விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் :பாடச்சுருக்கம் | 12th Zoology : Chapter 7 : Human Health and Diseases
பாடச்சுருக்கம்
உடல் நலம் என்பது முழுமையான உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வு நிலையாகும். நுண்ணுயிரிகள் போன்ற பல காரணிகள் மனிதர்களுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்துகின்றன. எண்டமீபா, பிளாஸ்மோடியம் மற்றும் லீஷ்மேனியா போன்ற புரோட்டோசோவாக்கள் முறையே அமீபிக் சீதபேதி, மலேரியா மற்றும் காலா அசார் ஆகிய நோய்களை ஏற்படுத்துகின்றன. தன் உடல் தூய்மை மற்றும் சுகாதாரம், கழிவுகளை முறையாக அகற்றுதல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் நோய்த்தடுப்பேற்றம் போன்றவை நோய்களை தடுப்பதற்கு மிகவும் பயன்படும். இளைஞர்கள் மற்றும் விடலைப்பருவத்தினர் போதை மருந்துகள் மற்றும் மதுவுக்கு அடிமையாவது மேலுமொரு கவலையைத் தருவதாகும். நண்பர்களின் அழுத்தம், தேர்வு மற்றும் போட்டி தொடர்பான மன அழுத்தம் போன்றவற்றால் போதை மருந்துகள் மற்றும் மதுவிற்கு அடிமையாதல் நிகழ்கிறது. அடிமையாகிய ஒரு நபர் அனைத்து வகையான அடிமையாதலிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ள முறையான ஆலோசனை, கல்வி மற்றும் தொழில்முறை மருத்துவ உதவியை நாடல் வேண்டும்.
செயல்பாடுகள்
செயல்பாடு: 1 மாணவர்கள் தினசரி வாழ்க்கையில் நுண்ணுயிரிகளின் தாக்கத்தை ஆராய்தல் மற்றும் அதனுடைய பயன்பாட்டு திறனை எண்ணிப்பார்த்தல். மேலும் அவர்கள் சுயமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அவற்றின் கண்டுபிடிப்புகளை தெரிவித்தல்.
செயல்பாடு: 2 மாணவர்கள் தயிரில் உள்ள நுண்ணுயிரிகளை கண்டறிவதற்காக தற்காலிக பூச்சை தயாரித்தல்.
செயல்பாடு: 3 சில நோய்கள் காற்று வழியாக எவ்வாறு பரவுகின்றன என்பதை விளக்க குழுவின் தலைவர் தன் குழுவின் முன் காற்றுக் குமிழ்களை ஊதிக்காட்டுதல்.
செயல்பாடு: 4 எந்த ஒட்டுண்ணி மற்ற ஒட்டுண்ணிகளை கடத்தும் விருந்தோம்பியாக செயல்படுகிறது? விவாதி.
செயல்பாடு: 5 உன்னுடைய நண்பர்கள் உன்னை "கோழை பையன்" என்று அழைக்கிறார்கள். ஏனெனில், நீ புகையிலையை புகைப்பதில்லை மற்றும் மெல்லுவதில்லை. என்ன பதிலை நீ கூறுவாய்? எவ்வாறு நீ உன்னுடைய பலத்தை நிரூபிப்பாய்?
உண்மைகள்
1. உறையவைத்தல் (Freezing) முறையில் பாக்டீரியாக்களை கொல்ல இயலாது. இதன் மூலம் அதனுடைய வளர்ச்சியை மட்டுமே நிறுத்த முடியும்.
2. உயிர் எதிர் பொருள்கள் (Antibiotics) தீமை செய்யும் பாக்டீரியாக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் கொல்கின்றன.
3. சிறுநீர் பாதை தொற்று (UTI- Urinary Tract infection) என்பது சாதாரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 150 மில்லியன் மக்களை பாதிக்கும் பாக்டீரியா தொற்றாகும்.
4. உலக மலேரியா தினம் ஏப்ரல் 25 ஆகும்.
5. ஐஸ்லாந்து (Iceland) மற்றும் ஃபரோ தீவுகள் (Faroe islands) மட்டுமே உலகில் கொசு இல்லாத நாடுகள் ஆகும்.
6. நோய்கடத்தி தடுப்பு ஆராய்ச்சி மையம் (VCRC) புதுச்சேரியில் உள்ளது. இம்மையத்துடன் யானைக்கால் நோய் மற்றும் ஒருங்கிணைந்த நோய்கடத்தி கட்டுப்பாடு முறைகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
7. பூச்சிகளை மலடாக்கும் தொழில் நுட்பம் (SIT): இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஒரு நிலப்பரப்பிலிருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்ட தீங்குயிரி, திருகுப்புழு (Screw - worm fly) எனும் பூச்சியினமாகும்.
8. ஸிகா வைரஸ் (Zika virus) மூளை புற்று நோய்க்கு எதிரான அறுவை சிகிச்சை ஆயுதமாக பயன்படுத்த முடியும்.