அளவீடுகள் | பருவம் 1 | அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நிறை | 6th Science : Term 1 Unit 1 : Measurements
நிறை
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும். நிறையின்S.Iஅலகு கிலோகிராம். இது கி.கி என குறிப்பிடப்படுகிறது. நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசையே எடை ஆகும். பூமியின் மீது ஒரு பொருளின் எடை அதன் நிறைக்கு நேர்தகவில் இருக்கும்.
பூமியை
விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு. எனவே, அங்கு எடை குறைவாக இருக்கும். ஆனால், இரண்டிலும்
நிறை சமமாகவே இருக்கும். நிலவின் ஈர்ப்புவிசை புவியின் ஈர்ப்பு விசையைப்போல ஆறில் ஒரு
பங்கு இருப்பதால், நிலவில் ஒரு பொருளின் எடை பூமியில் உள்ளதைவிட ஆறு மடங்கு குறைவாகவே
இருக்கும்.
ஒரு கையில் ஒரு தாளையும், மறுகையில் ஒரு புத்தகத்தையும் எடுத்துக்கொள்.
எந்தக் கை அதிக கனத்தை உணரும்? புத்தகத்தின் நிறையானது ஒரு தாளின் நிறையைவிட அதிகமாக
இருக்கும். எனவே தாளைவிட புத்தகத்தின் மேல் அதிக இழுவிசை இருக்கும். இதனால் நமது கை
தாளை விட புத்தகத்தைத் தாங்குவதற்கு அதிக விசையைக் கொடுக்கும். நாம் உணரும் இந்த விசையை
'கனம்' (அ) 'பாரம்' என்று கூறுகிறோம்.
உன்னுடைய நிறை என்ன? நீ அதை கிராமில் அளவிட்டால் அது மிகப்பெரிய
எண்ணாக இருக்கும். எனவே, அதை நாம் கிலோகிராமில் அளவிடுகிறோம். மிகப் பெரிய
அளவினால் ஆன எடையை டன் அல்லது மெட்ரிக் டன் என்ற அலகில் அளவிடலாம்.
1000 மில்லிகிராம் = 1கிராம்
1000 கிராம் = 1கிலோகிராம்
1000 கிலோகிராம் = 1டன்
பொதுத்தராசு
பொருளின் நிறையை அளவிட நாம் பொதுத் தராசினைப் பயன்படுத்துகிறோம்.
ஒரு தெரிந்த நிலையான நிறையோடு, ஒரு தெரியாத பொருளின் நிறையை ஒப்பிடுவதன் மூலம் அந்தப்
பொருளின் நிறையானது கணக்கிடப்படுகிறது. அது படித்தர நிறை என்றும் அழைக்கப்படுகிறது.
செயல்பாடு 4
இரண்டு
தேங்காய் ஓடுகள் மற்றும் நூல் அல்லது கம்பியைக் கொண்டு ஒரு தராசினை உருவாக்குக. தடித்த
அட்டையைக் கிடைச் சட்டமாகவும், கூரிய பென்சிலை முள்ளாகவும் அமைத்து அதனை உருவாக்கவும்.
கற்றதும் பெற்றதும்:
1.
கனமான பொருள் எது என்று கண்டறிக.
2.
இலை, காகிதத் துண்டு போன்ற குறைந்த எடை கொண்ட பொருள்களின் எடையைக் கணக்கிடுக.
மின்னணுத் தராசு:
துல்லியமான எடையைக் கணக்கிட மின்னணுத் தராசு எனும் கருவி பயன்படுகிறது.
ஆய்வகங்களில் பல சோதனைகளைச் செய்வதற்காக, பொதுவாகமின்னணுத்தராசைப் பயன்படுத்தி வேதிப்
பொருள்களின் எடையை மிகத் துல்லியமாக அளவிடுகின்றனர். மேலும், மின்னணுத் தராசினைக்கொண்டு
உணவு, மளிகைப் பொருள்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் எடையையும் கணக்கிடலாம்.