Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | இலக்கணம்: வினைமுற்று

இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: வினைமுற்று | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai

   Posted On :  11.07.2023 02:37 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

இலக்கணம்: வினைமுற்று

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : இலக்கணம்: வினைமுற்று | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கற்கண்டு

வினைமுற்று

 

படித்தான், ஆடுகின்றாள், பறந்தது, சென்ற, கண்டு ஆகியவை செயலை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் ஆகும். செயலை வினை என்றும் குறிப்பர். இவ்வாறு ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

வினைமுற்று

மலர்விழி எழுதினான். கண்ணன் பாடுகிறான். மாடு மேயும்.

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.

வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

தெரிநிலை வினைமுற்று

ஒரு செயல் தடைபெறுவதற்குச் செய்யவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

(எ.கா.) மாணவி கட்டுரை எழுதினாள்.

செய்பவர் - மாணவி   காலம் - இறந்தகாலம்

கருவி - தாளும்      எழுதுகோலும். செய்பொருள் - கட்டுரை

நிலம் பள்ளி        செயல் - எழுதுதல்

குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

பொருள் – பொன்னன்

இடம் - தென்னாட்டார்

காலம் - ஆதிரையான்

சினை - கண்ணன்

பண்பு (குணம்) - கரியன்

தொழில் - எழுத்தன்

தெரிநிலை,குறிப்பு வினைமுற்றுகள் அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு.

ஏவல் வினைமுற்று

 பாடம் படி.  கடைக்குப் போ.

இத்தொடர்கள் ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. இவ்வாறு தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.

(எ.கா.) எழுது - ஒருமை

எழுதுமின் - பன்மை

பன்மை ஏவல் வினைமுற்று எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.

வியங்கோள் வினைமுற்று

வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று இரு திணைகளையும் (உயர்திணை, அஃறிணை) ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்) மூன்று இடங்களையும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) காட்டும். இதன் விகுதிகள் , இய, இயர், அல் என வரும்.

(எ.கா.) வாழ்க,ஒழிக, வாழியர், வாரல்

ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்று

• முன்னிலையில் வரும்.

• ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.

• கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்.

• விகுதி பெற்றும் பெறாமலும் வரும்.

வியங்கோள் வினைமுற்று

• இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.

• ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.

• வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.

• விகுதி பெற்றே வரும்.

தெரிந்து தெளிவோம்

1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது.

2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ளன.

Tags : Chapter 2 | 8th Tamil இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 2 : Idilla iyarkai : Grammar: Vinai Mutru Chapter 2 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : இலக்கணம்: வினைமுற்று - இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை