Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் | 8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu

   Posted On :  16.07.2023 10:00 pm

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஏழு

கற்கண்டு

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்


கதையை படித்தேன்; எழுதி கொண்டேன். அப்படி சொன்னது, எப்படி தெரியும்?

மேலே உள்ள தொடர்களைப் படித்துப் பாருங்கள். இவற்றை இயல்பாகப் படிக்க இயலாதவாறு சொற்களுக்கு இடையே ஓர் ஓசை இடைவெளி இருப்பதை உணர முடிகிறதல்லவா? அவற்றைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.

கதையைப் படித்தேன்; எழுதிக் கொண்டேன். அப்படிச் சொன்னது, எப்படித் தெரியும்?

இப்போது இயல்பாகப் படிக்க முடிகிறது அல்லவா? மேலும் நாம் பேசும்போது இவ்வாறுதான் பேசுகிறோம். ஒரு சொல்லின் முதலெழுத்து , , , ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும். இதனை வல்லினம் மிகல் என்று கூறுவர். எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகும் என்று கூறமுடியாது. மிதந்து சென்றது, செய்து பார்த்தான், படித்த கவிதை, பெரிய தாவரம் ஆகிய சொற்களில் வல்லினம் மிகவில்லை என்பதைக் கவனியுங்கள். இவ்வாறு வல்லின மெய் மிகக்கூடாத இடங்களை வல்லினம் மிகா இடங்கள் எனக் குறிப்பிடுவர்.

வல்லின மெய்களைச் சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பது மட்டுமன்று. செய்திகளில் கருத்துப் பிழையோ, பொருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கும் வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன. மண்வெட்டி கொண்டு வா.

மண்வெட்டிக் கொண்டு வா.

இவற்றில் முதல் தொடர் மண்வெட்டியை எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இரண்டாம் தொடர் மண்ணை வெட்டி எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இவ்வாறு பொருள் தெளிவை ஏற்படுத்தவும் வல்லினம் மிகுதல் உதவுகிறது.

வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் குறிப்பிடுவர்.

 

வல்லினம் மிகும் இடங்கள்

அந்த இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.

(எ.கா.) அந்தப்பக்கம். இந்தக்கவிதை.

எந்த என்னும் வினாத்திரியை அடுத்து வல்லினம் மிகும்.

(எ.கா.) எந்தத்திசை? எந்தச்சட்டை?

இரண்டாம் வேற்றுமை உருபாகிய வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.  (எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி.

நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.

இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும். (எ.கா.) எழுதிப் பார்த்தான். ஓடிக் கனைத்தான்.

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும். (எ.கா.) பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார்.

எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும்.

(எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல்,

உவமைத்தொகையில் வல்லினம் மிகும். (எ.கா.) மலர்ப்பாதம், தாய்த்தமிழ்.

உருவகத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.

எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும். (எ.கா.) எட்டுப்புத்தகம், பத்துக்காசு.

அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

(எ.கா) அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?

திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்.

(எ.கா.) கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு, தெற்குப்பக்கம்.

மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.

(எ.கா.) மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் + பாறை = வட்டப்பாறை.

 

வல்லினம் மிகா இடங்கள்

எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) தம்பி படித்தான், யானை பிளிறியது.

அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.

(எ.கா.) அது சென்றது. இது பெரியது, எது கிடைத்தது?

பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதிய பாடல், எழுதாத பாடல்.

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை) வல்லினம் மிகாது. (எ.கா.) இலை பறித்தேன், காய் தின்றேன்.

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது. (எ.கா.) தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்.

வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு

அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார்.

உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) தாய்தந்தை, வெற்றிலைபாக்கு

Tags : Chapter 7 | 8th Tamil இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu : Grammar: Vallinam Migum Etengallum mega etengalum Chapter 7 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் - இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு