தலப்பட விவரணம் - புவியியல் - தேர்ந்தெடுக்கப்பட்ட தலப்படத்தை விவரணம் செய்தல் | 11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map
தேர்ந்தெடுக்கப்பட்ட தலப்படத்தை விவரணம் செய்தல்
மிர்சாபூர் மற்றும் வாரணாசி மாவட்டம், உத்திரபிரதேச மாநிலம். வரிசைக்கிரமமான நிலவரைபட எண். G44Q1263 K/12
அறிமுகம்
கொடுக்கப்பட்டுள்ள
வரிசைக்கிரமமான நிலவரைபட எண். G44Q1263K/12 உத்திரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மற்றும் வாரணாசி மாவட்டங்களை
உள்ளடக்கியது. இது 1970-71ம் ஆண்டின் நில அளவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு 1978ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது 1:50,000 என்ற அளவையில் 440 சதுர கிலோ மீட்டர் பரப்பையும் 25° 0' வ அட்சரேகை முதல் 25° 15' வ அட்சரேகை வரையிலும் 82° 30' கி தீர்க்க ரேகை முதல் 82° 45' கி தீர்க்க ரேகை வரை பரவியுள்ளது.
நிலத்தோற்றம்
இப்படம் இரண்டு வேறுபட்ட இயற்கை அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. அவை கங்கை சமவெளியும் மற்றும் விந்திய பீடபூமியுமாகும்.
கங்கைச் சமவெளியின் பரவலானது கங்கை நதியின் வளைவான போக்கின் இரு பக்கங்களிலும் காணப்படுகிறது. இதன் தென் பகுதி விந்திய பீடபூமிவரை பரவியுள்ளது. சாட்டர் நதி, கஜுரி நதி மற்றும் உஜ்ஹாலா நதி மற்றும் அவற்றின் கிளை நதிகள் விந்திய பீடபூமியின் குறுக்கே பாய்ந்து செல்கின்றன. இச்சமவெளியின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 100 மீ ஆகும். மிர்சாபூர் நகரத்தின் கிழக்கு பகுதியில் பெஞ்ச் மார்க் 84 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. கங்கை நதியின் வடக்கு பகுதியை தென் பகுதியோடு ஒப்பிடும் போது 10 மீட்டர் உயரம் குறைவாக காணப்படுகிறது. கங்கையின் கிழக்குத் பகுதி சுமார் 1.5 கி.மீ அலவுக்கு அதிக அகலமாக காணப்படுகிறது. மேலும் இந்நதி பரந்த மணல் திரள்களால் சூழப்பட்டுள்ளது.
விந்திய பீடபூமி மிர்சாபூர் மாவட்டத்தின் தென் பகுதியில் காணப்படுகிறது. இது இத்தலப்படத்தின் மொத்த பரப்பில் 50% வரை பரவியுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக சுமார் 160 மீட்டர் உயரம் கொண்ட ஆறுகளால் குறுக்காக வெட்டப்பட்ட பீடபூமி ஆகும். கங்கைச் சமவெளியும் விந்திய பீடபூமியும் சேரும் இடம் 120 மீட்டர் உயரமுள்ள சம உயர கோட்டால் குறிக்கப்பட்டுள்ளது. இது தொடர் அலைபோன்ற சரிவைக் கொண்டுள்ளது. இது எஞ்சிய தட்டையான மேற்பரப்பைக் கொண்ட டிபோபுவலாவை தொடர்ந்து முர்லி (203மீ), ராஜ்காட் (174மீ), ஷாகீராபா (167 மீ) போன்றவை காணப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணையாக ஓடும் மலைத்தொடர்கள் சிறிய பள்ளத்தாக்கால் பிரிக்கப்பட்டுள்ளது.
வடிகால்
இப்பகுதியின் முக்கிய நதி கங்கை ஆகும். இதன் போக்கு வளைவு, நெளிவுகளை கொண்டுள்ளது. கங்கை நதி மற்ற துணையாறுகளிலிருந்து நீரைப்பெருகிறது. அவற்றில் முக்கியமான நதிகள் சாட்டர் நதி, ஹஜுரி நதி மற்றும் உஜ்ஹாலா நதி ஆகியவை ஆகும். இவை பெரும்பாலும் மழைக் காலங்களில் நீரினை பெருகின்றன. விந்திய பீடபூமியில் காணப்படும் நீரோடைகள் பருவகாலங்களில் தோன்றினாலும் அவற்றின் மேற்பரப்பில் பள்ளங்களை தோற்றுவிக்கின்றன. இவை விந்திய நீர்வீழ்ச்சி மற்றும் தண்டா நீர்வீழ்ச்சி போன்ற நீர்வீழ்ச்சிகளை தோற்றுவிக்கின்றன. பீடபூமி பகுதியில் காணப்படும் நீரோடைகள் பெரும்பாலும் வட திசையில் சென்று கங்கை நதியில் கலக்கிறது.
தாவரங்கள்
வேளாண்மைக்காக வட சமவெளி பகுதியில் தாவரங்கள் அழிக்கப்பட்டதால் அப்பகுதியில் தாவரங்கள் குறைவாகவே காணப்படுகிறது. சாட்டர் மற்றும் ஹாரை நடியா பகுதிகளில் சிறிதளவு மட்டுமே தாவரங்கள் காணப்படுகின்றன. குடியிருப்புகளுக்கு அருகில் பழத்தோட்டங்களும் மற்றும் பிற தோட்டங்களும் காணப்படுகின்றன. விந்திய பீடபூமியில் இரண்டு முக்கிய பாதுகாக்கப்பட்ட காடுகள் காணப்படுகின்றன. அவை : தண்டி (Danti Reserved forest) பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் பார்க்க ச்சா (Barkachha Reserved forest) பாதுகாக்கப்பட்ட காடுகள். இவை அடிப்படையில் கலப்பு புதர் காடுகளாக மலைச் சரிவுகளிலும் உச்சியிலும் பரவி காணப்படுகிறது.
நீர்பாசன முறைகள்:
கிணறுகள் மற்றும் குளங்கள் மூலமாக இப்பகுதியில் நீர்பாசன முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது குழாய் பாசனம் மற்றும் கால்வாய் பாசனம் வட கங்கை சமவெளியில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
குடியிருப்புகள்
மணற்பாங்கான மற்றும் சதுப்பு நில கங்கைப் பகுதி, குறிப்பாக வட கிழக்கு பகுதி மற்றும் வடக்கு இருப்பு பாதையின் இரு புறங்களிலும் உள்ள காஜுரி மற்றும் சாட்டர் நதி மற்றும் விந்தியாசலத்தின் எதிரில் காணப்படும் பகுதிகளைத் தவிர கங்கைச் சமவெளியின் அநேக பகுதியில் குடியிருப்புகள் நன்கு வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. ஆற்றின் வெள்ளத்தால் ஆண்டுதோறும் இப்பகுதி பாதிப்புக்கு உள்ளாகிறது. கப்பிப்போட்ட சாலை ஓரங்களில் கிராமப்புற குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன.
விந்திய மேட்டு நிலப்பகுதி குறைவான குடியிருப்புகளைக் கொண்டுள்ளன. வேளாண் நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் இருக்கக் கூடிய பகுதிகளில் சில பெரிய தனித்த குடியிருப்புகள் காணப்படுகின்றன.
இப்பகுதியின் மிக முக்கிய நகரமான மிர்சாபூர் நகரத்தின் அமைவிடம் கங்கை நதியின் வளைவுப் பகுதியில் பிறைச் சந்திர வடிவில் அமைந்துள்ள நகர அமைப்பு ஆகும். மிர்சாபூருக்கு அடுத்ததாக வழிபாட்டு நகரமான விந்தியாச்சல்கோவில்களால் சூழப்பட்டுள்ளது. இங்கு மிக முக்கிய கோவிலாக விந்திய வாஷினி கோவில் உள்ளது. வடக்கு முதன்மை இருப்புப் பாதை மற்றும் கங்கைச் சமவெளிக்கு இடையில் விந்தியாச்சல் காணப்படுகிறது.
கங்கையின் வட பகுதியில் சந்தை நகரங்களான காச்வா, சில் மற்றும் காமரியா போன்ற வார சந்தை நடைபெறும் நகரங்கள் காணப்படுகின்றன.
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு:
இப்பகுதியில் இரண்டு முக்கிய இரயில் போக்குவரத்து காணப்படுகின்றன. அவை:
1) வடக்கு முதன்மை இருப்புப் பாதை (N.R. Main line) (மின் மயமாக்கப்பட்ட அகலப்பாதை). இப்பாதை முகல் சாரையிலிருந்து முக்கிய நிலையங்களான பகாரா, ஜிங்குரா, மிர்சாபூர் மற்றும் விந்தியாச்சலம் வழியாக செல்கிறது.
2) வடகிழக்கு இரயில் இருப்புப் பாதை (அகலப்பாதை) மிர்சாபூர் கேட் பகுதியிலிருந்து மதோசிங் வரை செல்கிறது (வாரணாசி - அலகாபாத்). ஒரு வளைவுப் பாதையானது பகாரா முதல் 2 கி.மீ தூரத்தில் உள்ள குவாரி வரை செல்கிறது.
இப்பகுதியானது சாலைப் போக்குவரத்தால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அலகாபாத் - முகல் சாரை தார்ச் சாலையானது வடக்கு இருப்பு பாதையின் தென் பகுதி வழியாக மிர்சாபூரை கடந்து செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.7 (பெரிய தக்காண சாலை) மிர்சாபூரிலிருந்து லோகாகாட் (16 கி.மீ) வழியாக கன்னியாகுமரி (2300கி.மீ) வரை செல்கிறது. மற்றொரு தார்ச் சாலை மிர்சாபூர் மற்றும் மாவட்டத்தின் தென் பகுதிகளை சாருக், ராபர்ட்காஞ்சி, மற்றும் பிப்ரி வழியாக இணைக்கிறது. அதனருகில் ஜான்பூர்-மிர்சாபூர் சாலை, சில் (மிர்சாபூர்காட்) - கோபிகஞ்ச் சாலை மற்றும் மிர்சாபூர் - படேலி ஆகிய சாலைகள் செல்கின்றன. கப்பிப் போடப்படப்படாத சாலை மிர்சாபூர் - சூனார் மற்றும் மிர்சாபூர் - மகராஜ்கஞ்ச் ஆகியவற்றை இணைக்கிறது. கங்கைச் சமவெளி அதன் மேட்டு நிலப்பகுதியோடு ஒப்பிடும் போது, சாலை போக்குவரத்து சேவை சிறப்பாக காணப்படுகிறது.
பயிற்சி
கொடுக்கப்பட்டுள்ள தலப்படத்தை கொண்டு கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும். இந்திய நிலஅளவைத் துறை இணையத்தளத்திலிருந்து தலப்படத்தை பதிவிறக்கம் செய்யவும்.
http://www.Survey of India.gov.in/pages/show/86-maps-data.
1. .தலப்படத்தில் உள்ள பொதுவான குடியிருப்பு முறை என்ன? அதன் பெயரைக் குறிப்பிட்டு குடியிருப்புகளுக்கான குறியீடுகளை வரைக.
2. கொடுக்கப்பட்டுள்ள தலப்படத்தில் காணப்படும் சம உயர கோடுகளின் இடைவெளி என்ன?
3. இரண்டு விதமான போக்குவரத்து முறைகளை குறிப்பிடுக.
4. எவையேனும் பத்து முறைக்குறியீடுகளை வரைக.
5. நிலத்தோற்றங்களை அடையாளம் கண்டு அவற்றை விவரணம் செய்க.
6. கொடுக்கப்பட்டுள்ள தலப்படத்திற்கான அட்ச மற்றும் தீர்க்க ரேகை பரவலை குறிப்பிடுக.
7. தலப்படத்தில் காணப்படும் இரண்டு வகையான தாவரங்களை குறிப்பிடுக.
8. வடிகால் அமைப்பு பற்றி விவரி.
9. வெள்ளை நிறத்திட்டுக்கள் எவ்வகையான நிலத்தோற்றத்தை குறிக்கின்றன.
10. எவ்வகையான பொருளாதார செயல்பாடுகள் இப்பகுதியில் நடைபெறுகிறது.