Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: நிலம் பொது

இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: நிலம் பொது | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai

   Posted On :  11.07.2023 02:31 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

உரைநடை: நிலம் பொது

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : உரைநடை: நிலம் பொது | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

உரைநடை உலகம்

நிலம் பொது


நுழையும்முன்

அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர். அவர்களின் தலைவராக விளங்கியவர் சியாட்டல். அவர் அப்பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கக் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதினார். அக்கடிதத்தைப் படித்தறிவோம்.


மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு,

வணக்கம். இந்தப் பூமிக்கு அணுக்கமாக உள்ள வானத்தை எப்படி வாங்கவோ விற்கவோ முடியும்? இவ்வாறு செய்ய வேண்டுமென்ற எண்ணமே வேடிக்கையாகத் தோன்றுகிறது. காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானவை அல்ல. அப்படியிருக்கையில் நீங்கள் அவற்றை எவ்வாறு விலைகொடுத்து வாங்க முடியும்?

இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். கூடவே, மின்னும் ஒளியுடைய ஒவ்வொரு ஊசியிலையும் எல்லாக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பித் திரியும் பூச்சி வகைகளும் எம் மக்களின் நினைவிலும் வாழ்விலும் மிகவும் புனிதமானவை. பாலூறும் மரத்திலிருந்து ஒழுகும் திரவம்கூட, செவ்விந்தியர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கின்றது.

எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும். நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கன்; இந்த மண்ணும் எமக்குரியதாகும். இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்.

வாஷிங்டனின் பெருந்தலைவர் எங்கள் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்துச் சொல்லி அனுப்பியபோது, நாங்கள் மனநிறைவுடன் வாழ எங்களுக்கென்று தனியிடம் ஒதுக்கித் தருவதாகவும் கூறியிருக்கிறார். எனவே, அவர் எங்களுக்குத் தந்தையாகவும் நாங்கள் அவருக்குப் பிள்ளைகளாகவும் ஆகிறோம். எனினும், இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இதற்குச் சம்மதிப்பது என்பது மிகவும் இயலாத ஒன்றாகும். இந்நிலையில் எங்களுடைய நிலத்தை வாங்கும் உங்கள் திட்டத்தைப் பற்றிச் சிந்திப்போம்.

ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கணேயாகும். இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்கனே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும். இந்நிலம் புனிதமானது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இதனைக் கற்றுக்கொடுங்கள்.

எமது வாழ்வுமுறையின் சிறப்புகள் உங்களுக்குத் தெரியாது என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியும் அதற்கடுத்துள்ள நிலப்பகுதியும் உங்களுக்கு ஒன்றுதான். நீங்கள் அயலவர்கள். இந்நிலத்திலிருந்து தேவையானவற்றை எடுத்துச் செல்லவே நீங்கள் இங்கு வருகின்றீர்கள்.

இப்பூமியானது உங்களின் உடன்பிறந்தார் அன்று; பகைவரே. இதனை வென்று கையகப்படுத்தியபின் நீங்கள் வேறு இடத்திற்கு நகர்ந்துவிடுவீர்கள். நீங்கள் உங்கள் தந்தையர்களின் இடுகாடுகளைக்கூட மறந்துவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவீர்கள். பிறப்புரிமைக்குரிய சொந்த மண்ணையுங்கூட நீங்கள் மறந்துவிடுவீர்கள். நிலத்தை வாங்குவதும் விற்பதும் உங்களுக்கு ஆடுகன் அல்லது மணிகள் விற்பது போன்றவை. உங்களுடைய கோரப் பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் பாலைவனம் ஆக்கிவிடும். ஆனால் நாங்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.

எங்களுடைய வாழ்வுமுறை உங்களுடைய முறையிலிருந்து எந்த அளவு மாறுபட்டது என்பது எமக்குக் துல்லியமாகத் தெரியாது. உங்களுடைய நகரங்களின் காட்சிகளெல்லாம் எமது செவ்விந்தியர்களின் கண்களை உறுத்துகின்றன.

உங்கள் நகரங்களில் அமைதியான இடம் எதுவுமில்லை. நீங்கள் வாழும் எந்த ஓர் இடத்திலும் அசைந்தாடும் இலைகளின் ஓசைகளையோ பூச்சி இனங்களின் ரிங்காரங்களையோ கேட்க முடிவதில்லை. மாறாக, சடசடவொலிகள் காதைப் பிளக்கின்றன. மகிழ்வூட்டும் இராக்கூவற் பறவைகளின் ஒலிகளையோ, குளத்தைச் சுற்றிக் கேட்கும் தவளைகளின் கூச்சல்களையோ கேட்காத வாழ்வென்ன வாழ்வு? நான் ஒரு செவ்விந்தியன் என்பதால் இதனை எவ்வாறு புரிந்துகொள்வதெனத் தெரியவில்லை.

எம் மக்கள் யாவரும் அமைதியான குனத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும் நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும் மண்வாசனையையும் தேவதாரு மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள்.

நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒரு காற்றையே இவை யாவும் சுவாசிக்கின்றன. நீங்கள் சுவாசிக்கும் காற்றைப் பற்றிச் சிந்தித்ததில்லை. இந்தக் காற்றானது அனைத்து உயிர்களையும் காக்கிறது. இவ்வுணர்வுகளைச் சுமந்து நிற்கும் காற்றின் இன்றியமையாமையை, நாங்கள் நிலத்தை விற்றுவிட நேர்ந்த பின்னரும் நீங்கள் மறக்கவே கூடாது.

எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.

இப்பூமியின் மீது எது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவேயாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக்கூடுமானால் அஃது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.

இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த கடவுளை அவமதிக்கும் செயலாகிவிடும். நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும். நீங்கள் படுத்துறங்கிய இடத்தை நீங்களே அசுத்தப்படுத்தினால் ஒருநான் இரவு நீங்கள் உங்கள் குப்பைகளுக்குள்ளேயே மூச்சு முட்டி இறந்துபோகக்கூடும்.

இப்பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும் எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும் தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இங்கிருந்த புதர்க்காடுகள் எங்கே சென்றன? மலைக் கழுகுகள் எங்கே சென்றன? விரைவாக ஓடக்கூடிய மட்டக் குதிரைகளையும் வேட்டையாடி அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். நிலத்தை நேசியுங்கள்; இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல.

தங்கள் உண்மையுள்ள,

சியாட்டல்.

 

நூல் வெளி

இக்கட்டுரை பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் நூலில் இருந்து எடுத்துத்தரப்பட்டுள்ளது.

Tags : Chapter 2 | 8th Tamil இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 2 : Idilla iyarkai : Prose: Neelam podhu Chapter 2 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : உரைநடை: நிலம் பொது - இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை