ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் - 1857 பெருங்கிளர்ச்சி | 11th History : Chapter 18 : Early Resistance to British Rule
1857 பெருங்கிளர்ச்சி
அறிமுகம்
1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஆங்கிலேய, இந்திய வரலாற்று அறிஞர்களிடையே பெரும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. ஆங்கில ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் இவ்வெழுச்சியை இராணுவக் கலகம் என்றும் இராணுவ வீரர்களின் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறி சாதாரணமாகப் புறந்தள்ளுகின்றனர். இந்திய வரலாற்றறிஞர்கள் ராணுவப் புரட்சியைப் பெருங்கிளர்ச்சியாக மாற்றியதில் மக்கள் வகித்த பாத்திரம் பற்றி ஆய்வு மேற்கொண்டு இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். அக்கேள்விகளுக்கு ஏகாதிபத்திய வரலாற்றறிஞர்களிடம் பதிலில்லை. இது ஒரு இராணுவக் கலகம் மட்டுமே என்றால், முகாம்களில் இருந்த சிப்பாய்கள் புரட்சி செய்வதற்கு முன்பாகவே, மக்கள் கிளர்ச்சி செய்ததை எப்படி விளக்குவது? எழுச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று சொல்லி மக்களை அபராதம் விதித்து தூக்கிலிட்டுத் தண்டிக்க வேண்டிய அவசியமென்ன? வங்காளப் படையின் ஆங்கிலத் தளபதியான கர்னல் மல்லீசன் “The Making of the Bengal
Army" வங்காளப்படையின் உருவாக்கம் எனும் சிறு ஏட்டில் “ஒரு இராணுவ வீரர்களின் கலகம். விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று குறிப்பிடுகிறார்.
வரலாற்றறிஞர் கீன் (Keen) இக்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைக்கிறார். டல்ஹௌசியின் இணைப்புக் கொள்கைகளாலும் சீர்திருத்த வேகத்தாலும் பாதிப்புக்குள்ளான இளவரசர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குமுறல்கள் என ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளை கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் தீப்பொறியை ஏற்படுத்திப் பற்றி எரியச் செய்தன. எட்வர்டு ஜான் தாம்சன் இந்நிகழ்வை "பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்" என விளக்கியுள்ளார். 1909இல் வெளியான சாவர்கரின் The War of Indian independence (இந்திய விடுதலைப் போர்) எனும் தனது நூலில் ஆங்கிலேயரால் இதுவரை வெறும் இராணுவப் புரட்சியே என்று வர்ணிக்கப்பட்ட இந்நிகழ்வு உண்மையில் அமெரிக்க சுதந்திரப் போரைப் போன்ற ஒரு விடுதலைப் போரே என வாதிடுகின்றனர். ஆங்கிலம் படித்த மத்தியதர மக்கள் இவ்வெழுச்சியில் எந்த ஒரு பங்கையும் வகிக்காவிட்டாலும் தேசிய வரலாற்றறிஞர்கள் இவ்வெழுச்சியை இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றே கூறுகின்றனர்.
பெருங்கிளர்ச்சிக்கான காரணங்கள்
நாடுகளை ஆக்கிரமித்தல்
டல்ஹௌசி வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் மூலமாக அவத்தையும் ஜான்சியையும் இணைத்ததும், கடைசி பேஷ்வாவின் தத்தெடுக்கப்பட்ட மகனான நானா சாகிபை அவமானகரமாக நடத்தியதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. முறையான உரிமம் இல்லாமல், குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு அமைத்த இனாம் கமிஷனின் (1852) அறிக்கையின்படி 21,000க்கும் மேற்பட்ட தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அவத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினர். மேலும் அவத்தில் அரச குடும்பத்தின் ஆதரவை நம்பியிருந்த ஆயிரக் கணக்கான மக்களும், விலையுயர்ந்த ஆடைகள், அலங்கரிக்கப்பட்ட காலணிகள், அதிக விலையுள்ள நகைகள் ஆகியவற்றைத் தயாரிப்போரும் வாழ்விழந்தனர். இவ்வாறு டல்ஹெளசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தை விளைவித்தார்.
பெருஞ்சுமையான நிலவருவாய் முறை
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகளில் இருந்ததைக் காட்டிலும் தற்போது நிலவரி மிக அதிகமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்த இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூலித்தனர். ஆங்கிலேயர் நிலவருவாயை வரியாகக் கருதாமல் வாடகையாகக் கருதினர். இதன்படி நிலத்தில் விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அதே அளவு வரி வசூலிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.
முஸ்லீம் உயர்குடியினரும் கற்றறிந்தோரும் ஒதுக்கப்படுதல்
முஸ்லீம்கள் பெரும்பாலும் அரசுப்பணிகளையே சார்ந்திருந்தனர். கம்பெனியின் ஆட்சிக்கு முன்னர் முந்தைய அரசுகளில் மதிப்புமிகுந்த பணிகளில் அவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். குதிரைப்படைத் தளபதிகளாகச் சிலர் உயர்ந்த ஊதியம் பெற்று வந்தனர். ஆனால் கம்பெனியின் ஆட்சியில் அவர்கள் துயரத்திற்கு ஆளாயினர். ஆங்கில மொழியும் மேலைக்கல்வியும் முஸ்லீம் அறிவுஜீவிகளை முக்கியமற்றவர்களாக ஆக்கியது. நீதிமன்றங்களில் பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழியின் பயன்பாடு ஒழிக்கப்பட்டது அரசுப் பணியில் முஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.
மத உணர்வுகள்
1856ஆம் ஆண்டு சட்டமானது வங்காளப் படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்துகொள்ள வழிவகை செய்தது. சாதிப்பற்றை, கைவிட்டு அவர்கள் படைகளில் சேரவேண்டும் அல்லது இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி முன்னேறும் வாய்ப்பைக் கைவிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மேலும் சதி ஒழிப்புச் சட்டம், விதவை மறுமணத்தை சட்டபூர்வமாக்கியது, பெண் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிரான சட்டம் ஆகியவை சமய நம்பிக்கைகளில் ஆங்கில அரசு தலையிடுவதாகக் கருதப்பட்டது. 1850இல் இயற்றப்பட்ட லெக்ஸ் லோசி சட்டம் (Lex Loci Act) கிறித்தவர்களாக மதம் மாறியவர்களுக்கும் மூதாதையரின் சொத்துக்களில் உரிய பங்கினைப் பெறும் உரிமையை அளித்தது. இது வைதீக இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
மேலும் துப்பாக்கித் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டுள்ளது என்ற செய்தி பரவியபோது இந்து முஸ்லீம் படைவீரர்களின் மத உணர்வுகள் புண்பட்டன. இத்தோட்டாக்களை புதிதாக அறிமுகமான என்பீல்டு துப்பாக்கிகளுக்குள் செலுத்துவதற்கு முன்பாக அதைப் படை வீரர்கள் கடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இது கிறித்தவ மதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியாக கருதப்பட்டது.
ஆகவே அனைத்து விதத்திலும் 1857ஆம் ஆண்டு, பெருங்கிளர்ச்சி கனிந்த ஆண்டாகும். கொழுப்பு தடவிய தோட்டா பிரச்சனை கிளர்ச்சி எனும் வெடிமருந்தில் வைக்கப்பட்ட தீப்பொறியாகும். பதவி பறிக்கப்பட்ட அதிருப்தி கொண்ட ராஜாக்கள், ராணிகள், ஜமீன்தார்கள், குத்தகைதாரர்கள் கைவினைஞர்கள், தொழிலாளர்கள், முஸ்லீம் அறிவு ஜீவிகள், இந்து பண்டிதர்கள், குருமார்கள் ஆகிய அனைவரும் இவ்வெழுச்சியைத் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாகக் கருதினர்.
பெருங்கிளர்ச்சியின் போக்கு
இப்பெருங் கிளர்ச்சி கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இராணுவக் கலகமாகவே தொடங்கியது. மங்கள் பாண்டே தனது இராணுவ மேலதிகாரியை சுட்டுக் கொன்றார். தொடர்ந்து அங்கு இராணுவக் கலகம் வெடித்தது. அடுத்த மாதம் மீரட் நகரில் தோட்டாக்களைப் பெற வேண்டிய 90 வீரர்களில் ஐவர் மட்டுமே உத்தரவுக்கு அடிபணிந்தனர். மே மாதம் 10ஆம் நாளில் மூன்று ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த சிப்பாய்கள் கிளர்ச்சியில் இறங்கி தங்கள் உயர் அதிகாரிகளைக் கொன்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களை விடுதலை செய்தனர். மறுநாள் தில்லியை அடைந்த அவர்கள் ஐரோப்பியர் பலரைக் கொன்று நகரைக் கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள் இரண்டாம் பகதூர்ஷாவை பேரரசராகப் பிரகடனம் செய்தனர்.
ஜூன் மாதத்தில் கிளர்ச்சி ரோகில் கண்ட் பகுதிக்குப் பரவியது. ஒட்டுமொத்த கிராமப்புறமும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. கான் பகதூர் கான் தன்னைப் பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டார். புந்தேல்கண்ட் பகுதியும் ஆற்றிடைப்பகுதி முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது. ஜான்சியில் ஐரோப்பியர் கொல்லப்பட்டு 22 வயதான லட்சுமிபாய் அரியணை ஏற்றப்பட்டார். கான்பூரில் நானா சாகிப் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பெண்களும் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன. கான்பூர் படுகொலை என்றறியப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேயரைக் கோபம் கொள்ளச் செய்தது. நிலைமைகளை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட தளபதி ஹென்றி ஹேவ்லக் படுகொலைக்கு மறுநாளே நானா சாகிப்பைத் தோற்கடித்தார். ஆங்கில இராணுவ அதிகாரி நீல் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர். நவம்பர் மாத இறுதியில் தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றினார். ஆனால் அது விரைவில் காம்ப்பெல் என்பவரால் மீட்கப்பட்டது.
ஹென்றி லாரன்சால் பாதுகாக்கப்பட்ட லக்னோ ஆளுநர் மாளிகை கிளர்ச்சியாளர்களின் வசமானது. நானா சாகிப்பை ஹேவ்லக் தோற்கடித்த பின்னர் லக்னோவைக் கைப்பற்ற விரைந்தார். ஆனால் அவர் திரும்ப நேர்ந்தது. ஜுலை மாத இறுதியில் ஜான் லாரன்ஸால் தில்லிக்கு அனுப்பப்பட்ட ஜான் நிக்கல்சன் அதைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா சிறைக் கைதியானார். அவருடைய இரண்டு மகன்களும் பேரனும் சரணடைந்த பின் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிகளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது. தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர். ஆகவே அவர்கள் லக்னோவில் பேகம் ஹஸ்ரத் மஹாலோடு (நவாப் வஜித் அலியின் மனைவி) சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். பெரும்பாலான வீரர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது இவர்களும் பாதிப்புக்குள்ளாயினர். நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு அவத் நாற்றங்காலாக இருந்தது. அவத்தை சேர்ந்த வீரர்கள் குறைந்த ஊதியம் குறித்தும் விடுமுறை பெறுவதிலுள்ள இடர்ப்பாடுகள் பற்றியும் புகார் செய்தனர். அவர்கள் அனைவரும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் பின் அணி திரண்டனர். ராஜா ஜெய்லால் சிங்கின் தலைமையில் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு லக்னோவைக் கைப்பற்றினர். ஹஸ்ரத் மஹால் தன் மகன் பிர்ஜிஸ் கத்ராவை அவத்தின் அரசராக அறிவித்தார். கான்பூரில் பழிதீர்த்துக் கொண்ட நீல் லக்னோவில் தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1858 மார்ச் மாதத்தில்தான் லக்னோவை ஆங்கிலேயரால் கைப்பற்ற முடிந்தது.
சென்னை மௌன்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த நீல் சிலை இந்திய தேசியவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. அதை அப்புறப்படுத்த காங்கிரஸ் சத்தியாக்கிரகம் செய்தது. ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை (1937-39) இச்சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது.
ஹக் ரோஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜான்சியை முற்றுகையிட்டு தாந்தியா தோபேயைத் தோற்கடித்தார். இருந்தபோதிலும் லட்சுமிபாய் துணிச்சலுடன் போரிட்டு குவாலியரைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருக்கு ஆதரவான குவாலியர் அரசர் சிந்தியா தப்பியோடினார். ரோஸ் தன்னுடைய படைகளோடு லட்சுமிபாயுடன் நேரடியாக மோதினார். வியப்பூட்டும் வகையில் லட்சுமிபாய் போரில் பங்கேற்று வீரமரணமடைந்தார். கிளர்ச்சியாளர்களில் லட்சுமிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென லட்சுமிபாயைப் பற்றி ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
குவாலியர் விரைவில் மீட்கப்பட்டது. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டு அமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857இல் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ரங்கூனுக்கு (மியான்மர்) நாடு கடத்தப்பட்டார். அங்கேயே அவர் நவம்பர் 1862 இல் தனது 87வது வயதில் மரணமடைந்தார். அவருடைய இறப்போடு முகலாய அரசவம்சம் முடிவுக்கு வந்தது.
பெருங்கிளர்ச்சியின் விளைவுகள்
விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை 1858
அலகாபாத்தில் 1858 நவம்பர் 1இல் அரசு தர்பார் கூட்டப்பட்டது. விக்டோரியா ராணி வெளியிட்ட பேரறிக்கை தர்பார் மண்டபத்தில் கானிங் பிரபுவால் வாசிக்கப்பட்டது. அவரே இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயுமாவார்.
•
இதன் பின்னர் இந்தியா ஆங்கிலேய முடியரசின் பெயரால் அரசுச் செயலர் மூலம் ஆளப்படும். பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா கவுன்சில் எனும் அமைப்பு அரசு செயலருக்கு உதவி செய்யும். இதன் விளைவாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் குழுவும் ஒழிக்கப்பட்டன. ஆங்கிலேய முடியரசும் நாடாளுமன்றமும் அரசியல் அமைப்பின் அடிப்படையில் இந்தியாவை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வர். கிழக்கிந்தியக் கம்பெனியின் படை கலைக்கப்பட்டு இங்கிலாந்து அரசின் படைகளோடு இணைக்கப்படும்.
• ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கைகளை இப்பேரறிக்கை ஏற்றுக் கொண்டது. அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் கௌரவத்தையும் மதிப்பதாகவும் உறுதியளித்தது. மேலும் இந்தியாவில் உள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கம் இல்லை எனவும் அறிவித்தது.
• 1853 ஆம் ஆண்டு சட்டமன்றம் ஐரோப்பியர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருந்ததால் அவர்கள் இந்தியரின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருந்ததே இச்சிக்கலுக்கு காரணம் என்று கூறிய அறிக்கை 1861இல் அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் எனக் கூறியது.
• வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் நாடிணைப்புக் கொள்கையும் கைவிடப்படும். ஆங்கிலேயரை நேரடியாகக் கொன்ற கிளர்ச்சியாளர்களைச் தவிர மீதமுள்ள கிளர்ச்சியாளர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
• கல்வி, பொதுப்பணித் திட்டங்கள் (சாலைகள் இருப்புப்பாதை , தந்தி, நீர்ப்பாசனம்) ஆகியவை முடுக்கிவிடப்படும்.
• கடந்த காலம் மீண்டும் வரும் எனும் நம்பிக்கை மங்கியது. இந்தியச் சமூகத்தின் மரபுசார்ந்த கட்டமைப்பு உடையத் துவங்கியது. மேற்கத்தியமயமான ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தர வர்க்கம் தேசிய சிந்தனைகளோடு உருவானது.