Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | தென்னிந்தியக் கிளர்ச்சி (1801)

ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் - தென்னிந்தியக் கிளர்ச்சி (1801) | 11th History : Chapter 18 : Early Resistance to British Rule

   Posted On :  15.03.2022 09:49 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்

தென்னிந்தியக் கிளர்ச்சி (1801)

திப்புவையும் கட்டபொம்மனையும் வென்ற பின்னர், ஆங்கிலேய படைகள் பல்வேறு முனைகளிலிருந்து திரும்பி இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள முடிந்தது.

தென்னிந்தியக் கிளர்ச்சி (1801)

திப்புவையும் கட்டபொம்மனையும் வென்ற பின்னர், ஆங்கிலேய படைகள் பல்வேறு முனைகளிலிருந்து திரும்பி இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள முடிந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் கிழக்கிந்திய கம்பெனியில் ஏற்கனவே இணைந்திருந்தார். மேலும் சிவகங்கையின் முன்னாள் ஆட்சியாளரின் வழித்தோன்றல் படமாத்தூர் ஒய்யாத்தேவரின் ஆதரவையும் கிழக்கிந்தியக் கம்பெனி பெற முடிந்தது. அவர் சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டார். இந்தப் பிரித்தாளும் தந்திரம் அரசரின் ஆதரவாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி, இறுதியில் கிளர்ச்சியாளர்களை மனந்தளர வைத்தது.

1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவு தன் நடவடிக்கைகளைத் துவக்கியது. இப்படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது. மோதலின் போது இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் கிளர்ச்சியாளர்களின் அடங்காத எதிர்ப்பும் மருது சகோதரர்களின் வீரம் செறிந்த சண்டைகளும் ஆங்கிலேயரின் நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது. முடிவில், ஆங்கிலேயரின் படை வலிமையும் தளபதிகளின் திறமையுமே வெற்றி பெற்றன. ஆங்கிலேயர் ஊமைத்துரையைக் கைது செய்ததைத் தொடர்ந்து, மருது பாண்டியரைச் சிங்கம்புணரி குன்றுகளிலும் செவத்தையாவை வத்தலகுண்டு பகுதியிலும் வெள்ளை மருதின் மகன் துரைசாமியை மதுரைக்கு அருகிலும் கைது செய்தனர். சின்ன மருதுவும் அவருடைய சகோதரர் வெள்ளை மருதுவும் 1801 அக்டோபர் 24இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரையும் செவத்தையாவும் அவர்களின் ஆதரவாளர்கள் பலரும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு 1801 நவம்பர் 16ஆம் நாள் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 73 கிளர்ச்சியாளர்கள் 1802 ஏப்ரல் மாதத்தில் மலேயாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.

தீரன் சின்னமலை


சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் ஆகியவை அடங்கிய கொங்குநாடு, மதுரை நாயக்கர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதை மைசூர் உடையார்கள் கைப்பற்றித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். உடையார்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருடன் இந்த ஆட்சிப்பகுதிகள் மைசூர் சுல்தான்களால் கட்டுப்படுத்தப்பட்டன. மூன்றாம், நான்காம் மைசூர் போர்களின் விளைவாகக் கொங்குப் பகுதி முழுதும் ஆங்கிலேயர் வசமாயின.

தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டுப் பாளையக்காரர் ஆவார். இவர் பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சியளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர். சின்னமலை கோயம்புத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் (1800) இருந்தபோது, மருது பாண்டியரின் உதவியைப் பெற முயன்றார். கம்பெனியுடன் போரிடுவதற்காக விருபாட்சி கோபால நாயக்கர், பரமத்தி வேலூர் அப்பச்சிக் கவுண்டர், சேலம் ஆத்தூர் ஜோனி ஜான் கஹன், பெருந்துறை குமராள் வெள்ளை, ஈரோடு வாரணவாசி ஆகியோருடன் கூட்டணி சேர்ந்தார்.

தனது படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை மருது சகோதரர்களிடமிருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்து விட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை. அவரும் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோட்டையைத் தாக்கினார். கம்பெனிப் படை 49 பேரைத் தூக்கிலிடுவதற்கு இது வழிவகுத்தது. சின்னமலை ஆங்கிலேயரிடம் சிக்காமல் தப்பினார். 1800இலிருந்து அவர் தூக்கிலிடப்பட்ட 1805 ஜூலை 31 வரை கம்பெனிக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தார்.

சின்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று: காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர், 1802ஆம் ஆண்டு ஓடாநிலையில் நடந்த போர்; 1804இல் நடந்த அரச்சலூர் போர் ஆகும். அவரது இறுதிப் போர் 1805இல் நடைபெற்றதாகும். இப்போரில் சின்னமலை அவருடைய சமையல்காரரால் துரோகம் இழைக்கப்பட்டார். தீரன் சின்னமலை சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

வேலூர் புரட்சி (1806)

அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்கத் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவற்றின் மொத்த விளைவுதான் 1806ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேலூர் புரட்சி ஆகும். மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் வேலூரை மையமாகக் கொண்டு செயல்பட்டனர். எண்ணிக்கையில் 3000க்குக் குறையாத திப்பு சுல்தானின் விசுவாசிகள் வேலூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குடியேறியிருந்ததால், ஆங்கிலேய எதிர்ப்புக்கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் அங்கு தங்கள் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆங்கிலேயரால் பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்னர்.இதுபோல் பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது. சிப்பாய்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக் கலந்தாலோசித்தனர். அவற்றில் திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.

உடனடிக் காரணம்

இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர் தங்கள் படையில் உள்ள சிப்பாய்ப்பிரிவில் சில புதுமைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த அனைத்து விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன. சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்குப் பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்து, தனது நேரடிக் கண்காணிப்பில் அதனை அறிமுகம் செய்தார்.

இந்தியர்களின் பார்வையில், இந்தத் தலைப்பாகையில் இடம் பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம், அதன் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் ஆகும். இது மிருகத் தோலில் செய்யப்பட்டிருந்தது. பன்றித்தோல் முஸ்லீம்களுக்கு வெறுப்பூட்டும் பொருள் ஆகும். இந்துக்கள் பசுத்தோலில் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் விலக்க வேண்டியதாகக் கருதினர். இந்த மாற்றங்களுக்கான எதிர்ப்பை இந்தியர்களிடையே இன்னும் அதிகரிக்கச் செய்யும் வகையில், சிப்பாய்கள் அணியும் சீருடையின் முன்பக்கம் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.

மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை தொடர்பான உத்தரவு இந்து, முஸ்லீம் ஆகிய இரு சமயங்களைச் சேர்ந்த சிப்பாய்களின் சமய வழக்கங்களை மீறுவதாக இருந்தாலும், இத்தகைய அடையாளங்களை வெளிப்படுத்துதல் இந்த உத்தரவுக்கு முன்பு முறையான உத்தரவால் தடை செய்யப்படாமலிருந்தாலும், அணிவகுப்பில் இவ்வாறு தோன்றும்படி எந்த ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட படையிலும் வழக்கத்தில் இருந்ததில்லை என்று இம்மாற்றங்களுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர். இந்தப் பிரச்னை படைமுகாமின் தளபதியான கவர்னர் ஃபேன் கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கிளர்ச்சியாளர்களை உடனிருந்து கண்காணிக்கும்படி 19ஆம் குதிரைப்படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இவர்கள் மீதான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவுக்குப் பதிலாக வாலாஜாபாத்திலிருந்த 23 ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பொறுப்பை ஏற்றது. தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காகப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களில் 10 முஸ்லீம்களும் 11 இந்துக்களும் இருந்தார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு இரு வீரர் (ஒரு முஸ்லீம், ஒரு இந்துக்களுக்குத் தலா 900 கசையடிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்திய வீரர்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புகளை மீறி, அவர்களின் மனக்குறைகளைப் பொருட்படுத்தாமல் அரசு தான் முன்வைத்த மாற்றங்களைச் செயல்படுத்த முடிவெடுத்தது. ‘புதிய தலைப்பாகையை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாகவே கவர்னர் வில்லியம் பெண்டிங்க் நம்பினார்.

வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின்போது பணியிலிருந்த இராணுவ அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை என முதலில் கூறப்பட்டது. எனினும், அன்றைக்குப் பொறுப்பிலிருந்த ஆங்கிலேய அதிகாரி பார்வையிடும் தனது வேலையை அன்று செய்யவில்லை என்றும் தனக்குப் பதிலாக ஜமேதார் ஷேக் காசிம் என்ற இந்திய அதிகாரியை அனுப்பினார் என்றும் பின்னர் தெரிய வந்தது. வேலூர் புரட்சிக்குப் பிறகு, அவர் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். ஜுலை 10 அதிகாலையில் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய படைப்பிரிவின் தலைவர்கள் ஜுலை 9 ஆம் நாள் இரவே கோட்டையில் தூங்குவதற்கு அதைச் சாக்காகப் பயன்படுத்தினர். இந்தத் துணை இராணுவ அதிகாரி கோட்டைக்குள் பாதுகாவலர்களாகத் தன்னால் இயன்றவரை தன்னுடைய ஆதரவாளர்களையே நியமித்தார்.

வேலூர் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுபவர் ஜமாலுதீன் ஆவார். இவர் திப்புக் குடும்பத்தின் 12 இளவரசர்களில் ஒருவர். அவர் இந்திய அதிகாரிகளிடமும் வீரர்களிடமும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின் போது, அவர்கள் வேலூர் கோட்டையை எட்டு நாட்களுக்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியும் அதற்குள் 10 ஆயிரம் ஆதரவாளர்கள் உதவிக்கு வந்து விடுவார்கள் என்றும் கூறி வந்தார். உரிமை பறிக்கப்பட்ட பாளையக்காரர்களின் உதவியைக் கேட்டு அவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார். திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த ஏராளமான அதிகாரிகள் திப்புவின் முன்னாள் அமைச்சரான பூர்ணையாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் தக்க நேரத்தில் கை கொடுப்பார்கள் என்றும் ஜமாலுதீன் கூறினார்.

புரட்சி வெடித்தல்

வேலூர்க்கோட்டையில் ஜூலை 10ஆம் நாள் காலை 2 மணிக்கு முதன்மை பாதுகாப்புத்தளத்திலிருந்த காவலாளியிடமிருந்து கார்ப்பரல் பியர்சிக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டது. படைவீரர் குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது என்பதே அச்செய்தி. பியர்சி பதில் நடவடிக்கையில் இறங்கும் முன்னரே, சிப்பாய்கள் ஆங்கிலேயப் பாதுகாவலர்கள் மீதும், படைவீரர் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவற்றின் மீதும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுத்தனர். பியர்சியும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார். ஐரோப்பியக் குடியிருப்புகளில் கோடை வெக்கையைச் சமாளிக்கக் கதவுகள் இரவிலும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. கிளர்ச்சியாளர்கள் படுக்கைகளில் பாதுகாப்பின்றி உறங்கிக்கொண்டிருந்த ஐரோப்பியரைச் சன்னல் வழியாக எளிதில் சுட முடிந்தது. ஐரோப்பியக் குடியிருப்புக்குத் தீ வைக்கப்பட்டது. ஐரோப்பிய அதிகாரிகளின் குடியிருப்புகளைக் கண்காணித்து, வெளியே வரும் எவரையும் சுடுவதற்குத் தனிப்படைப்பிரிவு நியமிக்கப்பட்டது. வெடிமருந்துகளும் துப்பாக்கி ரவைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கை முதலாம் ரெஜிமெண்ட்டின் ஒரு பிரிவு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதே ரெஜிமெண்ட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு குழு குடியிருப்புகளில் உள்ள ஐரோப்பியரைக் கொல்வதற்குத் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தது. ஏராளமான ஐரோப்பிய ஒழுங்குமுறை நடத்துனர்களுடன், 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இராணுவக்குடியிருப்பில் 82 கீழ்நிலை இராணுவ வீரர்கள் இறந்தார்கள். 91 பேர் காயமடைந்தனர்.




உள்ளூர் வீரர்கள் அடங்கிய 16ஆம் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிச் சத்தம் கேட்ட போது கோட்டைக்கு வெளியே பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் பல்லக்கிலிருந்து இறங்கி, கோட்டையின் சரிவான பகுதிக்குச் சென்று விசாரித்தார். அதற்குப் பதில் போல் பாதுகாப்பு அரணிலிருந்து சரமாரியாகப் பொழிந்த குண்டுமழை உடனடியாக அவரது உயிரைப் பறித்தது. கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு கோட்டைக்குள் நுழைய முயன்றார். அவரால் உள்ளே செல்ல முடியாததால், ஆற்காட்டில் குதிரைப்படை முகாமுக்குப் பொறுப்பு வகித்த கில்லஸ்பிக்குக் கடிதம் எழுதி, அதைக் கேப்டன் ஸ்டீவன்சன் என்பவரிடம் கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதம் வேலூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருந்த ஆற்காட்டுக்குக் காலை 6 மணி அளவில் சென்றடைந்தது. கர்னல் கில்லஸ்பி உடனே வேலூருக்குப் புறப்பட்டார். தன்னுடன் கேப்டன் யங் தலைமையில் 19ஆம் குதிரைப்படையைச் சேர்ந்த ஒரு பிரிவையும் லெப்டினெண்ட் உட் ஹவுஸ் தலைமையில் அதற்குத் துணைநிற்கும் 7ஆம் குதிரைப்படையிலிருந்து ஒரு வலுவான பிரிவையும் அழைத்துச் சென்றார். அவர் குதிரைப்படையில் மீதமுள்ள வீரர்களுடன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி கர்னல் கென்னடியிடம் அறிவுறுத்திவிட்டு, ஆற்காடு படைமுகாமைப் பாதுகாக்கவும் தன்னுடன் தகவல்தொடர்பில் இருக்கவும் ஒரு தனிப்பிரிவை விட்டுச்சென்றார்.

வேலூர் கோட்டைக்குக் காலை 9 மணிக்கு வந்தடைந்த கில்லஸ்பி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்ததால், பீரங்கிகள் தங்கள் பாதுகாப்புக்கு வந்து சேரும்வரை காத்திருக்க முடிவு செய்தார். விரைவிலேயே ஆற்காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த கென்னடி தலைமையிலான குதிரைப்படை 10 மணி அளவில் வந்துசேர்ந்தது. லெப்டினெண்ட் ப்ளாகிஸ்டன் தலைமையில் 19ஆம் குதிரைப்படையின் பீரங்கியால் கோட்டையின் வெளிவாசல் கதவு தகர்க்கப்பட்டது. கேப்டன் ஸ்கெல்ட்டன் தலைமையிலான குதிரைப்படையின் ஒரு பிரிவு கோட்டைக்குள் நுழைந்தது.

கில்லஸ்பியின் வீரர்கள் கடுமையான துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் கர்னல் கில்லஸ்பியும் காயங்களுக்கு உள்ளானார். கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பின்வாங்கினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கோட்டையின் சுவர்கள் மீது ஏறித் தப்பித்தனர் அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கருணைக்காகக் கெஞ்சினர். குதிரைப்படைப்பிரிவுகள் அனைத்தும் அணிவகுப்பு மைதானத்தில் ஒன்றுகூடின. கோட்டையின் திட்டிவாசல் மூலம் கிடைத்த குறுகலான பாதை வழியே தப்பியோடிய சிப்பாய்களைப் பின்தொடர்ந்து சென்று பிடிக்க முடிவெடுக்கப்பட்டது.

தப்பியோடிய சிப்பாய்களை வழிமறித்துப் பிடிக்கச் சில உள்ளூர் குதிரைக்காரர்களுடன் ஒரு குதிரைப்படைப்பிரிவு கிளம்பியது. கோட்டையின் அனைத்துக் கட்டிடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. அங்கு ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். கில்லஸ்பியின் ஆட்கள் கிளர்ச்சிக்குத் திட்டம் தீட்டிய திப்புவின் மகன்களைப் பழிவாங்க விரும்பினார்கள். ஆனால் லெப்டினெண்ட் கர்னல் மர்ரியாட் இதை எதிர்த்தார்.

 

கில்லஸ்பியின் வன்கொடுமைகளை நேரில் பார்த்த ஜே. பிளாக்கிஸ்டன், 800க்கும் மேற்பட்ட உடல்கள் கோட்டையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார். டபிள்யூ. ஜே. வில்சனின் மதிப்பீட்டின்படி கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக 378 பேர் சிறை வைக்கப்பட்டனர். 516 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை. விசாரணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களின்படி, இராணுவ நீதிமன்றம் சில தனிப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதித்தது. சிலரை நாடு கடத்தியது. இத்தண்டனைகள் வேலூர் பொறுப்பதிகாரியால் 1806 செப்டம்பர் 23 அன்று நிறைவேற்றப்பட்டது.

(சான்று . W.J. Wilson, History of Madras Army, Vol.II, pp. 186-89)

கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை 15 நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கர்னல் ஹர்கோர்ட் (வாலஜாபாத் படைக்குப் பொறுப்பு வகித்தவர்) ஜூலை 11இல் வேலூர் படையின் தற்காலிகப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஜூலை 13இல் ஹர் கோர்ட் படைமுகாமின் பொறுப்பாளராகப் பதவியேற்று, இராணுவச் சட்ட ஆட்சியை அமல்படுத்தினார். கர்னல் கில்லஸ்பியின் விரைவான, சிறந்த திட்டமிடலுடன் கூடிய நடவடிக்கையே, கோட்டையைச் சில நாட்களுக்குள் கைப்பற்றி, அடுத்ததாக மைசூரிலிருந்து வரவிருந்த 50 ஆயிரம் வீரர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திட்டமிட்ட கிளர்ச்சியாளர்களின் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகக் கருதப்படுகிறது.

படைவீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த அருவருப்பான மாற்றங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது நிறுவப்படாததால், அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவிடப்பட்டது. உயர்மட்டத் தீர்ப்பாயங்கள் கவர்னர், தலைமைப் படைத்தளபதி, துணை உதவி ஜெனரல் ஆகியோரை இந்தக் குளறுபடிக்குப் பொறுப்பாக்கி. அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள உத்தரவிட்டன.

வேலூர் நிகழ்வின் தாக்கம் ஹைதராபாத், வாலஜாபாத், பெங்களூர், நந்திதுர்கம், பாளையங்கோட்டை, பெல்லாரி, சங்கரிதுர்கம் ஆகிய இடங்களிலும் பரவியது. 1857ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கான அனைத்து முன்னறிகுறிகளும் வேலூர் கிளர்ச்சியில் இருந்தன. பெருங்கிளர்ச்சியில் இடம்பெற்ற கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் என்ற சொல்லுக்கு மாற்றாக வேலூர் நிகழ்வில் இடம்பெற்ற பாட்ஜ் என்பதையும் பகதூர் ஷா, நானா சாகிப் ஆகியோருக்கு மாற்றாக மைசூர் இளவரசர்களையும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும்.

Tags : Early Resistance to British Rule ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்.
11th History : Chapter 18 : Early Resistance to British Rule : South Indian Rebellion 1801 Early Resistance to British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் : தென்னிந்தியக் கிளர்ச்சி (1801) - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்