Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கார உலோகங்களின் முக்கிய சேர்மங்கள்

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

கார உலோகங்களின் முக்கிய சேர்மங்கள்

தொழிற்சாலைகளில் பயன்படும் கனிம சேர்மங்களில் சோடியம் கார்பனேட்டும் முக்கியமான ஒன்றாகும்.

கார உலோகங்களின் முக்கிய சேர்மங்கள்


சோடியம் கார்பனேட் Na2 CO3.10H2O (சலவை சோடா)

தொழிற்சாலைகளில் பயன்படும் கனிம சேர்மங்களில் சோடியம் கார்பனேட்டும் முக்கியமான ஒன்றாகும். இது சால்வே முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில், அம்மோனியாவானது அம்மோனியம் கார்பனேட்டாக மாற்றப்படுகிறது, அது பின்னர் அம்மோனியாவால் தெவிட்டிய நிலையில் உள்ள சோடியம் குளோரைடு கரைசலின் வழியே அதிகளவு கார்பன் டையாக்சைடு செலுத்துவதன் மூலம் அம்மோனியம் பைகார்பனேட்டாக மாற்றப்படுகிறது. இதனால் உருவான அம்மோனியம் பைகார்பனேட் சோடியம் குளோரைடுடன் வினைப்பட்டு சோடியம் பைகார்பனேட் மற்றும் அம்மோனியம் குளோரைடைத் தருகிறது. சோடியம் பை கார்பனேட் மிகக் குறைந்த கரைதிறனைக் கொண்டுள்ளதால் வீழ்படிவாகிறது. சோடியம் பைகார்பனேட் பிரிக்கப்பட்டு, வெப்பப்படுத்தி சோடியம் கார்பனேட் பெறப்படுகிறது. இந்த வினையுடன் தொடர்புடைய வினைகள் பின்வருமாறு

2 NH3 + H2O + CO2 (NH4)2 CO3

(NH4)2 CO3 + H2O + CO2 2 NH4 HCO3 

NH4 HCO3 + NaCl NH4Cl + NaHCO3

2 NaHCO3 Na2CO3 + CO2 + H2O

இறுதியில் கிடைக்கும் அம்மோனியம் குளோரைடு கரைசலை கால்சியம் ஹைட்ராக்சைடுடன் சேர்த்து இம்முறையில் பயன்படுத்தப்பட்ட அம்மோனியாவை மீட்டெடுக்க முடியும். கால்சியம் குளோரைடு துணைப் பொருளாக கிடைக்கிறது.

பண்புகள்:

சோடியம் கார்பனேட் பொதுவாக சலவை சோடா என அறியப்படுகிறது. இது வெண்ணிற படிகமான டெக்காஹைட்ரேட்டாக படிகமாகிறது. இது நீரில் கரைந்து காரக்கரைசலை உருவாக்குகிறது. இதை வெப்பப்படுத்தும்போது படிக நீரை இழந்து மோனோ ஹைட்ரேட்டை உருவாக்குகிறது. 373 K வெப்பநிலைக்கு மேல் இந்த மோனோஹைட்ரேட் முழுவதுமாக நீரற்ற வெண்ணிறப் பொடியாக மாறுகிறது. இது சோடா சாம்பல் எனப்படுகிறது.

Na2CO3.10H2O Na2CO3.H2O + 9H2O

Na2CO3.H2O Na2CO3 + H2O

பயன்கள்

i. சோடியம் கார்பனேட் ஆனது சலவை சோடா என அறியப்படுகிறது, இது துணி வெளுக்கப் பயன்படுகிறது.

ii. இது கடின நீரை, மென்னீராக மாற்றும் செயல்முறைகளில் பயன்படுகிறது.

iii. இது கண்ணாடி, காகிதம், பெயிண்ட் ஆகியவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது.


சோடியம் குளோரைடு NaCl ( சமையல் உப்பு )

கடல்நீரை ஆவியாக்கி சோடியம் குளோரைடு தனியாக பிரிக்கப்படுகிறது, கடல் நீரின் எடையில் 2.7 - 2.9% வரை சோடியம் குளோரைடு உப்பு உள்ளது. இந்தியாவில், ஒரு ஆண்டில் தோராயமாக 50 லட்சம் டன் உப்பு, சூரிய ஆவியாக்கல் முறையில் பெறப்படுகிறது. உப்புநீரை படிகமாக்குவதன் மூலம் பண்படாத சோடியம் குளோரைடு பெறப்படுகிறது, இதில் சோடியம் சல்பேட், கால்சியம் சல்பேட், கால்சியம் குளோரைடு மற்றும் மெக்னீசியம் குளோரைடு ஆகியவை மாசுக்களாக உள்ளன. பண்படாத உப்பிலிருந்து தூய சோடியம் குளோரைடை பின்வருமாறு பெற முடியும் முதலில் பண்படாத உப்பை குறைந்த அளவு நீருடன் சேர்த்து, வடிகட்டி கரையாத மாசுகள் நீக்கப்படுகின்றன. இக்கரைசலினுள் HCl வாயுவினை செலுத்தி சோடியம் குளோரைடு படிகமாக்கப்படுகின்றது. சோடியம் குளோரைடை விட கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடு அதிகமாகக் கரைவதால் கரைசலிலேயே தங்கி விடுகின்றன.

சோடியம் குளோரைடு 1081K வெப்பநிலையில் உருகுகிறது. இது 273K வெப்பநிலையில் 100g நீரில் 36.0g கரைதிறனைக் கொண்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்து, கரைதிறன் கனிசமாக அதிகரிப்பதில்லை.

 பயன்கள்

i) வீட்டு உபயோகத்திற்காக சாதாரண உப்பு (சமையல் உப்பு) பயன்படுகிறது.

ii) NaOH மற்றும் Na2CO3 போன்ற பல கனிம சேர்மங்களின் தயாரிப்பில் பயன்படுகிறது


சோடியம் ஹைட்ராக்சைடு :

வர்த்தக ரீதியாக, கேஸ்ட்னர் - கெல்னர் மின்கலத்தில் உப்பு நீரை மின்னாற்பகுத்து சோடியம் ஹைட்ராக்சைடு தயாரிக்கப்படுகிறது. இதில் மெர்குரி எதிர்மின்வாயாகவும், கார்பன் நேர்மின்வாயாகவும் பயன்படுத்தப்படுகின்றன குளோரின் வாயுவானது நேர்மின் வாயில் வெளிவருகிறது. எதிர்மின்வாயில் சோடியம் விடுவிக்கப்படுகிறது, மேலும் இது மெர்குரியுடன் சேர்ந்து சோடியம் மெர்குரி கலவையை (amalgam) உருவாக்குகிறது. இவ்வாறு பெறப்பட்ட சோடியம் மெர்குரி உலோகக் கலவையை நீருடன் வினைப்படுத்தும் போது சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது.

எதிர்மின்வாயில்: Na+ + e-  Na (amalgam) 

நேர்மின்வாயில்: Cl 1/2 Cl2 + e- 

2Na (amalgam) + 2 H2O 2 NaOH + 2 Hg + H2

சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு வெண்ணிற, ஒளி கசியக்கூடிய (translucent) மற்றும் நீர் ஈர்க்கும் (deliquescent) திண்மம் ஆகும். இது நீரில் கரைகிறது, இக்கரைசல் ஒரு வலிமை மிகுந்த காரக் கரைசலாகும். இது 591K வெப்பநிலையில் உருகுகிறது. சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலின் புறப்பரப்பிலுள்ள மூலக்கூறுகள் வளிமண்டலத்திலுள்ள CO2 உடன் வினைபுரிவதால் Na2CO3 உருவாகிறது.

பயன்கள்:

சோடியம் ஹைட்ராக்சைடு பாக்சைட்டை (அலுமினியத்தின் தாது) தூய்மைப்படுத்துதல் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுகிறது.

இது ஜவுளி தொழிலில், பருத்தி துணிகளை மேம்படுத்தப் பயன்படுகிறது.

இது சோப்பு, காகிதம், மற்றும் செயற்கைப் பட்டு ஆகியவற்றை தயாரிக்க பயன்படுகிறது.


சோடியம் பைகார்பனேட் (NaHCO3)

சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் அல்லது சோடியம் பைகார்பனேட் ஆனது கேக் தயாரிப்பில் பயன்படுகிறது. வெப்பப்படுத்தும் போது இது சிதைவடைந்து கார்பன்டைஆக்ஸைடு குமிழிகளை உருவாக்குவதால் கேக்கினுள் நுண் துளைகள் உருவாகிறது. தெவிட்டிய சோடியம் கார்பனேட் கரைசலில் கார்பன்டைஆக்சைடை செலுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. சோடியம் கார்பனேட்டின் வெண்ணிறப் படிகமானது குறைவான கரைதிறனைப் பெற்றுள்ளதால், வீழ்படிவாகி வெளியேறுகிறது

பயன்கள்

இது முதன்மையாகக் கேக் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

இது தோல் நோய்த் தொற்றிற்கு எதிரான மென்மையான திசு அழுகல் எதிர்ப்பொருளாகப் பயன்படுகிறது 

தீயணைப்பான்களில் பயன்படுகிறது


11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : Important compounds of alkali metals in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : கார உலோகங்களின் முக்கிய சேர்மங்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்