Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | இலக்கணம்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் | 7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael

   Posted On :  12.07.2022 11:51 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்

இலக்கணம்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : இலக்கணம்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கற்கண்டு

ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்




ஓரெழுத்து ஒருமொழி

ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள்.

இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.

தெரிந்து தெளிவோம் 

ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்

1. ஆ- பசு 2. ஈ- கொடு 3. ஊ- இறைச்சி 4. ஏ- அம்பு 5. ஐ- தலைவன் 6. ஓ - மதகுநீர் தாங்கும் பலகை 7. கா- சோலை 8. கூ- பூமி  9. கை- ஒழுக்கம் 10. கோ-அரசன் 11. சா- இறந்துபோ 12. சீ- இகழ்ச்சி 13. சே- உயர்வு 14. சோ- மதில்   15. தா - கொடு 16. தீ- நெருப்பு 17. தூ- தூய்மை 18. தே- கடவுள் 19. தை- தைத்தல் 20. நா- நாவு 21. நீ- முன்னிலை ஒருமை 22. நே- அன்பு  23. நை- இழிவு 24. நோ வறுமை 25. பா- பாடல் 26. பூ- மலர் 27. பே - மேகம் 28. பை- இளமை 29. போ- செல் 30. மா- மாமரம் 31. மீ- வான் 32. மூ - மூப்பு 33. மே- அன்பு 34. மை- அஞ்சனம் 35. மோ- மோத்தல் 36. யா- அகலம்  37. வா- அழைத்தல் 38. வீ- மலர் 39. வை- புல் 40. வௌ - கவர் 41. நொ- நோய் 42 . து- உண்.


பகுபதம்

வேலன், படித்தான் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

வேலன் என்னும் சொல்லை வேல் + அன் எனப் பிரிக்கலாம்.

படித்தான் என்னும் சொல்லை படி + த் + த் + ஆன் எனப்பிரிக்கலாம்.

இவ்வாறு சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர். பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.


பெயர்ப்பகுபதம்

பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை, பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர்

(.கா.) 

1. பொருள் - பொன்னன் (பொன் + அன்)

2. இடம் - நாடன் (நாடு + அன்)

3. காலம் - சித்திரையான் (சித்திரை + ஆன்

4. சினை - கண்ணன் (கண் + அன்) 

5. பண்பு - இனியன் (இனிமை + அன்

6. தொழில் - உழவன் (உழவு + அன்)


வினைப்பகுபதம்

பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்

(.கா.) உண்கின்றான் – உண் + கின்று + ஆன்


பகுபத உறுப்புகள்

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவையாகும்.

பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும்வினை பகுபதத்தின் பகுதி கட்டளையாகவே அமையும்.

பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்

பகுதிக்கும் விகுதிக்கும்  இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும். 

பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்

பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்

பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்

(.கா.) வந்தனன் - வா() + த்(ந்) + த் + அன் + அன் 

வா - பகுதி. இது எனக் குறுகி இருப்பது விகாரம்

த் - சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை 

அன்சாரியை 

அன்ஆண்பால் வினைமுற்று விகுதி.


பகாப்பதம்

மரம், கழனி, உண், எழுது ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவற்றை மேலும் சிறிய உறுப்புகளாகப் பிரிக்க முடியாதல்லவா? இவ்வாறு பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.

பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு

(.கா.) பெயர்ப் பகாப்பதம்   - நிலம், நீர், நெருப்பு, காற்று.

வினைப் பகாப்பதம் - நட, வா, படி, வாழ்

இடைப் பகாப்பதம்  - மன், கொல், தில், போல்.

உரிப் பகாப்பதம் - உறு, தவ, நனி, கழி.


Tags : Term 2 Chapter 2 | 7th Tamil பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael : Grammar: Oraluthu oru Mozhi, pagu patham, pagaa patham Term 2 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : இலக்கணம்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்