Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார்

இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார் | 8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu

   Posted On :  15.07.2023 10:27 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஏழு

விரிவானம்

அறிவுசால் ஒளவையார்


நுழையும்முன்

கல்வி அறிவில் சிறந்த அறவோரையும் நல்லொழுக்கம் மிக்க மக்களையும் கொண்டது நம் தமிழ்நாடு. இவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மன்னர்களின் கடமையாகக் கருதப்பட்டது. அறிவிற் சிறந்த புலவர்கள் மன்னர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி நாட்டைப் பாதுகாக்க உதவினர். அவ்வாறு இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற இருந்த போரை ஒனவையார் தடுத்த நிகழ்வை நாடகமாகப் படித்துச் சுவைப்போம்.

 

காட்சி - 1

இடம் : அதியமான் அரண்மனை

நாடக மாந்தர்கள் : அதியமான், ஒளவையார், அமைச்சர்.


ஔவையார்: நாட்டுமக்கள் நலனையே நாளெல்லாம் நினைத்து நல்லாட்சி செய்யும் அதியமான் நெடுமான் அஞ்சியே வணக்கம்.

அதியமான்: அருந்தமிழ்க் கவிதைகளால் அனைவரையும் கவர்ந்த ஒளவையே வாருங்கள்! வாருங்கள்! வணக்கம்.

ஔவையார்: ஊர் ஊராகச் சென்று மக்களையும் மன்னர்களையும் கவிதையால் மகிழ்வித்து வந்த என்னை, உன் அன்பினால் கட்டிப்போட்டுவிட்டாய். நானும் நீண்டகாலமாக உன் அரண்மனையிலேயே தங்கிவிட்டேன்.

அதியமான்: நீங்கள் என் அரண்மனையில் தங்கியிருப்பது எனக்குக் கிடைத்த பெரும்பேறு.

ஒளவையார்: அதெல்லாம் இருக்கட்டும். காலையிலிருந்து உன்னை அரண்மனையில் காணவில்லையே, எங்கே சென்றிருந்தாய்?

அதியமான்: காட்டுவளத்தைக் கண்டுமகிழ்ந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. அதனால்தான் இன்று நம் அமைச்சரோடும் வீரர்கள் சிலரோடும் காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே இந்தக் கனியைப் பறித்தேன். இதைச் சாப்பிட்டுப் பார்த்துச் சுவை எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் தாயே.

ஒளவையார்: நீ தரும் கனி என்றால் அது சுவையாகத்தான் இருக்கும். பல கடல்களுக்கு அப்பால் எங்கோ தொலைவில் இருக்கும் ஒரு நாட்டிலிருந்து இந்தத் தமிழ்நாட்டிற்குக் கரும்பைக் கொண்டு வத்தவர்கள் உனது முன்னோர்கள்தானே? இனிப்புக்கும் உங்கள் குலத்திற்கும் தொடர்பு உண்டு அவ்லவா? அதனால் நீ கொடுக்கும் கனியும் இனிக்கத்தானே செய்யும்?

அதியமான்: அந்தக் கரும்பைவிட இனிக்கிறது தங்கள் பேச்சு. சரி, இதோ இந்தக்கனியைச் சுவைத்துப் பாருங்கள்.

(அதியமான் நெல்லிக்கனியை ஔவையாரிடம் தருகிறான். ஔவையார் அதனை வாயிலிட்டுச் சுவைக்கிறார்.)

ஒளவையார்: அடடா! என்ன சுவை! என்ன சுவை! இவ்வளவு சுவையுள்ள கனியை நான் இதுவரை உண்டதே இல்லை. என்ன கனி இது

அதியமான்: இது நெல்லிக்கனியின் ஒரு வகை.

அமைச்சர்: தாயே, நமது அரசர் மிகவும் எளிதாகக் கூறிவிட்டார். இஃது எங்கும் எளிதாகக் கிடைக்கும் கனியன்று. கிடைப்பதற்கு அரிதான நெல்லிக்கனி இது, எப்போதாவது ஒருமுறைதான் காய்த்துப் பழுக்கும். இன்று நாங்கள் காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்தபோது ஒரு மலையுச்சியில் இருந்த கருநெல்லி மரத்தில் இக்கனி பழுத்திருந்தது. அந்த மரத்தில் நமது வீரர்களால் ஏறமுடியவில்லை. பிறகு நமது அரசரே முயன்று மரத்தில் ஏறி இந்தக் கனியைப் பறித்தார்.

ஒளவையார்: (வியப்புடன்) என்ன, அதியமானே மலையுச்சியில் இருந்த மரத்தில் ஏறி இதனைப் பறித்தானா?

அமைச்சர்: அது மட்டுமன்று. இக்கனியை உண்டவர்கள் நோய்நொடியின்றி நீண்டகாலம் வாழ்வார்கள் என்று பெரியோர் கூறுவர்.

ஔவையார்: அதியமானே! என்ன செயல் செய்துவிட்டாய்? நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய நீ இதனை உண்ணாமல் எனக்குக் கொடுத்துவிட்டாயே. முன்பே தெரிந்திருந்தால் இதனை நான் உண்ணாமல் உன்னையே சாப்பிட வைத்திருப்பேனே.

அதியமான்: என்னைப்போன்ற ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அதனால்தான் நான் எதுவும் கூறாமல் நெல்லிக்கனியை உங்களை உண்ணச்செய்தேன்.

தெரிந்து தெளிவோம்

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கீந் தனையே.

- ஒளவையார்

ஒளவையார்: அதியமானே! தமிழின்மீது நீ கொண்டுள்ள பற்று என் உள்ளத்தை உருகச் செய்கிறது. உன்னைப் புகழமுடியாமல் என் தமிழே தடுமாறுகிறது.

அதியமான்: அப்படிச் சொல்வாதீர்கள். உங்கள் தமிழுக்குத் தடுமாற்றமும் இல்லை. தாழ்வும் இல்லை. உங்கள் நாவில் பிறக்கும் தமிழ் என்றும் நிலைபெற்று வாழும். அதில் என் பெயரும் ஒட்டியிருக்கும். அதுதான் எனக்கு மகிழ்ச்சி.

 

காட்சி 2

இடம் : அதியமான் அரண்மனை

நாடக மாந்தர்கள் : அதியமான், ஒளவையார்

ஔவையார்: மக்களின் முகங்களில்கூடக் கவலையின் நிழல் படியக்கூடாது என்று கருதும் அதியமானே, இன்று உன் முகத்தில் கவலையின் இருள் கவிழ்ந்திருப்பதன் காரணம் என்னவோ?

அதியமான்: இன்று காலை நம் ஒற்றர்கள் கொண்டுவந்த ஒரு செய்தி என் உள்ளத்தில் சிறு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மன்னன் தொண்டைமான் நம்மோடு பகைமை கொண்டவன் என்பது தாங்கள் அறிந்ததுதானே? அவன் இப்போது நம்மீது படையெடுத்துவர ஏற்பாடு செய்துவிட்டானாம். நம் தலைக்குமேல் போர்மேகங்கள் சூழ்ந்துவிட்டன.

ஔவையார்: அதியமான் நெடுமான் அஞ்சியே, உன் பெயரில்தான் அஞ்சி என்னும் சொல் இருக்கிறதேயன்றி, நீ அஞ்சி நான் ஒருநாளும் கண்டதில்லையே. போர் உனக்குப் புதிதா என்ன?

அதியமான்: போர் எனக்குப் புதிதும் அன்று. நான் போரைக் கண்டு அஞ்சுபவனும் அல்லேன். ஆனாலும்....

ஓளவையார்: ஆனாலும் ஏன் இந்தக் கலக்கம்? ஈரத்திலும் வீரத்திலும் உனக்கு இணைசொல்ல யாருண்டு? நீர்நிலையில் படுத்திருக்கும் யானையானது, தன்மீது ஏறிக்குதித்தும் தந்தங்களைக் கழுவியும் விளையாடும் சிறுவர்களிடம் பணிந்து அன்புகாட்டும். அதுபோல நீயும் எம்மைப் போன்ற புலவர்களிடம் அன்புகாட்டிக் காட்சிக்கு எளியவனாக விளங்குகிறாய். அதே யானை, போர்க்களத்தில் பகைவரின் படையை வெருண்டோடச் செய்வதுபோல நீயும் பகைவரை எதிர்த்து வெல்கிறாய். அத்தகைய வீரமுடைய நீ இன்று போரைக்கண்டு தயங்கலாமா?

அதியமான்: தமிழ் அறிந்த அன்னையே! நான் எத்தனையோ போர்க்களங்களைக் கண்டவன். பகைவர்களை வென்றவன் என்பது தங்களுக்குத் தெரியாததன்று. ஆனால், ஒவ்வொரு போரின்போதும் எத்தனை உயிரிழப்புகள்? எவ்வளவு அழிவு? தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தம்பிதங்கைகள் என எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர்வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது. எனவே, இந்தப்போரைத் தவிர்த்தால் என்ன?

ஔவையார்: அன்பிற்சிறந்த அதியமானே, இப்போதுதான் உன் உள்ளம் எனக்குப் புரிந்தது. உன் கவலையை நான் தீர்க்கிறேன். நான் இப்போதே தொண்டைமானிடம் செல்கிறேன். அவனிடம் பேசிப் போர் ஏற்படாதவாறு தடுக்கிறேன்.

அதியமான்: ஆனால்...


ஔவையார்: நீ என்ன நினைக்கிறாய் என எனக்குப் புரிகிறது. உன் தன்மானத்துக்கும் வீரவுணர்வுக்கும் சிறிதுகூட இழுக்கு ஏற்படாமல் நான் நடந்துகொள்வேன். நான் சென்றுவருகிறேன்.

(ஔவையார் செல்கிறார். அதியமான் திகைத்து நிற்கிறான்)

 

காட்சி - 3

இடம் : தொண்டைமான் அரண்மனை

நாடக மாந்தர்கள் தொண்டைமான், ஒளவையார், படைத்தலைவர்.

தொண்டைமான்: படைத்தலைவரே, நமது படையினர் போருக்கு ஆயத்தமாக உள்ளனரா?

படைத்தலைவர்: படைவீரர்களும் ஆயத்தமாக உள்ளனர். போர்க் கருவிகளும் தேவைக்கு அதிகமாகவே உள்ளன அரசே.

தொண்டைமான்: மகிழ்ச்சி. நம் படையின் பெருக்கத்தைக் கண்டு அந்த அதியமான் அதிர்ந்துபோக வேண்டும்.

படைத்தலைவர்: அதியமான் இப்போதே அதிர்ந்துதான் போயிருக்கிறார் அரசே. அதனால்தான் அவர் சமாதானம் வேண்டிப் புலவர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார்.

தொண்டைமான்: என்ன, அதியமான் தூது அனுப்பியுள்ளானா?

படைத்தலைவர்: ஆம் அரசே. சற்றுமுன்தான் நமது ஒற்றரிடமிருந்து செய்தி வந்தது. அதியமானின் தூதுவராக ஔவையார் நமது அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கிறாராம்.

தொண்டைமான்: வரட்டும் வரட்டும். அஞ்சியிடமிருந்து தூது வரும் ஒளவை நம் போர்க்கருவிகளின் பெருக்கினைக் கண்டு அஞ்சி ஓடப்போகிறார் பாருங்கள்.

படைத்தலைவர்: அதோ ஔவையாரே வந்துவிட்டார்.

(ஔவையார் வருகிறார்.)

தொண்டைமான்: போரை நிறுத்த வந்திருக்கும் ஔவையே வருக! வருக!

ஒளவையார்: தொண்டைமான் தரும் வரவேற்பைப் பார்த்தால் என் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தோன்றுகிறதே!

தொண்டைமான்: என் பகைவரின் நாட்டிலிருந்து வந்தாலும் தாங்கள் தமிழ்ப்புலவர் அல்லவா? தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஒளவையார்: நீயும் தமிழின்மீது அன்புடையவன் என்பதை அறியும்போது நானும் மகிழ்ச்சியடைகிறேன்.

தெரிந்து தெளிவோம்

இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியன் நகரவ்வே அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில மாதோ என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே

- ஔவையார்

தொண்டைமான்: அந்த மகிழ்ச்சியோடு எனது படைக்கலக் கொட்டிலைப் பார்த்துவரலாம் வாருங்களேன்.

ஒளவையார்: போர்க்கருவிகளைப் பார்த்து நான் என்ன செய்யப்போகிறேன்?

தொண்டைமான்: எத்துணைப் பெரிய படைவலிமை உடைய அரசரோடு உங்கள் அதியமான் மோதப்போகிறான் என்பதை நீங்கள் அறியவேண்டாமா?

ஔவையார்: அதையும்தான் பார்ப்போம் வா.

 

காட்சி - 4

இடம் : தொண்டைமானின் படைக்கலக் கொட்டில்

நாடக மாந்தர்கள் : தொண்டைமான், ஔவையார்,

தொண்டைமான்: என் படைக்கருவிகளைப் பாருங்கள் ஔவையாரே! இவ்வளவு பெரிய படைக்கலக் கொட்டிலை இதற்கு முன் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.

ஒளவையார்: ஆமாம். வில், அம்பு, வேல், ஈட்டி, வாள், கேடயம், மழு என எத்தனை கருவிகள்! ஒவ்வொன்றிலும் எத்தனை வகைகள்! ஒவ்வொரு வகையிலும் எத்தனை எண்ணிக்கை!

தொண்டைமான்: பார்க்கும்போதே வியப்பாக இருக்கிறது அல்லவா?

ஒளவையார்: ஆமாம். கருவிகளின் அளவு மட்டுமன்றி, அவற்றை அழகாக அடுக்கி வைத்திருக்கும் முறையும் கண்களைக் கவர்கிறது. எல்லாக் கருவிகளும் புத்தம்புதியனவாக, நெய் பூசப்பெற்று, மாலையும் மயில்தோகைகளும் அணிவிக்கப்பட்டு எழிலாகக் காட்சியளிக்கின்றன.

தொண்டைமான்: உங்கள் அதியமானின் படைக்கருவிகளைப்பற்றிச் சொல்லுங்களேன்.

ஓளவையார்: அதை ஏன் கேட்கிறாய்? அவை இவ்வளவு அழகாக இல்லை. அதியமான் அடிக்கடி போர்புரிந்துகொண்டே இருப்பதால், அவனது படைக்கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக்கறைகளுடன் நுனி ஒடிந்தும் கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்றன.

(தொண்டைமானின் முகம் சுருங்குகிறது)

ஔவையார்: தொண்டைமானே ஏன் உன் முகம் மாறிவிட்டது?

தொண்டைமான்: உங்கள் சொற்கள் என்னைக் குழப்பிவிட்டன.

ஒளவையார்: என்ன குழப்பம்?

தொண்டைமான்: என் படைக்கருவிகளின் அளவையும் அழகையும் பாராட்டிக் கூறினீர்கள். அதைக் கேட்ட என் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.

ஔவையார்: உண்மைதான். உனது படைக்கருவிகள் புது மெருகு குறையாமல் அப்படியே இருக்கின்றன.

தொண்டைமான்: அடுத்ததாக நீங்கள் கூறிய செய்திதான் என்னைச் சிந்திக்க வைத்துவிட்டது. அதியமானின் படைக்கருவிகள் போரில் பயன்படுத்தப்பட்டு வளைந்தும் நெளிந்தும் கிடக்கின்றன என்று கூறினீர்களே, அதுதான் எனக்கு உண்மையைப் புரியவைத்தது.

ஔவையார்: என்ன உண்மையைப் புரிந்துகொண்டாய்?

தொண்டைமான்: என்னிடம் கருவிகள்தாம் மிகுதியாக உள்ளள. நான் இதுவரை போர்க்களத்தைக் கண்டதில்லை. ஆனால் அதியமான் பல போர்களை நடத்தி வெற்றி கண்டவன். அவனோடு போரிடுவது எத்தகைய அழிவைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஔவையார்: அருமை! அருமை! நான் கூறியதன் உட்பொருளைத் தெளிவாகப் புரிந்துகொண்டாய்.

தொண்டைமான்: என் கண்களைத் திறந்த தாயே, போர் வேண்டாம் என்று அதியமானிடம் கூறிவிடுங்கள்.

ஒளவையார்: மிகவும் மகிழ்ச்சி தொண்டைமானே. அவ்வாறே கூறிவிடுகிறேன். போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும். நான் சென்று வருகிறேன்.

(ஒளவையார் விடைபெற்றுச் செல்கிறார்.)

(திரை)

Tags : Chapter 7 | 8th Tamil இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu : Supplementary: Arivushal avvaiyar Chapter 7 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார் - இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு