வெண்மைப் புரட்சிக்கான முக்கிய காரணங்கள், முக்கிய இலக்குகள், முக்கிய சாதனைகள் - வெண்மைப் புரட்சி | 12th Political Science : Chapter 8 : Planning and Development Politics
வெண்மைப் புரட்சி
1950-ல் விவசாய உற்பத்தியில் மட்டுமல்லாமல் பால், தயிர், நெய் போன்ற குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருள்கள் உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவு காண இயலவில்லை . பால்பவுடர், வெண்ணெய் மற்றும் குழந்தைகளுக்கான பால் பொருள்களை அப்போது இந்தியா இறக்குமதி செய்து வந்தது.
வேளாண்மை துறையில் ஏற்பட்டது போன்றே கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியிலும் ஒரு புரட்சியின் தேவையென உணரப்பட்டது.
பசு, எருமை போன்ற கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பழமையான தொழில்நுட்பம், மோசமான பராமரிப்பு போன்றவை காரணமாக கால்நடை வளர்ப்பு தொழில் இலாபமற்ற சிறு தொழிலாகவே இருந்தது. பசு, எருமை போன்ற கறவை மாடுகள் இந்திய வகை நாட்டு இனங்களாக இருந்ததால் மக்கள் தொகைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய இயலவில்லை.
இந்தியாவில் பண்ணை தொழில் இன்னமும் கிராமத் தொழிலாகவே இருந்து வருகிறது. போக்குவரத்து, பராமரிப்பு, பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகம் போன்றவற்றில் போதுமான ஆதரவு அளிக்கப்படவில்லை
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (TCMPF)
தமிழ்நாட்டில் கூட்டுறவு முறையில் பால் வளத்தைப் பெருக்கும் வகையில் 1972 இல் தமிழ்நாடு பால்வள மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது, இது டாக்டர் குரியன் வழியில் 1981இல் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பாக விரிவுபடுத்தப்பட்டது. ஊரக, ஒன்றிய, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் இது இயங்கியது. தற்போது ஆவின் எனும் வணிக முத்திரையுடன் தமிழகம் முழுவதும் பால் தேவையை தன்னிறைவு செய்கிறது. மேலும் ஆவின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் தனிநபர் பால் நுகர்வு 1993-94இல் நாள் ஒன்றுக்கு 169 கிராம் என்று இருந்ததும் 2018-19இல் 268கிராமாக அதிகரித்துள்ளது.
.பழமையான தொழில்நுட்பம் மற்றும் கால்நடை மருத்துவ வசதியின்மை ஆகியவையின் காரணமாக பண்ணை தொழில் பாதிக்கப்பட்டது. தொற்று நோய்கள் காரணமாக கறவை மாடுகள் இறப்பது தொடர்கதையாக இருந்ததால் இந்த தொழிலை விரிவுப்படுத்துவதில் ஆர்வம் காணப்படவில்லை . இதை உணர்ந்து 1970இல் தேசிய பால்வளம் மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது. இந்த மத்திய அமைப்பு பால் உற்பத்தியை அதிகப்படுத்தி நாடு முழுவதும் விநியோகிப்பதால் பால்பொருள் பற்றாக்குறை தடுக்கப்பட்டது.
1950இல் ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம் (அமுல்) வர்கீஸ் குரியன் அவர்களால் குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இதில் 200-க்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த விவசாயிகளிடம் இருந்து பால் சேகரிக்கப்பட்டு மும்பை நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் நல்ல இலாபம் காணப்பட்டதால் விவசாய சமுதாயத்தினர் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு ஏராளமானோர் இதில் உறுப்பினர்கள் இணைந்தனர்.
1960-ல் ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம் இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த பால் கூட்டுறவு சங்கமாக வளர்ந்தது. இதனை தொடர்ந்து இந்திய அரசு இந்த முறையினை பின்பற்ற முடிவு செய்து தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் தொடங்கியது. 1966இல் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நாடு தழுவிய வெண்மைப் புரட்சியை தொடங்கி வைத்தார். இந்த தேசிய முயற்சிக்கு வர்கீஸ் குரியன் தலைவராக நியமிக்கப்பட்டார். வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் ஆவார். அவரின் வழிகாட்டல், திட்டமிடல் மற்றும் தொழில்முறை அணுகுதல் காரணமாக இந்தியாவின் வெண்மைப்புரட்சி வெற்றிக் கண்டது.
1955இல் நாம் ஆண்டுக்கு 500 டன் வெண்ணெய் இறக்குமதி செய்து வந்தோம். இன்று நமது கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே ஆண்டுக்கு 12,000 டன்களுக்கு அதிகமாக உற்பத்தி செய்கின்றன. இதேபோல் 1955இல் நாம் 3,000 டன் குழந்தைகளுக்கு உணவு இறக்குமதி செய்து வந்தோம். இன்று நமது கூட்டுறவு சங்கங்கள் 38,000 டன்களுக்கு அதிகமாக உற்பத்தி செய்கின்றனர். அனைத்து வகையான பால் மற்றும் பால் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைமை 1975இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
- வர்கீஸ் குரியன்
செயல்பாடு
தமிழகத்தின் ஆவின் நிறுவனம் குறித்த தகவல்களைச் சேகரித்து விவாதிக்கவும்.
1. பால் உற்பத்தியை அதிகரித்தல் (பால் வெள்ளம்)
2. கிராமப்புற பால் பண்ணைகளில் வருவாய் அதிகரித்தல்
3. நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல்
4. நாட்டில் அந்நிய செலவாணி இருப்புக்கு சுமையாக இறக்குமதி செய்வதைக் குறைத்தல்
5. தேசிய பால் தொகுப்பு உருவாக்குதல்
6. நுண்ணூட்டத் தேவைகளை சமாளித்தல்
வெண்மைப் புரட்சி மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக (1970-79), நாட்டின் முக்கிய பால் பண்ணைகளின் 18 பண்ணைகள் தேர்வுச் செய்யப்பட்டு மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் நுகர்வோரோடு இணைக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பீடு 116 கோடி ஆகும்.
இரண்டாம் கட்டத்தில் (1981-1985), பால் பண்ணைகளின் எண்ணிக்கை 18-லிருந்து 136ஆக அதிகரிக்கப்பட்டு 290 நகர்ப்புற சந்தைகளில் நுகர்வோருடன் இணைக்கப்பட்டு பால் விநியோகம் வழங்கப்பட்டது. 1985 இறுதியில் 43 ஆயிரம் தன்னிறைவு கிராமக் கூட்டுறவு சங்கங்கள் இதில் இணைந்தனர். இவ்வாறு நாடு முழுவதும் 42.5 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு முறையில் இணைக்கப்பட்டனர். உள்நாட்டு பால் பவுடர் உற்பத்தியின் அளவு திட்டத்திற்கு முந்தைய ஆண்டு 22 ஆயிரம் டன்களாக இருந்தது 1989இல் 1 இலட்சத்து 40 ஆயிரம் டன்களாக உயர்ந்தது.
மூன்றாவது, கட்டத்தில் (1985-1996), கூட்டுறவு பால் சங்கங்கள் தமக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்வதற்கும் சந்தையை அதிகரிப்பதற்கும் ஏற்ற வகையில் வலுப்பெற்று விரிவடைந்தன. கால்நடை மருத்துவ விழிப்புணர்வு, கால்நடைக்களுக்கான நுண்ணூட்டச்சத்துக்கள், செயற்கை விந்தணு சேவை போன்றவை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு விரிவான அளவில் சென்றடைந்ததுடன் பால் பண்ணைய தொழிற்கல்வியும் விவசாயிகளுக்கு ஊட்டப்பட்டது. இரண்டாம் கட்ட இறுதியில் இயங்கிய 42 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுடன் மூன்றாம் கட்டத்தில் மேலும் 30 ஆயிரம் புதிய கூட்டுறவு சங்கங்கள் உருவாகின. கூட்டுறவு சங்கங்களில் ஆண்களும், பெண்களும் உறுப்பினர்களாக சேர்வது மிகப் பெருமளவில் அதிகரித்தது. 1988-89இல் பால் பண்ணைகளின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்தது.
இந்தியாவில் பால் உற்பத்தி 40 ஆண்டுகளில் 20 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 100 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது. பால் கூட்டுறவு இயக்கத்தின் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமானது என்று கூறுவது மிகையல்ல. இன்று இதன் காரணமாகவே உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. நமது நாட்டுக்கான தேவையை தன்னிறைவு செய்துள்ளதுடன், குழந்தைகளுக்கான பால் பவுடர் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளன. இந்திய கால்நடை வளர்ப்பாளர்களின் மத்தியில், பசு, எருமை போன்ற பால் மாடுகளை வளர்ப்பதில் அரிய ஆர்வம் ஏற்பட்டதால் தற்போது நாட்டில் 500 மில்லியன் அதாவது 50 கோடி பால் மாடுகள் உள்ளன. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பால் மாடுகள் வளர்ப்பு நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் நீள-அகலங்களில் குறுக்கு-நெடுக்கிலுமாக 22 மாநிலங்களில் 180 மாவட்டங்களில் 1 இலட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் பால் கூட்டுறவு இயக்கம் பரந்து விரிந்துள்ளது. இந்த வெற்றி கொள்முதல் மற்றும் விநியோக அமைப்பினை நாடு முழுவதும் பலப்படுத்துவதற்கு மத்திய மாநில உள்ளாட்சி அரசுகள் ஆதரவு அளித்ததன் காரணமாகவே சாத்தியமாய் உள்ளது.