Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: கோணக்காத்துப் பாட்டு

வெங்கம்பூர் சாமிநாதன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கோணக்காத்துப் பாட்டு | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai

   Posted On :  11.07.2023 02:25 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

கவிதைப்பேழை: கோணக்காத்துப் பாட்டு

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : கவிதைப்பேழை: கோணக்காத்துப் பாட்டு - வெங்கம்பூர் சாமிநாதன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கவிதைப்பேழை

கோணக்காத்துப் பாட்டு


நுழையும்முன்

இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது. ஆனால் அது சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும். தமிழ்நாடு அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும். முன்பு ஒருமுறை தமிழ்நாடு புயலால் தாக்குண்டபோது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல்களை அறிவோம்.

 

உருமங்கட் டியமுகிலால் - கோணக்காத்து

உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்

பெரிதான வீடுகளெல்லாம் - கோப்புடனே

பிரிந்தும் கூரைத்தட்டுச் சரிந்ததங்கே

 

சிங்காரமாய் வாங்கல்நகரில் - வைத்திருந்த

தென்னம்பிள்ளை அத்தனையும் வின்னமாச்சுதே

மங்காத காங்கயநாட்டில் - மேட்டுக்காட்டில்

மாளாத பருத்திஎல்லாம் கோலாகப்போச்சுதே

 

ஆரங்கள்வைத்த சுவரெல்லாம் - மெத்தைவீடு

அடியோடே விழுந்ததங்கே கெடிகலங்கித்

தாரங்களும் பிள்ளைகளுடன் - கூட்டிக்கொண்டு

தாடைந்து வேகமுடன் கூகூவென்றார்

 

வாகுடனே தொண்டைமான்சீமை - தன்னிலே

வளர்ந்தோங்கும் மாநகரம் தன்னிலேதானே

சேகரமாய் வைத்தமரங்கள் - அத்தனையும்

சின்னபின்ன மாய்ஓடித்து பின்னமாச்சுதே

 

சம்பிரமுடன் கப்பல்களெல்லாம் - கடலிலே

தானடந்து வேகமுடன் வரும்போதிலே

கொம்புகத்திக் கோணக்காத்து - காலனைப்போல்

கோணமழை வந்துகப்பல் தான்களிழ்ந்ததே

 

ஆர்க்காடு மைசூர்வரைக்கும் - கோணக்காத்து

அலறி அவறிமெத்த அடித்ததனால்

மார்க்கமான சாலையில்போன - சனங்களெல்லாம்

மயங்கி மயங்கிமெத்தத் தவித்தார்களே

 

தெத்துக்காடு காளப்பநாயக்கன் - பட்டியிலே

செத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்

சித்தர்கள் பொருந்திவாழும் - கொல்லிமலை

சேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதே

 

இப்படிக்கிச் சேதங்களானால் - குமரேசா

எப்படிப் பிழைத்துநாங்கள் ஒப்பிதமாவோம்

மெய்ப்புடன்வே லாயுதங்கொண்டு - வருகின்ற

விக்கினமெல் லாம்தீர்த்துக் காத்திரையா

- வெங்கம்பூர் சாமிநாதன்

 

சொல்லும் பொருளும்

முகில் - மேகம்

கெடிகலங்கி - மிக வருந்தி

சம்பிரமுடன் - முறையாக

சேகரம் – கூட்டம்

காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

வின்னம் - சேதம்

வாகு – சரியாக

காலன் எமன்

மெத்த – மிகவும்

 

பாடலின் பொருள்


திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எவ்வாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகன் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன. ஆடவர் தம் மனைவி, பிள்ளைகளுடன் 'கூகூ' என்று அலறியபடி ஓடினர், தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஓடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல், எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது.

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக!

 

நூல் வெளி

நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

Tags : by Vengabor swaminathan | Chapter 2 | 8th Tamil வெங்கம்பூர் சாமிநாதன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 2 : Idilla iyarkai : Poem: Konakathu paaitu by Vengabor swaminathan | Chapter 2 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : கவிதைப்பேழை: கோணக்காத்துப் பாட்டு - வெங்கம்பூர் சாமிநாதன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை