Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி

பாரதிதாசன் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி | 7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael

   Posted On :  12.07.2022 11:48 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்

கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி - பாரதிதாசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கவிதைப்பேழை

இன்பத்தமிழ்க் கல்வி



நுழையும்முன்

பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார். வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார். அதை நாமும் படித்துச் சுவைப்போம்.


ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட

என்னை எழுதென்று சொன்னது வான் 

ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்

ஓவியந் தீட்டுக என்றுரைக்கும் 

காடும் கழனியும் கார்முகிலும் வந்து

கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும் 

ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர் 

அன்பினைச் சித்திரம் செய்க என்றார்


சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்

தோகை மயில்வரும் அன்னம் வரும் 

மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்

மாணிக்கப் பரிதி காட்சி தரும் 

வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்

வெற்பென்று சொல்லி வரைக என்னும் 

கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து 

கூவின என்னை - இவற்றிடையே


இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள

என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார் 

அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்

ஆவியில் வந்து கலந்ததுவே 

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் 

துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் 

தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்!

- பாரதிதாசன்


சொல்லும் பொருளும் 

எத்தனிக்கும்  முயலும் 

வெற்பு மலை 

கழனி வயல் 

நிகர் சமம்

பரிதி - கதிரவன் 

அன்னதோர் அப்படிஒரு 

கார்முகில் மழைமேகம் 

துயின்றிருந்தார்  -  உறங்கியிருந்தார்


பாடலின் பொருள்

கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும்எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக” என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள்அன்பினைக் கவிதையாக எழுதுக” என்றனர்.

சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள், மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் என்றனர். இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.

ஆனால் துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.


நூல் வெளி


கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன். இவர் கவிதை,  கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது

பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.


Tags : by Bharathidasan | Term 2 Chapter 2 | 7th Tamil பாரதிதாசன் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael : Poem: Inpa Tamil kalvi by Bharathidasan | Term 2 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி - பாரதிதாசன் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்