அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் | அலகு 8 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நாசா (NASA National Aeronautics and Space Administration) | 8th Science : Chapter 8 : Universe and Space Science
நாசா (NASA National Aeronautics and Space
Administration)
நாசா என்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற
விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகும். இது 1958ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் தொடங்கப்பட்டது.
தனது 10 மையங்கள் மூலம் இது தன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகள் கூட்டாக
இணைந்து, விண்வெளி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு
நாசா ஆதரவு அளித்து வருகிறது. நாசா, செவ்வாய்க் கோளுக்கு உலவியை அனுப்பியுள்ளதுடன்,
வியாழன் கோளின் வளிமண்டலத்தையும் ஆராய்ந்துள்ளது. சனி மற்றும் புதன் கோள்களையும் ஆராய்ந்துள்ளது.
மெர்குரி, ஜெமினி, அப்போலோ போன்ற தமது திட்டங்கள் மூலம் நாசா
விண்வெளியில் பயணிக்கும் தொழில்நுட்பத்தில் அதிக அனுபவம் பெற்றது. சூரிய குடும்பத்தில்
உள்ள அனைத்துக் கோள்களுக்கும், நாசா ரோபாட்டிக் விண்கலங்களை அனுப்பியுள்ளது. நாசா அனுப்பிய
செயற்கைக்கோள்கள் மூலம் கிடைத்த பூமியைப் பற்றிய ஏராளமான தகவல்களால், பூமியின் வானிலை
அமைப்பைப் புரிந்துகொள்ள முடிந்தது. நாசாவின் தொழில்நுட்பங்கள் புகை உணர்வி முதல் மருத்துவ
சோதனைகள் வரை அன்றாட வாழ்வில் பயன்படும் பல பொருள்களை உருவாக்க உதவியுள்ளன.
1. அப்போலோ
விண்வெளித் திட்டங்கள்
அப்போலோ விண்வெளித் திட்டங்களே நாசாவின் மிகப் புகழ்பெற்ற திட்டங்கள்
ஆகும். இவற்றின் மூலம், அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்கினர். இது ஒட்டுமொத்தமாக
17 திட்டங்களைக் கொண்டது. இவற்றுள் அப்போலோ-8 மற்றும் அப்போலோ-11 ஆகியவை குறிப்பிடத்
தகுந்தவை ஆகும். அப்போலோ-8 திட்டமே முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும்.
இதில், விண்கலம் நிலவைச் சுற்றிய பின் மீண்டும் பூமியை வந்தடைந்தது. அப்போலோ-11 திட்டமானது
முதன் முதலில் மனிதனை நிலவில் தரையிறங்க செய்த திட்டம் ஆகும். அப்போலோ-11 விண்கலமானது,
1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் நிலவில் தரையிறங்கியது. அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங்
முதன் முதலில் நிலவின் மேற்பரப்பில் காலடி வைத்தார்.
சந்திரனில்
தரையிறங்கிய அப்போலோ -11 விண்கலத்தில் பயணித்தவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின்
மற்றும் மைக்கல் காலின்ஸ் ஆவர்.
2. ISRO உடன் நாசாவின் பணிகள்
நாசா, ISRO உடன் இணைந்து NISAR (NASA-ISRO Synthetic
Aperture Radar) எனும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தவும், செவ்வாய்க் கோளை ஆராயும்
திட்டங்களில் இணைந்து பணி யாற்றவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
3. நாசாவில் இந்தியர்களின் பணி
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பலர் நாசாவில் பணிபுரிந்துள்ளனர்.அவர்கள்
நாசாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
கல்பனா
சாவ்லா
கல்பனா சாவ்லா பஞ்சாப் மாநிலத்திலுள்ள கர்னால் என்ற ஊரில்
1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு நாசாவில்
இணைந்தார். 1997 ஆம் ஆண்டு கொலம்பியா விண்வெளித் திட்டத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீராங்கனை என்ற புகழ் பெற்றார்.
அவரது இரண்டாவது கொலம்பியா விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி ஓடம் உடைந்த விபத்தில்
அவர் உயிரிழந்தார்.
கல்பனா
சாவ்லா விண்வெளியில், பூமியின் சுற்று வட்டப்பாதைகளில் 10.4 மில்லியன் மைல்கள் பயணம்
செய்துள்ளார். மேலும் 372 மணிநேரத்திற்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்துள்ளார்.
செயல்பாடு
5
நூலகத்திற்குச்
சென்று, கல்பனா சாவ்லாவின் சாதனைகள் குறித்து கூடுதல் தகவல்களைத் திரட்டவும். மேலும்,
கல்பனா சாவ்லாவை நாம் ஏன் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும்.
சுனிதா
வில்லியம்ஸ்
சுனிதா
வில்லியம்ஸ் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தார்
1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்வெளி வீரராக தன் பணியைத் தொடங்கினார். இவர் பன்னாட்டு
விண்வெளி நிலையத்திற்கு இரண்டு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். விண்வெளியில் நீண்ட தூரம்
நடந்த பெண் என்ற சாதனையை 2012 ஆம் ஆண்டு இவர் படைத்தார். மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடம்
7 விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், நாசாவின் அடுத்த திட்டமான செவ்வாய்க்கு
மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான திட்டக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.