Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்தியாவில் நிலச் சீர்திருத்தங்கள்
   Posted On :  04.04.2022 12:17 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்

இந்தியாவில் நிலச் சீர்திருத்தங்கள்

நிலம் ஒரு முக்கிய செல்வமாக எப்போதும் கருதப்படுகிறது.

இந்தியாவில் நிலச் சீர்திருத்தங்கள் 

அறிமுகம்


நிலம் ஒரு முக்கிய செல்வமாக எப்போதும் கருதப்படுகிறது. அரிசி, கோதுமை போன்ற வேளாண் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் செல்வம் ஈட்டித் தருவதோடு தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோரை அதிகாரம் செய்வதற்கான கருவியாகவும் நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக காலனிய ஆட்சியின் போதே நிரந்தர குடியிருப்புச் சட்டம், நில ஒழுங்குமுறை சட்டம் போன்றவைகள் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளரால் கொண்டுவரப்பட்ட போதிலும் நில உடமையாளர்க்கும்,குத்தகை விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள் தொடர்ந்தவாரே இருந்தன. விடுதலைக்குப் பின்னரும் கூட இந்த மோதல்கள் தொடர்ந்தன. விடுதலை இந்தியாவில் இது ஒரு சிக்கலான பிரச்சனையாக எழுந்ததை தொடர்ந்து நில உடமையாளர்கள், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழவர்கள் ஆகியோர்களுக்கான மோதல்களைத் தவிர்த்து ஒரு உடன்பாடு கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகள் விடுதலை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டன.


நாடு விடுதலை அடைந்த போது, நிலம் ஒரு சில கைகளில் மட்டும் குவிந்து இருந்தது. இதுவே, நிலமற்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு விட்டுச் சென்றது. இதனால் கிராமப்புற வாழ்க்கையில் சமூக - பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்தது. இந்தியா விடுதலை அடைந்த தருணத்தில் நாட்டில் பல இடங்களில் (தெலங்கானா,திருவிதாங்கூர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்கள்) விவசாயப் போரட்டங்கள் வெடித்தன. இத்தருணத்தில் நில உடமையாளர்கள் தங்களிடம் அதிகமாக உள்ள உபரி நிலங்களை தானமாக வழங்கும் பூமிதான இயக்கத்தினை வினோபா பாவே தொடங்கினார். அரசும் தேவையான சட்டங்களை இயற்றியது.

இவ்வாறு பெறப்பட்ட உபரி நிலங்கள் நிலமற்ற ஏழைக்களுக்கு வழங்கப்பட்டன. ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் சர்வோதயா இயக்கம் கூட்டுறவு சங்கங்களை அமைத்து வலுப்படுத்தின. தமிழ்நாட்டில் கிராமப்புற மக்கள் மத்தியில் பூமிதான இயக்கமும் சர்வோதயா இயக்கமும் வலுப்பெற ஜெகன்நாதன், கிருஷ்ணம்மாள் தம்பதியர் அரும்பாடுப்பட்டனர். நிலம் சமமாக பிரித்து வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சுதந்திர இந்தியாவில் கவனம் பெற்ற முதல் பிரச்சனையாக அமைந்தது. 1950-60-களில் நில உச்சவரம்பிற்கான சட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டன. மத்திய அரசும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது.

நிலச்சீர்திருத்தங்கள் பொருத்தவரை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட முடியும்.

முதல் பிரிவு குத்தகை விவசாய முறை தொடர்பான சட்டங்களை இயற்றுவதாகும். இச்சட்டங்கள் மூலமாக குத்தகை விவசாய ஒப்பந்தங்கள் முறைப்படுத்தப்பட்டன. ஒப்பந்த விதிமுறைகளை வரையறைப்படுத்துவது விளைச்சலில் உரிய பங்கினை உறுதிப்படுத்தலின் குத்தகை ரத்து மற்றும் மாற்றம் போன்ற நடவடிக்கைகளை தடைவிதிப்பது போன்ற குத்தகை சட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இரண்டாவது, இடைத்தரகர்களை தடை செய்யும் நிலச்சீர்திருத்த சட்டங்கள் ஆகும். காலனி ஆட்சியில் ஜமீன்தார்களின் கீழ் பணியாற்றிய இந்த இடைத்தரகர்கள் குத்தகை வாரம் வசூலிக்கும்போது அரசுக்கு அளிக்க வேண்டியதைவிட மிக அதிகமான பங்கினை எடுத்துக் கொண்டு உபரியை தமக்காக வைத்து கொண்டனர். இந்த இடைத்தரகர்முறை பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் 1958-க்கு முன்னதாகவே தடை செய்யப்பட்டுவிட்டது.

மூன்றாவது, நிலச்சீர்திருத்த சட்டங்கள் ஒருவர் எவ்வளவு நிலத்தை உரிமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை வரையறை செய்வதாகும். இதன்மூலம் உபரி நிலங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு நிலமற்ற ஏழைகளுக்கு மறுபங்கீடு செய்யப்பட்டது.

நான்காவது, பிரிவு நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் நாம் மாறுபட்ட நிலங்களை வைத்திருப்பது தொடர்பானதாகும். இவ்வாறான நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் வேளாண்மையில் அதிக விளைச்சல் பெறுவதையும் வறுமை குறைப்பையும் நோக்கமாக கொண்டவையாகும்.


விடுதலைக்கு பிறகான நிலச் சீர்திருத்தங்கள்

இந்திய வேளாண்மைத் துறையில் காணப்பட்ட தனிப்பட்ட அம்சங்கள் என்னவெனில் பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருவதுடன் சமூக நீதியை வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.இதையொட்டியே விடுதலைக்கு பிறகு ஒருங்கிணைந்த நிலச்சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு முன்னர் நிலவிய நிலத்தகராறுகள் மோதல்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.


நிலச் சீர்திருத்தங்களின் நோக்கங்களை சுருக்கமாக கீழ்க்கண்டவாறு கூறலாம். 

ஜமீன்தாரி முறை ஒழிப்பு, இடைத்தரகர் முறை ஒழிப்பு 

நில உச்ச வரம்பு கொண்டுவருதல் 

குத்தகை விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள் பாதுகாப்பு 

விவசாய சமுதாயங்கள் இடையே கூட்டுறவு

அ) இடைத்தரகர் முறை ஒழிப்பு

நிலச்சீர்திருத்தச் சட்டங்களின் முதன்மை நோக்கங்களில் ஒன்று வேளாண் விளைச்சலைப் பகிர்வதில் காணப்பட்ட முரண்பாடுகளுக்கு காரணமான இடைத்தரகர்கள் எனப்படும் ஜமீன்தாரர்கள், ஜாகிர்தார்கள் போன்றோரை அகற்றுவதாகும். இதன் மூலம் உழுபவனக்கே நிலம் சொந்தம் என்னும் முறை கொண்டுவரப்பட்டது.

ஜமீன்தாரர்முறை ஒழிப்பு மற்ற மாநிலங்களைவிட உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்காலிகமாகவாவது அமல்படுத்துவது எளிதாக அமைந்தது. அங்கு பத்திரப்பதிவுகள் முறை மற்றும் நிர்வாக இயந்திரம் ஏற்கனவே இருந்தது காரணமாகும்.

ஆ) நில உச்ச வரம்பு

நில உடமை மற்றும் பயன்பாட்டில் சமத்துவத்தை எட்டும் வகையில் நில உடமைக்கு உச்சவரம்பு விதிக்கும் உச்சவரம்பு சட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டன. இதன்மூலம் எதிர்காலத்தில் நிலம் பிரிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதும், அளவுகள் நிர்ணயிப்பது, உடமை மாற்றங்கள், விதிவிலக்குகள் ஆகியன குறித்த சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டன. அசாம், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நில உச்சவரம்பு முறையே 50ஏக்கர், 22.75 ஏக்கர், 25ஏக்கர் என ஒரே சீராக அமைந்தது. ஆனாலும் மாநிலங்களுக்குள் நிலவிய இந்த வேறுபாடுகள் காரணமாக இது ஒரு அரசியல் பிரச்சனையாக மாறியது. இதனால் இந்த நில உச்சவரம்பு சட்டங்கள் முறையாக அமல்படுத்த இயலவில்லை .

தஞ்சைபண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், 1952

நாடு விடுதலையடைந்தபோது அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியில் நில உடமைத்துவ பண்ணையடிமை நிலவியதால் பாதிக்கப்பட்ட சிறு குத்தகை விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், 1952 நிறைவேற்றப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இச்சட்டம் காலத்தின் தேவைக்கேற்ப தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் சிறு குத்தகை விவசாயிகள் தங்கள் விளைச்சலில் நியாயமான பங்கினைப் பெறுகிறார். இதேபோல நில உச்சவரம்புச் சட்டம், 1961 நிறைவேற்றப்பட்டு அவ்வப்போது காலத்தின் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இ) குத்தகை வாரம் ஒழுங்குபடுத்துதல்

விவசாய குத்தகை மற்றும் தொழிலாளர் தொடர்பான அம்சங்களை சீர்படுத்தவும், நெறிமுறைப்படுத்தவும் மூன்றாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடுமையான குத்தகை நிபந்தனைகள் காரணமாகவும் குறைவான கூலி காரணமாகவும் வேளாண்மை தொழிலில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் குறித்து வேளாண்மை தொழிலில் நிலவிய சுரண்டலை தடுக்கும் நோக்கத்துடன் காங்கிரசு அரசு மத்திய-மாநில அரசுகளில் விவசாயக் கொள்கை கொண்டுவந்தது. விவசாய பிரிவினர் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இச்சட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் திட்ட ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டன. அவற்றுள் குத்தகை வார விதிமுறைகள், குத்தகைவாரப்பாதுகாப்பு, குத்தகைத்தாரர்களின் நில உரிமை பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சங்களாகும்.

ஈ) கூட்டுறவு விவசாயம்

நான்காவது முயற்சியாக, விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து அனைவரும் இணைந்து பயிரிட்டு குத்தகை வாரம் மற்றும் செலவீனங்கள் போக விளைச்சலில் கிடைப்பதை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் கூட்டுறவு விவசாயமுறை கொண்டு வரப்பட்டது. 1960-களின் இறுதி வரை 1.88 இலட்சம் உறுப்பினர்களுடன் 7,294 கூட்டுறவு விவசாய சங்கங்கள் இயங்கின. இவற்றின் கீழ் 3.93 இலட்சம் ஹெக்டர் பயிரிடப்பட்டது. இருந்தபோதும், இவற்றின் பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்துவிட்டன. சில சங்கங்கள் மட்டும் அரசு மானியத்தை பெறுவதற்காக பெயரளவில் இயங்குகின்றன. அதுவும் பழைய முறையில் விவசாயம் செய்கின்றனர். இதில் நிலங்களில் கூட்டு நடவடிக்கையோ வளங்கள் திரட்சியோ இருப்பதில்லை . பல மாநிலங்களில் நிலச்சீர்திருத்தங்கள் நீர்த்துப்போவதற்கு இவை வழிவகுத்தன.

இந்திய கூட்டுறவுச் சட்டம் 1904

இந்திய கூட்டுறவுச் சட்டம் 1904 இல் இயற்றப்பட்டதன் அடிப்படையில் அன்றைய சென்னை மாகாண கூட்டுறவுச் சட்டம் 1932ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. விடுதலை பெற்றபின் இச்சட்டம் காலப்போக்கில் மேலும் பலப்படுத்தப்பட்டது. கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் என மூன்று வழிகளில் கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன . வேளாண் தொழில்கள் மட்டுமல்லாமல் கைத்தறி நெசவு, பட்டு நெசவு, மண்பாண்டம் செய்தல் போன்ற பல கைவினைத் தொழில்களுக்கும் கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டில் 10,000 - க்கும் அதிகமான கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன.


தமிழகத்தின் வளர்ச்சி அனுபவம்

"வருவாயில் தொடர்ந்து உயர் வளர்ச்சி விகிதத்தை எட்டியதன்மூலம் அண்மை காலமாக இந்தியாவின் தனிநபர் வருமானம் அதிகரித்து வந்தபோதும் இந்தியாவை போன்ற வருவாயுடைய பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் மனித மேம்பாட்டு தர நிர்ணயங்களில் இன்னமும் பின்தங்கியே உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் அண்டை நாடான வங்கதேசமாகும். அந்நாட்டில் தனிநபர் வருமானம் இந்தியாவைவிட குறைவாக உள்ளபோதும் மனித மேம்பாட்டு தரங்களில் பல துறைகளில் வங்கதேசத்தில் சிறப்பாக காணப்படுகிறது. இந்த வகையில் இந்தியாவிற்குள் தமிழ்நாடு மாநிலம் ஒப்பீட்டு அளவில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது.

"வருவாயில் தொடர்ந்து உயர் வளர்ச்சி விகிதத்தை எட்டியதன்மூலம் அண்மை காலமாக இந்தியாவின் தனிநபர் வருமானம் அதிகரித்து வந்தபோதும் இந்தியாவை போன்ற வருவாயுடைய பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் மனித மேம்பாட்டு தர நிர்ணயங்களில் இன்னமும் பின்தங்கியே உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் அண்டை நாடான வங்கதேசமாகும். அந்நாட்டில் தனிநபர் வருமானம் இந்தியாவைவிட குறைவாக உள்ளபோதும் மனித மேம்பாட்டு தரங்களில் பல துறைகளில் வங்கதேசத்தில் சிறப்பாக காணப்படுகிறது. இந்த வகையில் இந்தியாவிற்குள் தமிழ்நாடு மாநிலம் ஒப்பீட்டு அளவில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி விகிதத்தில் உயர்ந்து காணப்படுவதுபோல மனித வளர்ச்சியிலும் உயர் எல்லைகளைத் தொட்டுள்ளது. உண்மையில் தெற்கு ஆசியா நாடுகளிலேயே சுகாதாரம் மற்றும் கல்வி வழங்குவதில் தமிழ்நாடு மாநிலமும் கேரளா மாநிலமும் மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. - 1980 வரை நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் வறுமையில் வாடுவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது. 1990-களுக்கு பின்னரே, வறுமை தொடர்ந்து குறைந்து வந்ததையும் தனிநபர் வருமானம் உயர்ந்தையும் நாம் கண்டோம். சென் மற்றும் டிரெஸ் (2013) சுட்டிக் காட்டுவதைப்போல சமூக முரண்களுக்கான மூலவேர்களை தேடிய பொதுமக்கள் எழுச்சி, பொதுவெளிகளில் சாதிய படிநிலைகளில் மேலாதிக்கம் நிலவுவதை எதிர்ந்து கேள்விகள் எழுப்பி பொதுவெளியை மக்களாட்சிப்படுத்தியது ஆகியவற்றின் காரணமாகவே பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் போன்ற சமூக உள்கட்டமைப்புகளில் அரசு முதலீடுகள் செய்தது; இந்த முன்னேற்றத்திற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

மேலும், சமூக நலத்திட்டங்களில் அரசு முதலீடுகள் செய்வதால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முதலீடுகள் மடைமாற்றம் செய்யப்பட்டு வளர்ச்சி தடுக்கப்படுகிறது என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால், சமூக நலத்திட்டங்களில் முதலீடு செய்வதால் வளர்ச்சி தடுக்கப்படாது; மாறாக, வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்பதற்கான உதாரணமாக தமிழ்நாடு அனுபவம் விளங்குகிறது. உண்மையில் கூட்டுச் செயல்பாடுகள் மக்களாட்சிப்படுத்தக்கூடிய இத்தகைய சமூக நலத்திட்டங்கள் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கான தூண்டுதலாக அமைகிறது. முக்கியமாக வளர்ச்சி மேம்பாட்டின் காரணமாக அரசால் எதிர்காலத்திற்கு தேவையான மூலவளங்களை திரட்டிக் கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது." 

ஆதாரம்: தமிழ்நாடு மனித வளர்ச்சி அறிக்கை, மாநிலத் திட்ட ஆணையம் 2017.


செயல்பாடு

தமிழ்நாட்டில் 1960 முதல் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டங்கள் குறித்து ஆசிரியர்கள் வழிகாட்டுதலின் கீழ் விவாதிக்கவும்.


கூட்டுறவு விவசாயம்

நான்காவது முயற்சியாக, விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து அனைவரும் இணைந்து பயிரிட்டு குத்தகை வாரம் மற்றும் செலவீனங்கள் போக விளைச்சலில் கிடைப்பதை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் கூட்டுறவு விவசாயமுறை கொண்டு வரப்பட்டது. 1960-களின் இறுதிவரை 1.88 இலட்சம் உறுப்பினர்களுடன் 7,294 கூட்டுறவு விவசாய சங்கங்கள் இயங்கின. இவற்றின் கீழ் 3.93 இலட்சம் ஹெக்டர் நிலங்களில் பயிரிடப்பட்டன. இருந்தபோதும், இவற்றின் பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்துவிட்டன. சில சங்கங்கள் மட்டும் அரசு மானியத்தை பெறுவதற்காக பெயரளவில் இயங்குகின்றன. அதுவும் பழைய முறையில் விவசாயம் செய்கின்றனர். இதில் நிலங்களில் கூட்டு நடவடிக்கையோ வளங்கள் திரட்சியோ இருப்பதில்லை . பல மாநிலங்களில் நிலச்சீர்திருத்தங்கள் நீர்த்துப்போவதற்கு இவை வழிவகுத்தன. 


நிலச்சட்டம்: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஆறு அம்சங்கள் (2013)

உள்கட்டமைப்பு உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு நிலம் தேவைப்படும்போது அந்நிலங்களை வைத்திருப்போரிடமிருந்து கையகப் படுத்துவதற்குகாக மத்திய அரசு சட்டங்களில் திருத்தம் (2013) கொண்டு வந்தது. இது நிலச்சட்டம் என அழைக்கப்படுகிறது. 

1. நிலம் கையகப்படுத்தும்போது வெளிப்படைதன்மை, நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் மறுக்குடியிருப்பு (திருத்தம்) சட்டம் 2015. இது 2013 சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமாகும் (LARR Act, 2013).

2. இச்சட்டம் நிலப்பயன்பாட்டில் ஐந்து வகைமைகளை உருவாக்கியது. 1. பாதுகாப்பு , 2. ஊரக உள்கட்டமைப்பு, 3. எளிய மக்கள் வீட்டு வசதித் திட்டங்க ள் (affordable housing), 4. தொழிற்சாலைத் தொகுப்பு, 5. அரசு, தனியார் பங்கேற்புடனான உள்கட்டமைப்புத் திட்ட ங்க ள் (Public Private Partnership) மத்திய அரசு நிலங்களில்.

3. இந்த ஐந்து வகைமை பிரிவுகளும் 2013 சட்டத்திலிருந்து விலக்கு (LARR Act, 2013) அளிக்கப்பட்டன. அதாவது, 2013 சட்டத்தின்படி தனியார் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்த அந்நிலத்தின் உரிமையாளர்களில் 80 விழுக்காடு உரிமையாளர்களின் ஒப்புதல் பெறுவது, அரசு தனியார் பங்களிப்புத் திட்டங்களில் 70 விழுக்காடு நில உரிமையார்களின் ஒப்புதல் (Public Private Partnership) பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. முன்கூறிய ஐந்து பிரிவுகளுக்கும் இந்த நிபந்தனை விலக்கப்படுகிறது.

4. பல்போக நிலங்களை கையகப்படுத்துவதற்கு நிலச்சட்டம் 2013 விதித்திருந்த நிபந்தனைகளிலிருந்து முன்கூறிய ஐந்து பிரிவுகளுக்கு இச்சட்டம் விலக்கு அளிப்பதுடன் இத்திட்டங்களால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கான சமூக பாதுகாப்பு மதிப்பீட்டாய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது (LARR Act, 2013).

5. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம், இரயில்வே சட்டம் போன்ற இதர சட்டங்களின் கீழ் இழப்பீடு, புனர்வாழ்வு, மறுக்குடியிருப்பு வழங்குவது தொடர்பான பிரிவுகளும் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன (LARR Act).

6. நிலச்சட்டம் 2013 இன் குறிப்பிட்டுள்ளப்படி தனியார் நிறுவனங்களுக்கான நில கையகப்படுத்தல் பிரிவில் (LARR Act, 2013) மாற்றங்கள் ஏற்படுத்தியது. இதன்படி 'தனியார் பிரிவின் கீழ் கம்பெனிகள், குழும நிறுவனங்கள் இலாப நோக்கற்ற அமைப்புகள் ஆகியனவற்றையும் சேர்க்க முடியும்.

செயல்பாடு

தமிழ்நாடு அரசு நிலச்சீர்திருத்தங்களில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது குறித்து அறியும்படி மாணாக்கர்களிடம் கூறவும்.


12th Political Science : Chapter 8 : Planning and Development Politics : Land Reforms in India in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் : இந்தியாவில் நிலச் சீர்திருத்தங்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்