நீரியல் சுழற்சி | அலகு 3 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நீரியல் சுழற்சி அல்லது நீர் சுழற்சி | 8th Social Science : Geography : Chapter 3 : Hydrologic Cycle
நீரியல்
சுழற்சி அல்லது நீர் சுழற்சி
நீரியல்
என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் தன்மை , பரவல், இயக்கம் மற்றும் பண்புகள்
போன்ற பல்வேறு அம்சங்களைக் கையாளும் அறிவியலாகும். புவியில் கிடைக்கப்பெறும் நீரானது
ஒரே சீராக இருப்பதில்லை. நீர் வளமானது சில இடங்களில் மிக அதிகமாகவும், சில இடங்களில்
மிக குறைவாகவும் உள்ளது.
நீரியல்
சுழற்சி சூரிய உந்துதல் செயலாக்கத்தால் நடைபெறும் உலகளாவிய நிகழ்வு. நீர் கடலிலிருந்து
ஆவியாதல் மூலம் வளி மண்டலத்திற்குச் சென்று, பின் வளி மண்டலத்திலிருந்து மழைப்பொழிவாக
நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கும் சென்றடைகிறது. புவித்தொடர்புடைய இயக்கங்களுள்
நீர்ச்சுழற்சி மிக முக்கியமானதகும். நீர்ச் சுழற்சியில் உள்ளாகும் நீரின் அளவு மாறாதது.
இது நீர்பரவல், இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆவியாதல் புவியின் மேற்பரப்பில்
காணப்படும் நீரின் மூலமாகவும் தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமும்
நடைபெறுகிறது.
நீர்,
ஆவியாதல் மூலம் வளிமண்டலத்தின் உயரமான பகுதிகளுக்குச் செல்லும் பொழுது, திரவமாகச் சுருங்குதலின்
மூலம் மேகங்களாக மாறுகிறது. மேகத்தில் உள்ள நீர்திவலைகள் உருகுதல் மற்றும் மேகம் உடைதல்
காரணமாக பொழிவின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகிறது. மழைப்பொழிவின் ஒருபகுதி
நீர், புவியின் மீது வழிந்தோடுகிறது. இதை நீர் வழிந்தோடல் என அழைக்கிறோம். மற்றொரு
பகுதி மண்ணில் ஊடுருவல் மூலம் சென்று நிலத்தடி நீராக அமைகிறது. நீரியல் சுழற்சி என்பது
இயற்கையாக மற்றும் தொடர்ச்சியான நீர்ச்சுழற்சியாகும். நீரியல் சுழற்சி மூன்று முக்கிய
நிலைகளில் நடைபெறுகிறது. அவை
1) ஆவியீர்ப்பு
2) பொழிவு
3) நீர்
வழிந்தோடல்.