Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: வாழ்விக்கும் கல்வி

பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: வாழ்விக்கும் கல்வி | 7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael

   Posted On :  12.07.2022 01:20 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்

உரைநடை: வாழ்விக்கும் கல்வி

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : உரைநடை: வாழ்விக்கும் கல்வி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு 

உரைநடை உலகம் 

வாழ்விக்கும் கல்வி



நுழையும்முன்

உலகில் பலவகையான செல்வங்கள் உள்ளன. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மையுடையன. கல்வி கற்பதற்குக் கால எல்லை இல்லை. கல்வியின் இன்றியமையாமை, கற்க வேண்டிய நூல்கள், கற்கும் கால அளவு ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்வோம்.


உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப்பிறவி தனித்தன்மை உடையது. ஏனென்றால் மனிதப் பிறவிக்குத்தான் எதிர்காலம் சொல்ல முடியாது. ஒரு வாழைக்கன்று வைத்தால் அஃது எதிர்காலத்தில் வாழைமரமாகி வாழையிலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு ஆகியவற்றைத் தரும் என்று வைக்கும்போதே சொல்லலாம். ஒரு பசுமாடு கன்று ஈன்றால் அஃது எதிர்காலத்தில் பால் தரும் என்று சொல்லிவிடலாம். மனிதன் எதிர்காலத்தில் என்ன ஆவான் என்று சொல்லவே முடியாது. அதனால்தான் இஃது அருமையான பிறவி.

ஒரு வீட்டில் குழந்தை பிறந்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்டால், ஆண்குழந்தை அல்லது பெண்குழந்தை என்றுதான் பெற்ற தாய் சொல்லுவாள். அப்படி இல்லாமல் ஒரு மாவட்ட ஆட்சியர் பிறந்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா? மகாத்மா காந்தி பிறந்த உடனே அவரது தாயார் புத்திலிபாயிடம் போய் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 'என்ன குழந்தை?' என்று கேட்டார்கள். ஆண் குழந்தை என்றுதானே அந்த அம்மா சொல்லி இருப்பார். அப்படி இல்லாமல் "இப்போதுதான் மகாத்மா காந்தியடிகள் பிறந்திருக்கிறார். உங்களுக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் போகிறார்" என்றா சொல்லியிருப்பார்? 

காலமறிதல்

உலகில் மிகவும் அருமையானது என்னவென்றால் அது காலம்தான். மற்றவை எல்லாம் போனால் வரும். காலமும் நேரமும் போனால் வராது. மேசை நாற்காலி போனால் வரும். ஆனால் தேர்வு நேரத்தில் ஒரு பையன் நான்கு நாள்களை வீணடித்து விட்டால் போனது போனதுதான். இன்னொரு மாணவனிடத்திலே கடன் கேட்க முடியாது. "ஒரு நாலு நாள் இருந்தால் கொடுடா! மனப்பாடம் பண்ணிவிட்டுத் திரும்பத் தந்து விடுகிறேன்" என்றெல்லாம் கேட்க முடியாது. இதற்காகத்தான் காலமறிதல், கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களையும் திருவள்ளுவர் எழுதியுள்ளார்

அழியாச்செல்வம்

இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும்; அழிந்துவிடும். நான் வெளியூர் சென்றபோது நண்பரைக் கேட்டேன், "இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே இங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்ததே, அஃது எங்கே?" என்று. "அது புயல் காற்றிலே விழுந்து விட்டது" என்று சொன்னார். அஃது அழிகிற செல்வம். "அங்கே ஒரு பெரிய கட்டடம் இருந்ததே, அஃது எங்கே?" என்று கேட்டேன். "அது மழை பெய்து இடிந்து விட்டது" என்று பதில் வந்தது. இதுவும் அழிகிற செல்வம்.

நாம் பேசும் போது, "அதோ போகிறாரே, அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு இலட்ச ரூபாய் வைத்திருந்தார். இப்போது எல்லாம் செலவாகிப்போய் இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார்" என்று சொல்வோம். இஃது அழிகிற செல்வம். கல்வி அப்படிப்பட்டதன்று. "அதோ போகிறாரே அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றிருந்தார். இப்போது எல்லாம் செலவாகிப்போய் வெறும் பத்தாம் வகுப்பு ஆகி விட்டார்" என்று சொல்ல மாட்டோம். ஏனென்றால் கல்வி அழியாதது. அதனால்தான்,

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை"  (குறள் 400)

என்று வள்ளுவர் கூறுகிறார்.

ஒளிவிளக்கு

கல்வி ஓர் ஒளிவிளக்கு. அதாவது இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்குவது. அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிக் கற்ற கல்வியைப் பலருக்கும் அளிக்க வேண்டும். அப்படிப் பலருக்கும் ஒளி தருவதுதான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

கற்றவரும் கல்லாதவரும்

கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் போல் குறை கூறியவர் வேறு எவரும்  இல்லை .

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 

கற்றாரோடு ஏனை யவர் (குறள் 410)

என்னும் திருக்குறளில் கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என்கிறார். ஏன் விலங்கு என்று சொன்னார்? அது சொன்னால் கேட்காது. மாடு ஒன்று தெருவில் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த மாட்டைப் பார்த்து, "நான் வீட்டுக்குப் போகிறேன். என் பின்னாலேயே வா" என்றால் வருமா? நம்கூட அது வருவதற்குக் கையில் பச்சைப்புல் வைத்துக்கொண்டு காட்டவேண்டும். அது மட்டுமில்லாமல் விலங்கு நல்ல செயல்களைத் தானாகச் செய்யாது.

ஒரு பசுமாடு இருக்கிறது. ஒரு பொருளை உருட்ட வேண்டும் என்றால் அது தானாகவே போய் உருட்டிவிடும். ஒருபொருளை உடைக்க வேண்டும் என்றால் தானாகவே போய் உடைத்துவிடும். ஓர் ஆளை முட்ட வேண்டுமென்றால் தானாகவே போய் முட்டிவிடும். இவ்வளவும் கெட்ட செயல்கள். இவ்வளவும் செய்த அந்தப் பசுமாடு பால் கொடுப்பது நல்ல காரியம். ஆனால் அதைத் தானாகக் கொடுக்காது. தானாகவே நம் வீட்டிற்குள் வந்து, 'எங்கே சொம்பைக் காணோமே?' என்று அதுவாகவே எடுத்து வந்து பாலைக் கொடுத்து விட்டுப் போகாது. நல்ல செயலை மனிதன் தானாகச் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது. நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று வள்ளுவர் இதற்காகத்தான் சொன்னார். அந்த அறிவைப் பெற உதவுவது கல்வி.

கல்வியும் பள்ளியும்

கல்வி கற்பதற்காகவே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களால்தான் இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும். மாணவர்களில் எத்தனையோ மருத்துவர்கள் இருப்பார்கள். எத்தனையோ பொறியியலாளர்கள் இருப்பார்கள். எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் இருப்பார்கள். அதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்கள் ஆசிரியர்கள். அதை நோக்கிச் செலுத்துவதற்காகத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்" என்றார். ஏன் அப்படிச் சொன்னார் பாரதி? ஏனெனில் கல்விக் கூடங்களில்தான் குழந்தைகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்கள் எல்லோரும் எதிர்காலத்திலே மேதைகளாக ஆகவேண்டும். இந்த உலகமே போற்றக்கூடிய அறிஞர்களாக ஆகவேண்டும். அதற்காகத்தான் கோயில்களாகிய பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைக் கொண்டு வந்து விடுகிறோம்.

ஓர் ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர்களெல்லாம் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என்று படித்து வெற்றி பெற்றார்கள். அதற்குப் பிறகு இந்த ஆசிரியர் என்ன செய்வார்? அவர்களுக்கெல்லாம் வாழ்த்துக் கூறி, 'நீங்கள் எல்லாம் மேலே நன்றாகப் படித்துக் கல்லூரியில் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்குங்கள்’ என்று சொல்லித்தான் அனுப்புவார். அப்படியில்லாமல் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் திருப்பியா கேட்பார்? 'என்னிடம் இருந்த கல்வியை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டேன். எல்லாக் கல்வியையும் நீங்களே எடுத்துக்கொண்டு போய்விட்டால் அடுத்து வருபவர்களுக்கு நான் எப்படிச் சொல்லிக் கொடுப்பேன்? நான் சொல்லிக்கொடுத்த கல்வியை எல்லாம் திருப்பி கொடுங்க’ என்றா கேட்பார்? கேட்கமாட்டார். ஏனென்றால் கல்வியானது கொடுக்கக் கொடுக்க வளரும். பணம் கொடுக்கக் கொடுக்க குறையும்.

கற்க கசடற

படிக்க வேண்டிய நூல்களையும் நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். சிலர் பத்துப் புத்தகங்கள் எழுதுகிறார்கள். சிலர் ஐம்பது புத்தகங்கள் எழுதுகிறார்கள். ஆனால் திருவள்ளுவர் வாழ்நாள் முழுக்க ஒரே ஒரு நூல்தான் எழுதி இருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவு சிந்தித்துச் சிந்தித்து எழுதி இருக்க வேண்டும்!

சில நூல்களைப் பற்றிச் சிந்தனை செய்யவே வேண்டாம். சில நூல்கள் படித்தவுடனேயே விளங்கும். சில நூல்களைப் படித்து விட்டு ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பூமியிலே விளைகின்ற பொருள்களில் சில பூமிக்கு மேலேயே விளையும். கத்தரிக்காய், வாழைக்காய், கீரை இவையெல்லாம் பூமிக்கு மேலே விளையும். சில மண்ணுக்குள்ளேயே உண்டாகி இருக்கும். அவற்றை நாம்தான் தோண்டி எடுக்க வேண்டும். அதுபோல நாம் படிக்கும் நூல்களில் சிலவற்றை ஒரு முறை படித்தால் போதாது. மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால்தான் அதன் பொருள் விளங்கும். அப்படிப்பட்ட நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து படிக்க வேண்டும். அதனால்தான் திருவள்ளுவர் ‘கற்க - கசடற - கற்பவை' என்று சொன்னார். எதைப் படிக்க வேண்டுமோ அதைத்தான் படிக்க வேண்டும். எனவே, நாம் வாழ்நாள் முழுவதும் கற்போம்; கற்க வேண்டியவற்றைக் கற்போம்; நூலின் உட்பொருளை உணர்ந்து கற்போம்; அதன்படி நடந்து வாழ்வில் உயர்வடைவோம்.


நூல் வெளி


திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ.முனிசாமி. நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர். வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.



Tags : Term 2 Chapter 2 | 7th Tamil பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael : Prose: Valvikkum kalvi Term 2 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : உரைநடை: வாழ்விக்கும் கல்வி - பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்