மனித நலன் மற்றும் நோய்கள் - மனித வாழ்க்கை முறை குறைபாடுகள் | 12th Zoology : Chapter 7 : Human Health and Diseases
மனித வாழ்க்கை முறை குறைபாடுகள் (Lifestyle disorders in human beings)
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழைய கூற்று மனிதர்களுக்கு உண்மையாக பொருந்தும். வாழ்க்கை முறை மாற்றங்களால் வளர்ந்து வரும் பல மருத்துவ சூழ்நிலைகள் மற்றும் நோய்கள் மனித வாழ்நாளைக் குறைக்கின்றன. புகைப்பிடித்தல், மது மற்றும் போதை மருந்தை பயன்படுத்துதல், அதிக கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சியின்மை அல்லது இயக்கமில்லா வாழ்க்கை ஆகியவை வாழ்க்கை முறை குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது அறிக்கையில் நீரிழிவு நோய், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் வடிவில் உள்ள வாழ்க்கைமுறை குறைபாடுகள் பொதுசுகாதார பேரழிவை நோக்கிய மெதுவான நகர்வு என எச்சரித்துள்ளது.
வாழ்க்கைமுறை தொடர்பான குறைபாடுகளால் ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கில் அல்ல, 30 முதல் 60 வயதுடைய மில்லியன் கணக்கான மக்கள் இறக்கின்றனர், என உலக சுகாதார நிறுவனம் நம்புகிறது.
கீழ்காணும் உண்மைகள் வாழ்க்கைமுறை குறைபாடுகளை சிறப்பாக புரிந்துகொள்ள உதவும்.
1. உலகில் ஏற்படும் இறப்புகளில் 31% வாழ்க்கை முறை குறைபாடுகளால் ஏற்படும் இதய நோய்களால் நிகழ்கின்றன.
2. உடல் உழைப்பில்லா வாழ்க்கைமுறை, வைட்டமின் D போன்ற வைட்டமின் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் களைப்பு, சோர்வு, முதுகுவலி, மன அழுத்தம், எலும்பு இழப்பு, தசை வலி ஆகியவை தோன்றுகின்றன.
3. வயது தொடர்பான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் சமூக தனிமைப்படுத்துதலும் (Social isolation) வாழ்க்கை முறை குறைபாடுகளில் அடங்கும்.
4. அதிக கலோரி மதிப்புடைய கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த குப்பை உணவுகளை (Junk food) உண்ணுதல் உடல் பருமன் மற்றும் ஆரம்ப கால உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
5. நார்ச்சத்து குறைந்த பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ளுதல் மலச்சிக்கலை தோற்றுவிக்கும்.
6. வயிற்றில் ஏற்படும் அசௌகரியம் அல்லது வலி மற்றும் குடல் இயக்க கோளாறுகளுடன் மலம் கழித்தலில் ஏற்படும் தொந்தரவுகளால் இன்று பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் மற்றும் மற்ற உடல் நலக் கோளாறுகளால் இந்நோய் ஏற்படுகிறது.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
1. குப்பை உணவுகள் மற்றும் பதப்படுத்திகள், நிறமூட்டிகள் கலந்த உணவுகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
2. வேகமாக நடத்தல், யோகா போன்ற உடற்பயிற்சிகளை வழக்கமாக செய்தல் வேண்டும்.
3. வாழ்க்கைமுறைக் கோளாறுகளுக்கும் மேல் ஏதாவது உடல் நலப் பிரச்சினைகள் என்றால் மருத்துவரின் ஆலோசனைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
4. புகைபிடித்தல் மற்றும் மது குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
5. வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
6. ஒவ்வொரு நாளும் 7-8 மணி நேரம் தூங்குதல் வேண்டும்.