தொழில்மயமாக்கல்
இந்திய விடுதலைக்கு பின்னர், பொருளாதார வளர்ச்சியில் தொழில்மயமாக்கல் ஒரு முக்கிய செயல்பாடாக திகழ்கிறது. விடுதலைக்கு பின்னர், நமது நாடு தொழில் மயமாக வேண்டியதன் தேவையை நமது தலைவர்கள் உணர்ந்தனர். இதையொட்டி 1956இல் தொழிற்கொள்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு நாட்டை தொழில்மயப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அனைத்து ஐந்தாண்டு திட்டங்களிலும் தொழில்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர். தொழில்மயமாக்கல் தொடர்பாக நமது அரசுகள் மேற்கொண்ட முன் முயற்சிகள் காரணமாக இன்று இந்தியா உலகின் ஆறாவது பெரிய தொழிற்துறை நாடாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியென்பது சிறு தொழில்கள் முதல் பெரும் தொழில்கள் வரை அனைத்து விதமான தொழில்கள் ஊடாக விரிந்து பரந்து நுகர்வோருக்கான பொருள்கள் மட்டுமல்லாமல் இடைநிலை மற்றும் மூலதன பொருள்களையும் உற்பத்தி செய்கிறது.
இந்த தொழிற்துறை முன்னேற்றத்தின் காரணமாக இந்திய அந்நிய வர்த்தகத்திலும் ஒரு மாற்றம் விரிவாக நிகழ்ந்தது. இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி அதிகரித்தது. இதற்கு இணையாக தொழில்நுட்ப வளர்ச்சியும், வேளாண்மை உற்பத்தியும் மேம்பாடு அடைந்தன. இதனால் தொழிற்சாலைகள் திறம்பட மேலாண்மை செய்யும் வகையில் திட்டமிடல், வடிவமைப்பு ஆகிய திறன்கள் மேம்பாடு கண்டன. கனரக தொழில்களும் வளர்ந்தன. உள்கட்டமைப்பு வளர்ச்சி, நவீன தொழில்நுட்பங்கள், உரிய உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உயர் தொழில்நுட்ப ஆற்றலும் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தது. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியியல் தொழிற்துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் தொழில் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில் திட்டமிடுவோர் தயாரித்த செயற்திட்டங்களுக்கு ஏற்ப வளர்ச்சி முடுக்கிவிடப்பட்டது.
இவ்வாறு, திட்டமிட்டு செயல்பட்டதன் காரணமாக அடிப்படை மற்றும் மூலதனப் பொருள்கள் உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி கண்டன. இத்தகைய தொழிற்சாலைகளின் உற்பத்தி 1959இல் 50 விழுக்காடாக இருந்தது. 1990-1991இல் 79 விழுக்காடாக அதிகரித்தது. இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. ஆலைகளிலும் சுரங்கங்களிலும் பணியாற்றிய தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் அபரிதமாக உயர்ந்தது. தொழில்மயமாக்கல் எஃகு, இரும்பு, உரம், இரசாயனம், சிமெண்ட் மற்றும் ஃபெரஸ் அல்லாத உலோகங்கள் தொழில்களை மேம்படுத்தியது. புதிய மூலதன பொருள்களும் தொடங்கப்பட்டு வளர்ச்சியடைந்தன.
இக்காலக்கட்டத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவிற்கு விரிவாக்கப்பட்டன. திறன்மிக்க சுத்திகரிப்பு ஆலைகள், குழாய் பதித்தல், சேமிப்பு மற்றும் விநியோக அமைப்புகள் உருவாக்கப்பட்டு, பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் வளர்ச்சி கண்டன. இதனால் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதுடன் நாட்டின் பாசன அமைப்புகள், சேமிப்பு பணிகள், கால்வாய்கள் அனல் - நீர் மின் உற்பத்தி நிலையங்கள், இரயில்வே அமைப்பு மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஆகியன மேம்பாடடைந்தன. இந்தியாவை உலகின் பிற பாலங்களுடன் இணைப்பதில் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு வசதிகள் முக்கிய பங்காற்றின.
இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து. இந்தியாவின் தொழிற்துறை வடிவம் மாற்றங்களை கண்டது. மூலதனப் பொருள்கள் மற்றும் நுகர்பொருள்கள் தொழில்கள் பெரும் வளர்ச்சிக் கண்டதுடன் அடிப்படை தொழில்களின் வளர்ச்சி பின்னடைவு கண்டது. வங்கி, காப்பீடு மற்றும் வணிக தொழில்கள் வளர்ச்சி அடைந்தன. துறைமுகங்கள் கப்பல் கட்டுதல் மற்றும் உள்நாட்டு பன்னாட்டு விமான சேவைகள் நவீனப்படுத்தப்பட்டன. இவையாவும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக நிகழ்ந்து தொழில்மயமாக்கலுக்கு இட்டு சென்றது.
அறிவியல் தொழில்நுட்பத்துறைகளிலும் பெரும் மாற்றமடைந்தது. வேளாண்மை, தொழிற்துறை, தொழில்நுட்பம், தொலை தொடர்பு போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த இந்திய அறிவியலாளர்களின் பங்களிப்பு வரவேற்கத்தக்க பிரம்மாண்டமாக இருந்தது. சிமெண்ட், இரசாயனம், உர ஆலைகள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின் உற்பத்தி ஆலைகள், இரும்பாலைகள் இரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பொறியியல் தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றனர்.
சர்.விஸ்வேஸ்வரய்யா இந்திய பொருளாதார திட்டமிடலின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார் இவர் ஒரு முதன்மை பொறியாளர் இராஜதந்திரி அரசியல்வாதி மற்றும் மைசூர் மாநிலத்தின் 19வது திவான் ஆவார் 1955ம் ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.
உலக பால் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதியும் தேசிய பால் தினம் நவம்பர் 26ம் தேதியும் திரு வர்கிஸ் குரியனின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இவர் வெண்மை புரட்சியின் தந்தையாவார்.
ஒரு நாடு தொழிற்மயமாவதற்க்கு திறமையான தொழிற்கொள்கை அவசியமாகும். இதன் மூலமாகவே உரிய கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் இயற்றப்பட்டு தொழிற்சாலைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
தொழிற்கொள்கை தீர்மானம் 1948
இந்தியா கலப்புப் பொருளாதாரக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து 1948இல் நிறைவேற்றப்பட்ட தொழிற்கொள்கை தீர்மானம் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் தங்களுக்கான பகுதிகளில் தொடர்ந்து இயங்கும் என்பதை வலியுறுத்தியது. அனைத்து முக்கிய தொழில்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் உற்பத்தி, மின்னணு ஆற்றல் உற்பத்தி, கட்டுப்பாடு மற்றும் இரயில்வே போன்றவற்றை பொதுத்துறை நிறுவனங்கள் கட்டுப்படுத்தின. இத்துறையில் மத்திய அரசு ஏகபோகம் செலுத்தியது. நிலக்கரி, இரும்பு, ஸ்டீல், விமானம் உற்பத்தி, கப்பல் கட்டுதல் போன்ற துறைகளிலும் அரசு கட்டுப்பாடு செலுத்தியது. மீதமுள்ள துறைகளில் தனியார் நிறுவனங்களும் கூட்டுறவு நிறுவனங்களும் இயங்கின.
தொழிற்கொள்கை தீர்மானம் 1956
புதிய தொழிற்கொள்கை தீர்மானம் 1956 ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மூன்று வகை தொழில்கள் வகைமைப்படுத்தப்பட்டன. அவை, முழுவதும் அரசுக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிறுவனங்கள், அரசும் தனியாரும் இணைந்து நிர்வகிக்கும் நிறுவனங்கள், மூன்றாவதாக, முழுவதும் தனியாருக்கு ஒதுக்கப்பட்ட தொழில்கள். மேலும், தொழில்கள் தொடங்குவது தனியாரை ஊக்கப்படுத்தும் வகையில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட இதர சேவைகள் அரசால் மேம்படுத்தப்பட்டன. சிறு மற்றும் குறு தொழில்களும் அரசால் ஊக்கப்படுத்தப்பட்டன.
தொழிற்கொள்கை 1980
1980, ஜூலையில் ஒரு புதிய தொழிற்கொள்கை காங்கிரசு அரசால் அறிவிக்கப்பட்டது. தொழிற்கொள்கை தீர்மானம், 1956இல் ஏற்பட்ட வளர்ச்சியினை அங்கீகரிக்கும் விதமாக இத்தொழிற்கொள்கை கொண்டுவரப்பட்டது. தொழில்ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் அணுமின் நிலையங்கள் அமைத்து தொழில் வளர்ச்சியை ஒருங்கிணைப்பதற்கு இது அழுத்தம் கொடுத்தது. வளர்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறு தொழில் நிறுவனங்களும் குறு தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட வேண்டுமென்று ஊக்கப்படுத்தியது. ஒரு பொருளாதார கூட்டாட்சியை கொண்டு வருவது நோக்கமாக கொண்டிருந்தது.
தொழிற்கொள்கை 1980 லைசன்ஸ் ராஜ்ஜியம் எனப்படும் உரிமம் முறையிலிருந்து பெரிய தொழில்களை விடுவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. இந்த தாராளவாதக் கொள்கையால் ஏகபோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MRTP), அந்நிய செலவாணிச் சட்டம் போன்றவற்றின் பிடியிலிருந்து பெரும் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டது. மேலும், பின்தங்கிய பகுதியென்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய தொழில்களை தொடங்குவோருக்கு உரிமங்களிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டது. அகல அலைவரிசை எனும் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்திப் பொருள்களை தம் விருப்பம்போல் வடிவமைத்துக் கொள்ள உற்பத்தியாளர்களுக்கு நெகிழ்வு தன்மையுடன் கூடிய சலுகைகள் அளிக்கப்பட்டன.
P.V. நரசிம்மராவ் அரசு பதவியேற்றத்தை தொடர்ந்து 1991 ஜுலையில் ஒரு புதிய தொழிற்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தாராளமயமாக்கக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல் என்று அழைக்கப்படுகிறது.
புதிய பொருளாதாரக் கொள்கை நேரடி அந்நிய முதலீட்டிற்கு தடையாக இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. தாராளமயமாக்கல் கொள்கையின் வாயிலாக, இந்திய பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இதையொட்டி தொழில் உரிமம் பெறுதல், அந்நிய முதலீடு, அந்நிய தொழில்நுட்பம், பொதுத்துறை நிறுவனங்களின் கொள்கைகளில், பெரும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
பொருளாதாரக் கொள்கையின் தந்தை
அன்றைய பிரதமர் P.V. நரசிம்மராவ் 24.07.1991 அன்று புதிய பொருளாதாரக் கொள்கை அறிவித்தப்போது டாக்டர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தார். இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார்.
புதிய சட்டத்தின்படி கட்டாயம் உரிமம் பெறவேண்டிய தொழில்களின் பட்டியலில் 18 தொழில்கள் மட்டுமே இருந்தது. இவற்றில் நிலக்கரி, லிக்னைட், பெட்ரோலியம், சர்க்கரை, தொழில்துறை வெடிமருந்துகள், கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருள்கள், விமானப்படை மற்றும் இராணுவத்திற்கு தேவையான மின்னணுப் பொருள்கள், மருந்துகள் முக்கியமானவையாகும். அதாவது பாதுகாப்பு, உடல் நலம், சுற்றுச்சூழல் போன்றவை தொடர்பான தொழில்கள் மட்டும் உரிமம் பெறும் தொழில்களின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்த பட்டியலிலிருந்து 1993இல் மேலும் மூன்றுதொழில்கள் விடுவிக்கப்பட்டன. அவை மோட்டார் வாகனங்கள், வெள்ளை பொருள்கள் என்று அழைக்கப்படும் குளிரூட்டும் சாதனங்கள், சலவை எந்திரம், குளிரூட்டும் பெட்டிகள் மற்றும் காப்புரிமைப் பெற்ற தோல் பொருள்கள் ஆகும்.
செயல்பாடு
இந்தியாவின் பெரும் தொழில்கள் குறித்த ஒரு கருத்துரை தயார் செய்க.
வர்த்தக நடவடிக்கைகள் ஏகபோக தடுப்புச் சட்டம் (MRTP Act), 1969இல் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக போட்டிச்சட்டம் 2002 மத்திய குழும நிறுவனங்கள் அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது. இது, மீண்டும் 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் திருத்தப்பட்டது. மூலதன தடுப்புச் சட்டம் (MRTP Act) என்பது ஏகபோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் நிதி ஒரே இடத்தில் குவிவதையும் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளையும் தடுக்கும் சட்டமாகும். ஆனால் புதிய போட்டிச் சட்டம் இத்தகைய வர்த்தக கட்டுப்பாடுகளை விலக்கியது. இதன்மூலம் ஆரோக்கியமானப் போட்டி நிலவச் செய்து நுகர்வோருக்கு சிறந்தப் பொருள்களை வழங்குகிறது. அதே நேரத்தில் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும் அழுத்தம் அளிக்கப்பட்டது. நிறுவனங்கள் தமது அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரும்போது அரசிடம் முன் அனுமதிப் பெறவேண்டிய தேவை இல்லை.
தாராளமயமாக்கலை நோக்கி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், தொழில்மயமாக்கல் செயல்முறையில் போதாமைகளும் காணப்பட்டன. வேலையின்மை மற்றும் அரைகுறை வேலைவாய்ப்பு போன்ற பிரச்சனைகளால் இந்தியா இன்னமும் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி காண்பது இன்னமும் சவாலாகவே நீடிக்கிறது. தொழில்மயமாக்கல் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் பெரும் தொழில்கள் வளர்ச்சிக் காண்பதிலேயே முடிவடைகின்றன. ஆனால் சிறிய, நடுத்தர தொழில்கள் இன்னமும் பின்தங்கிய நிலையிலே உள்ளன. புதிய தொழில்கள் மேலும் நகர்ப்புற பகுதிகளை மையப்படுத்தியே தொடங்கப்படுகின்றன. இதனால் வளர்ச்சி என்பது நகர்ப்புறம்-கிராமப்புறங்களை ஒப்பிடும்போது ஏற்றத்தாழ்வுடனேயே ஏற்படுகிறது. நகர்மயமாக்கல் மற்றும் இடப்பெயர்வு என்பது இன்று அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக வளர்ந்துள்ளது.