Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் | 8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu

   Posted On :  15.07.2023 08:14 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

உரைநடை: பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : உரைநடை: பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஏழு

உரைநடை உலகம்

பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்


நுழையும்முன்

தான் எடுத்துக்கொண்ட செயலில் வெற்றியாளராக விளங்கிட வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. எண்ணியதை எண்ணியவாறே செய்து முடிக்கும் வல்லமை சிலருக்கே வாய்க்கும். அத்தகையோர் மக்கள் மனத்தில் தலைவர்களாக நின்று வாழ்கிறார்கள். அத்தகைய தலைவரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

கும்பகோணத்தில் உள்ள ஆனையடிப் பள்ளி நண்பகல் உணவு இடைவேளையின்போது மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து தாம் கொண்டுவந்த உணவை உண்கின்றனர். உடன்பிறந்தோராகிய இரண்டு சிறுவர்கள் பசியுடன் ஓர் ஓரமாக அமர்ந்திருக்கின்றனர்.

"பசிக்குது அண்ணா" என்கிறான் தம்பி,

"கொஞ்சம் பொறுத்துக்கோ தம்பி. மாலை வீட்டுக்குப் போனதும் சாப்பிடலாம்" என்கிறான் அண்ணன்.

"அம்மா ஏன் நமக்குச் சாப்பாடு கொடுத்தனுப்புறதில்ல”?

"வீட்டுவேலை செஞ்சு அம்மா கொண்டுவருகிற பணம் நமக்கு ஒருவேளை சாப்பாட்டுக்குத்தான் போதுமானதா இருக்கு. அம்மா என்ன செய்வாங்க பாவம். வீட்டுவேலைக்குப் போயிருக்கிற அம்மா, மாலையில் எப்படியும் அரிசியோடு வருவாங்க. நமக்கு ஏதாவது உணவு சமைச்சுத் தருவாங்க" என்று தம்பியை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறுகிறான் அண்ணன்,

இருவரும் பசியுடன் பாடம் படிக்கின்றனர்.

காலம் வேகமாகச் சுழல்கிறது.

அந்தச் சிறுவர்களில் தம்பி இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். பசியால் வாடிய தமது இனமைக்கால நினைவுகள் இப்போதும் மறையாமல் அவரது உள்ளத்தில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டுக் குழந்தைகள் பசியறியாமல் படிக்கவேண்டும். என்று விரும்புகிறார் அவர். எனவே, "காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தப்போகிறேன். இனிமேல் பள்ளிக் குழந்தைகளுக்குக் காய்கறிகள், பருப்பு முதலியவற்றுடன்கூடிய உணவு வழங்கப்படும். இந்தத் திட்டம் இனி சத்துணவுத் திட்டம் என அழைக்கப்படும்" என்று அறிவிக்கிறார்.


இளமைக்காலத்தில் பசியின் கொடுமையால் வாடியதை மறவாமல், தாம் ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக்குழந்தைகளின் பசியைத் தீர்க்கத் திட்டம் தீட்டியஅந்த உயர்ந்த மனிதர்தாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று அனைவராலும் அழைக்கப்படும் எம்.ஜி.இராமச்சந்திரன்.

புரட்சி நடிகர்

எம்.ஜி.ஆர். வறுமையின் கொடுமையை நன்கு உணர்ந்தவர். வறுமை காரணமாகவே அவரும் அவருடைய அண்ணனும் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் நாடகக்குழுவில் சேர்ந்தனர். நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினர். எம்.ஜி.ஆர், தமது நடிப்பாற்றலால் நாடகக்குழுவின் முதன்மை நடிகராக உயர்ந்தார்.

தெரிந்து தெளிவோம்

கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கையில் உள்ள கண்டியில் கி.பி. (பொ.ஆ.) 1917 சனவரித் திங்கள் பதினேழாம் நாள் கோபாலன் சத்தியபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர். பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து, கும்பகோணத்தில் குடியேறினார்.

அதன்பின்னர் எம்.ஜி.ஆர். திரைப்படத்துறையில் நுழைந்தார். நாடகத்துறையைப் போலவே. திரைத்துறையிலும் முதலில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி விரைவிலேயே கதாநாயகனாக உயர்ந்தார். எம்.ஜி.ஆர். தாம் ஏற்று நடித்த கதைமாந்தர்கள் மூலம் ஏழை, எளியோர், உழவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்கு உரிய கருத்துகளை எடுத்துரைத்தார். எனவே, மக்கள் அவரைப் புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றினர். மேலும் இந்திய அரசு மிகச் சிறந்த நடிகருக்கு வழங்கும் பாரத் பட்டத்தை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தது. திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கினார்.

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் தாம் பாடி நடித்த பாடல்கள் மூலம் உயர்ந்த கருத்துகளை மக்களிடம் விதைத்தார்.

மாபெரும் சபைதனில் நீ நடத்தால்

உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று

போற்றிப் புகழ வேண்டும்.

போன்ற பாடல்கள் மூலம் மனிதன் எத்தகைய நோக்கத்துடன் வாழவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

வாழ்வில் உயர்நிலையை அடைந்த பின்னரும் எளிமையாக வாழவேண்டும் என்பதை,

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்!

துணிவு வர வேண்டும் தோழா!

என்னும் பாடல் வரிகள் மூலம் எடுத்துரைத்தார். மேலும் அப்பாடல் வரிகளுக்குத் தாமே இலக்கணமாகவும் திகழ்ந்தார்.

பொன்மனச் செம்மல்


எம்.ஜி.ஆர். தாம் ஈட்டிய செல்வத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தவர். புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் துயர் துடைக்க இவரின் கொடைக்கரங்கள் நீண்டன.

எம்.ஜி.ஆர். ஒருமுறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்றுகொண்டிருந்தனர். சாலையின் சூடு பொறுக்கமுடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச்செய்தார். உடன்வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச்செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

தெரிந்து தெளிவோம்

சென்னைப் பல்கலைக் கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர்பட்டம் வழங்கியது. தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தை நிறுவியுள்ளது: சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது. அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடத்துசெல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கவேண்டும். அதனால்தான் பின்னர்ப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர்.ஒருமுறை படப்பிடிப்பிற்காகச் காஷ்மீருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த இந்தியப் படைவீரர் நலச்சங்கத்தினர் தமது சங்க விழாவிற்கு எம்.ஜி.ஆர். வருகைதர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட அவர் அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினார். ஆனால், அப்பொழுது அவரிடம் பணம் இல்லை. எனவே, அங்குத் தங்கியிருந்த தமிழ்நாட்டுத் தொழிலதிபர் ஒருவரிடம் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அதனை நன்கொடையாக வழங்கினார். சென்னை திரும்பியதும் முதல்வேலையாக அத்தொகையைத் திருப்பிக்கொடுத்தார்.

இவ்வாறு பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கியமையால்தான் அவரைப் பொன்மனச் செம்மல் என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சமூக நலத்திட்டங்கள்

எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரும்பாடுபட்டார். உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம், அதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம், தாய்சேய் நல இல்லங்கள், பற்பொடி வழங்கும் திட்டம், தனிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம், முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திப் புகழ் பெற்றார்.

தமிழ் வளர்ச்சிப் பணிகள்

எம்.ஜி.ஆர். தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகளை ஆற்றினார். தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினார். மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார். தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

இத்தகைய தமது செயல்பாடுகள்மூலம் அனைவரையும் கவர்ந்த எம்.ஜி.ஆர். புரட்சி நடிகராகப் பெயர்பெற்று, பொன்மனச் செம்மலாக வளர்ந்து, மக்கள் திலகமாக உயர்த்து புரட்சித்தலைவராக மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெற்று நிலைத்து வாழ்கிறார்.

தெரிந்து தெளிவோம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசால் சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து, அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

Tags : Chapter 7 | 8th Tamil இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu : Prose: Bharat Ratna M.G. Ramachandran Chapter 7 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : உரைநடை: பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் - இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு