Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai

   Posted On :  11.07.2023 02:59 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

வாழ்வியல்: திருக்குறள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

வாழ்வியல்

திருக்குறள்

 

நுழையும்முன்

திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்; எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துக்களைக் கொண்ட நூல். திருக்குறளின் பெருமையை விளக்க, 'திருவள்ளுவ மாலை' என்னும் நூல் எழுதப்பட்டிருப்பதே அதற்குச் சான்றாகும். இத்தகைய பெருமை கொண்ட திருக்குறனைப் பயில்வோம்.

 

நடுவுநிலைமை

1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்*.

பொருள் : நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.

2. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி.

பொருள் : தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

அணி : உவமை அணி.

 

கூடா ஒழுக்கம்

3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

பொருள் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

அணி : இல்பொருள் உவமை அணி.

4. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்*.

பொருள் : நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல்வகையால் உணர்த்துகொள்ள வேண்டும்.

 

கல்லாமை

5. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்.

பொருள் : கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.

6. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்*.

பொருள் : கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

 

குற்றங்கடிதல்

7. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

பொருள் : பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.

அணி : உவமை அணி.

8. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு*.

பொருள் : தலைவர் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவருக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

 

இடனறிதல்

9. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

பொருள்: பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

10. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து.

பொருள் : வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.

அணி : பிறிது மொழிதல் அணி.

 

நூல் வெளி


பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.

திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது.

பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

Tags : Chapter 2 | 8th Tamil இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 2 : Idilla iyarkai : Valviyal: Thirukkural Chapter 2 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை