Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள்

மீரா | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள் | 8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu

   Posted On :  15.07.2023 07:53 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள் - மீரா | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஏழு

கவிதைப்பேழை

விடுதலைத் திருநாள்

நுழையும்முன்

பிறந்தநாள், திருமணநாள் போன்றன தொடர்புடைய குடும்பத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் நாள்களாகும். சமயத் தொடர்பான விழாக்கள் குறிப்பிட்ட சமயத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும். இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் இன்றியமையா நாள் ஒன்றின் சிறப்பை அறிவோம்.


முன்னூறு வருடமாய்

முற்றுகை யிட்ட

அந்நிய இருட்டின்

அரக்கக் கூத்து

முடிந்தது என்று

முழங்கி நின்றது

எந்த நாளோ

அந்த நாள் இது.

 

செத்த பிணமாய்ச்

சீவனில் லாமல்

மொத்தமாய்த் தேசத்தை

முற்றுகையிட்ட

மூட மூட

நிர்மூட உறக்கத்தை

ஓட ஓட

விரட்டி யடித்து

விழிக்க வைத்தது –

வையம்

வியக்க வைத்தது -

எந்த நாளோ

அந்த நாள் இது.

 

பரிதவித் திருந்த

பாரத அன்னை

காளியாய்ச் சீறிக்

கைவிலங் கொடித்து

பகையைத் துடைத்து

சத்திய நெஞ்சின்

 

சபதம் முடித்து

கூந்தல் முடித்துக்

குங்குமப் பொட்டு வைத்து

ஆனந்த தரிசனம்

அளித்து நின்றது

எந்த நாளோ

அந்த நாள்இது.

 

சதி வழக்கினிலே

சம்பந்தப் பட்டுத்

தூக்குக் கயிற்றில்

தொங்கப் போகும்

கடைசிக் கணத்திலும்

கண்முன் நிறுத்திப்

பகத்சிங் பார்த்துப்

பரவசப் பட்ட

அற்புத விடியலை

அழைத்து வந்தது

எந்த நாளோ

அந்த நாள் இது.

 

முற்றிப் படர்ந்த

முட்காட்டை எரித்து

விளைத்த மூங்கிலை

வீரமாய்த் துளைத்து

மூச்சுக் காற்றை

மோகித்து நுழைத்து

புரட்சிப்

புல்லாங் குழலில்

பூபாலம் இசைத்தது

எந்த நாளோ

அந்த நாள் இது.

 

இதந்தரும் இந்தச்

கதந்திர நாளைச்

சொந்தம் கொண்டாடத்

தந்த பூமியைத்

தமிழால் வணங்குவோம்.

- மீரா

 

சொல்லும் பொருளும்

சீவன் - உயிர்

சத்தியம் - உண்மை

ஆனந்த தரிசனம் - மகிழ்வான காட்சி

வையம் - உலகம்

சபதம் - சூளுரை

மோகித்து – விரும்பி

பாடலின் பொருள்

முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று,

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

 

நூல் வெளி


மீ. இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய மீரா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர். ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

Tags : by Meera | Chapter 7 | 8th Tamil மீரா | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu : Poem: Viduthalai thirunaal by Meera | Chapter 7 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள் - மீரா | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு