வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் | 11th History : Chapter 18 : Early Resistance to British Rule
ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்
கற்றல் நோக்கங்கள்
கீழ்க்கண்டவை பற்றி அறிதல்
• ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு மைசூர் சுல்தான்களின் தொடக்ககால எதிர்ப்புகள்
• தென்னிந்தியாவில் பாளையக்காரர் முறை நிறுவப்படுதலும் பாளையக்காரர்களின் கிளர்ச்சியும்
• கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சியும் அரசுரிமை மறுக்கப்பட்ட ஏனைய ஆட்சியாளர்களின் வேலூர் புரட்சியும்
• ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, வட்டிக்கடைக்காரர்கள், ஜமீன்தார்களுக்கு எதிரான பழங்குடியினர், விவசாயிகளின் எழுச்சிகள்
• 1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி; அதன் முடிவில் கம்பெனியின் அதிகாரத்தை ஆங்கில அரசு கைக்கொள்ளுதல்.
அறிமுகம்
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. அவர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள், தங்கள் ஆட்சிப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் ஆகியோரால் இத்தகைய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. வரலாற்றாசிரியர்கள் இதை ஆரம்பநிலை எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். உடைமைகள் பறிக்கப்பட்ட விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் எழுச்சியும் இத்தகைய கிளர்ச்சிகளையொட்டித் தோன்றின. வேளாண் உறவுகளிலும், நில வருவாய் முறையிலும், நீதி நிர்வாகத்திலும் ஆங்கிலேயர் செய்த மிக விரைவான மாற்றங்கள் பற்றி முந்தைய பாடம் விரிவாகக் கூறியுள்ளது. இம்மாற்றங்கள் வேளாண் பொருளாதார அமைப்பில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தின. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களும் அவதிப்பட்டார்கள். எனவே, மனக்கொதிப்பில் இருந்த இந்திய ஆட்சியாளர்கள் கலகத்தில் இறங்கியபோது, அவர்களுக்கு விவசாயிகள், கைவினைஞர்கள் ஆகியோரின் ஆதரவும் இயல்பாகவே கிடைத்தது. அக்காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நடந்த நிகழ்வுகளும் 1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியும் இப்பாடத்தில் விவரிக்கப்படுகின்றன.