பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - தகவல் செயலாக்கம் | 6th Maths : Term 3 Unit 5 : Information Processing
இயல் 5
தகவல் செயலாக்கம்
கற்றல் நோக்கங்கள்
● தொடர் வளர் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி உணர்ந்துகொள்ளுதல்.
● யூக்ளிட் விளையாட்டு என்பது ஒரு தொடர் வளர் செயல்முறை என்பதை அறிந்துகொள்ளுதல்.
● வழிமுறைகளை உருவாக்கவும், பின்பற்றவும் கற்றுக்கொள்ளுதல்.
● தகவல்களை வரிசைப்படுத்துவதின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளுதல்.
அறிமுகம்
காலையில் எழுவது, பல் துலக்குவது, உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, பால் அருந்துவது, குளிப்பது, காலை உணவைச் சாப்பிடுவது, பிறகு பள்ளிக்குச் செல்லத் தயாராவது போன்ற சில செயல்களை நாம் ஒவ்வொரு நாளும் செய்கிறோம்.
ஒவ்வொரு நாளும் இவ்வாறு நிகழுமல்லவா?
இங்கு ஒரு செயலமைப்பை நாம் திரும்பத் திரும்பச் செய்வதைக் கவனிக்கிறீர்களா? நம்முடைய வாழ்க்கையில் இதே போன்று பல தொடர் அமைப்புகள் இருக்கின்றன. உண்மையில் 'சாப்பிடுவது', 'படிப்பது', 'விளையாடுவது', 'தூங்குவது' போன்றவை நாள்தோறும் செய்யும் ஓர் ஒழுங்கு தொடர் அமைப்பு அல்லவா?
நாம் ஒரே செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே இருக்கும்பொழுது அது ஒரு புதிய வடிவத்தைத் தருகிறது.
தொடர் வளர் செயல்முறைக்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காண்போம்.
● கோலங்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு திரும்பத் திரும்ப வருவதை நாம் பார்க்கிறோம், அதனால் பெரிய கோலமாக நமக்குக் கிடைக்கிறது.
● சுவர் எழுப்புவதில், கொத்தனார் செங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாகத் தொடர்ந்து, முறையாக அடுக்கிப் பூசுகிறார். சில நாட்களுக்குப் பிறகு ஓர் அழகிய சுவர் உருவாகி இருப்பதை நாம் காணலாம்.
● தேனீக்கள் தனது தேன் கூட்டை அறுகோண அமைப்பில் தொடர்ந்து அமைத்து, அதில் அதிகப்படியான தேனைச் சேமித்து வைப்பதோடு குளிர்காலங்களில் தங்களுக்குள் உண்ணவும் செய்கின்றன.
● ஒரு சிவப்பு நிற மை புட்டியை எடுத்துக்கொண்டு, அதனுள் சிறிது பச்சை வண்ண மையைச் சேர்ப்போம். இதில் எந்த வேறுபாட்டையும் உடனடியாகக் காண இயலாது. மேலும் சிறிது பச்சை வண்ண மை சேர்க்கும் போது, சிறிது வண்ண மாற்றத்தைக் காணலாம். மேலும் சிறிது சிறிதாகச் சேர்க்க,.... வேறொரு வண்ண மாற்றத்தை நீங்கள் காண்கிறீர்களா? நீங்கள் சொட்டுச் சொட்டாகப் பச்சை வண்ண மையைச் சிவப்பு நிறத்துடன் தொடர்ந்து சேர்த்தால், முடிவில் வேறு ஒரு புது வண்ணம் கிடைக்கிறது. மேலே கூறிய அனைத்தும் தொடர் வளர் செயல்முறைகள் ஆகும்.
எனவே, தொடர் வளர் செயல்முறை என்பது ஒரு செயலைத் திரும்பத் திரும்பப் பல முறை செய்வதும் அது ஒரு புதிய விளைவைத் தருவதும் ஆகும்.
எங்கும் கணிதம் – அன்றாட வாழ்வில் தகவல் செயலாக்கம்
இயற்கையில் பிபனோசி தொடர் வரிசை
கடையில் பழங்கள் முறையாக அடுக்கப்படுவது