் முதலிய பெண்கள், தம் இறைவனுக்குப் பாமாலை சூட்டினாங்க.

குழுவினர்: ஆமாண்ணே நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா , திரும்பவும் எனக்கொரு ஐயம். இவ்வளவு பெண்கள் படிச்சிருந்த நம்ம நாட்டில சில நூற்றாண்டுகளா ஏன் பெண்ணடிமைத்தனம் வந்துச்சு?

குழுத்தலைவர்: தம்பி நல்ல கேள்வி கேட்ட, சொல்றேன் கேளு.

ஆணும் பெண்ணும் இயற்கைப் படைப்பிலே 

சமம் என்று நினைச்சாங்க - முன்னோர்கள் 

சரியாக வாழ்ந்தாங்க.... 

இடையில் குடிபுகுந்த மூடப்பழக்கங்களால் 

பெண்களைத் தாழ்த்தினாங்க 

சமத்துவத்தை 

அடியோடு வீழ்த்தினாங்க...

குழுவினர்: அது சரிண்ணே , இன்று பெண்கள் நல்லாப் படிச்சு உயர்ந்த பதவியெல்லாம் பெற்று நாட்டையே ஆளறாங்க. இந்த நிலை எப்படிண்ணே வந்தது?

குழுத்தலைவர்: அது, ஒரு நூற்றாண்டு கால வரலாறு தம்பி. இந்த நிலையை அடைய அவங்க பட்டபாடு சொல்லி முடியாது.

குழுவினர்: அதைத்தான், கேட்கறேன் விரிவாகச் சொல்லுங்கண்ணே!

குழுத்தலைவர்: அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதுக்கு என்று ஆணவமாக் கேட்டவங்க மத்தியிலே குழுவினர்: ஆமா மத்தியிலே

குழுத்தலைவர்: தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராய், சாதனை படைச்சாங்க முத்துலெட்சுமி

குழுவினர்: ஆமா! முத்துலெட்சுமி அடடா! என்ன அருமையான செய்தி. அவங்க வேற என்னெல்லாம் செய்தாங்கண்ணே?

குழுத்தலைவர்: 

பொதுச் சேவைக்கு வந்தாங்க  

புதுமையைப் படைச்சாங்க 

சட்டசபை உறுப்பினராய்ச் 

சரித்திரமாய்  நின்னாங்க 

மகளிருக்கெதிரான கொடுமைகளை 

மாண்புடனே எதிர்த்தாங்க 

மனித குலத்தின் மாணிக்கமாய் 

மக்கள்மனங்களில் நிறைந்தாங்க


பெண்மை - புரட்சி


முத்துலெட்சுமி (1886 - 1968) 

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் 

இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. 

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர். அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

குழுவினர்: என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்.

குழுத்தலைவர்: அவங்களைப் போலவே மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் நல்லா படிச்சவங்க. சமூக சேவகியா இருந்து பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டாங்க.

குழுவினர்: இன்னும் வேறு யாரெல்லாம் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டாங்க அண்ணே ?

குழுத்தலைவர்: சொல்றேன் கேளு தம்பி ...

முடியாது பெண்ணாலே என்கின்ற 

மாயையினை முடக்க எழுந்தவர் யாரு... 

தந்தை பெரியாரு 

விடியாது பெண்ணாலே என்கின்ற 

கேலியினை மிதித்துத் துவைத்தவர் யாரு...

நம்ம பாரதியாரு .....

பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை 

தீருமோவென

இடிமுழக்கம் செய்தவர் யாரு... 

பாரதிதாசனாரு ....

குழுவினர்: இவ்வளவு சேதி கேட்ட நாங்க, பெண் கல்விக்காக நமது அரசாங்கம் என்னென்ன செய்தது என்பதையே கேட்க மறந்து விட்டோம் அண்ணே !

குழுத்தலைவர் : பெண்கல்வி மேம்பாட்டிற்குத் தற்போதைய அரசு மட்டுமல்ல, ஆங்கில அரசே சட்டங்கள் போட்டது தம்பி.

குழுவினர்: என்னண்ணே சொல்றீங்க! நம்ப முடியல. ஆங்கில அரசு சட்டம் போட்டதா? புரியும்படி சொல்லுங்க!

குழுத்தலைவர்: தம்பி 1882இல் ஹண்டர் குழு முதன் முதலில் பெண் கல்விக்குப் பரிந்துரை செய்தது. அந்த அறிக்கையின்படி மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினாங்க.

குழுவினர்: இது புதிய செய்தியா இருக்கே!

குழுத்தலைவர் : அதன் பிறகு, பெண்கள் கல்வி பயில, பல உயர்கல்வி நிறுவனங்களை அரசு உருவாக்குச்சு.


பெண்மை - துணிவு

மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962)


தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.; தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர். தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.


பெண்மை - உயர்வு

பண்டித ரமாபாய் (1858 - 1922)


இவர் சமூகத் தன்னார்வலர். தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்.

குழுவினர்: ஆங்கில அரசு பத்திச் சொன்னீங்க சரி, விடுதலைக்குப் பின் நமது மத்திய, மாநில அரசுகள் பெண் கல்விக்காக என்ன செய்தன அண்ணே!

குழுத்தலைவர்: அதைச் சொல்லாம விடுவேனா தம்பி? 

கற்க வேண்டும் பெண்கள் என்று 

முழங்கியது அரசாங்கம் 

கற்பதனாலேயே நம் நாட்டின் 

நிலையோங்கும் 

பெண்கள் பள்ளிக்கூடங்கள் திறந்தார்கள் 

பெண்களும் கல்வி கற்று உயர்ந்தார்கள்.....

குழுவினர்: நமது தமிழக அரசு நல்ல திட்டங்களையே தந்திருக்குது அண்ணே.


பெண்மை – சிறப்பு


ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

(1870-1960)

பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.


குழுத்தலைவர்: ஆமா ஆமா. அரசுத் திட்டங்கள் மட்டுமல்ல; தனிமனிதப் பங்களிப்பும் இருக்கு தம்பி. இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி, இதுவரைக்கும் 80ஆயிரம் குழந்தைகள் கல்விபெற உதவியா ஒருத்தர் இருந்திருக்காரு.

குழுவினர் : அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் யாரு அண்ணே ?

குழுத்தலைவர்: 2014இல் நோபல் பரிசு வாங்கின பெருமைக்குரியவரு. அவர்தான் நம்ம கைலாஷ் சத்யார்த்தி.

குழுவினர்: எவ்வளவோ செய்திகளை இன்னைக்குச் சொன்னீங்க, இன்னும் ஏதாவது?....

குழுத்தலைவர்: ஏன் தம்பி! இழுக்கற. சொல்றேன் கேளு! பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அதற்காகப் போராடிய வீரச்சிறுமி மலாலா "நோபல் பரிசு" வாங்கினாங்க தெரியுமோ!

குழுவினர்: ஆமாண்ணே நான் கூடக் கேள்விப்பட்டேன்.

குழுத்தலைவர்: இவ்வளவு நேரம் என்னுடைய வில்லுப்பாட்டால என்ன தெரிஞ்சுக்கிட்ட தம்பி. மக்களுக்குச் சுருக்கமாகச் சொல்லு!

யார் இவர்? 

பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997).



பெண்மை - அறிவு 

சாவித்திரிபாய் பூலே

(1831 - 1897) 


1848 இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பட ள் ளி யில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

குழுவினர் : 

பெண்கள் படிக்கணும் நாட்டின் கண்கள் திறக்கணும் 

இன்னும் படிக்கணும் உயர்வு என்றும் விளையணும் 

ஆணும் பெண்ணும் சரிநிகரென்னும் அறிவு வளரணும் 

அன்பினாலே அகிலம் பூக்கும் உண்மை புரியணும் ... (பெண்கள்)

குழுத்தலைவர்: பரவாயில்லை நல்லாவே புரிஞ்சுக்கிட்ட தம்பி. இத்தனை போரட்டங்களுக்குப் பிறகுதான் இன்று பெண்கள் அதிகமாகக் கல்வி கற்க வாராங்க. உயர்கல்வி கற்று எல்லாத் துறைகளிலும் பணியாற்றித் திறமையாகச் செயல்படுறாங்க.

குழுவினர்: அடடே! இது எவ்வளவு பெரிய சேதி அண்ணே ! என்னண்ணே ... நீங்க சொன்னதைக் கேட்டுக்கிட்டே இருந்ததாலே நேரம் போனதே தெரியல.

குழுத்தலைவர்: சரி சரி. அப்படின்னா மங்களம் பாடிடுவோம்!

அனைவரும்: 

வாழியவே பெண்மை வாழியவே

வளமான பெண்கல்வி வாழியவே 

சமத்துவம் வாழியவே 

புவி வளம் பெறவே 

புதிய உலகம் நலம்பெறவே

(வாழியவே பெண்மை வாழியவே)


தெரிந்து தெளிவோம்

பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள் 

ஈ.வெ.ரா. - நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது.

சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் - கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது. காண்க: tavikaspedia.in

தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் (1903 -1943) 

மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்; இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

கோத்தாரி கல்விக் குழு

1964ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

சாரதா சட்டம்

பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே, அதைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் (1906-1955) 

தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார். சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

Tags : Chapter 5 | 9th Tamil இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal : Prose: Kalviyel siranda pengal Chapter 5 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : உரைநடை: கல்வியில் சிறந்த பெண்கள் - இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்