Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | நாயும், ஓநாயும்

பருவம் 2 இயல் 7 | 3 ஆம் வகுப்பு தமிழ் - நாயும், ஓநாயும் | 3rd Tamil : Term 2 Chapter 7 : Naayum onaayum

   Posted On :  30.06.2022 01:45 am

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 7 : நாயும், ஓநாயும்

நாயும், ஓநாயும்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 7 : நாயும், ஓநாயும்

7. நாயும், ஓநாயும்




பசியால் வாடி மெலிந்த ஓநாய், தின்பதற்கு ஏதாவது அகப்படுமா? என்று தேடிக் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது. அப்போது கொழுகொழு என்றிருந்த ஒரு நாய், மகிழ்ச்சியுடன் எதிரே ஓடி வருவதைப் பார்த்தது.

அந்த நாயைத் தின்று விடலாமா என்று ஓநாய் நினைத்தது. ஆனால், தான் அப்போது இருந்த சோர்வான நிலையில் அந்த நாயுடன் சண்டை போட்டுத் தோற்கடிக்க முடியுமா? என்பது சந்தேகமாய் இருந்தது. அதனால் அதனுடன் நட்பாய்ப் பேச ஆரம்பித்தது.

ஓநாய்: நண்பா , நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!

நாய்: நண்பனே, மிக்க மகிழ்ச்சி. நான் சொல்கிறபடி செய்தால் நீயும் என்னைப்போலக் கொழுகொழு என்று அழகாய் இருக்கலாம். நீ இந்தக் காட்டில் இருந்து பசியும் பட்டினியுமாக ஏன் துன்பப்படுகிறாய், என்னுடன் வெளியே வந்து விடு நல்ல உணவு கிடைக்கும். 

ஓநாய்: அப்படியானால், நான் என்ன வேலை செய்ய வேண்டும்?


நாய்: வேலையாவது கீலையாவது. ஒன்றுமே கிடையாது. வீட்டுக்கு வருகிற அறிமுகம் இல்லாத புதியவர்களை விரட்டியடிக்க வேண்டும். வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும். அவ்வளவுதான், அதற்குப் பதிலாக விதவிதமான உணவுகள் கிடைக்கும். நமது தலையை வீட்டுக்காரர்கள் அன்பாக வருடிக் கொடுப்பார்கள். அது, ஆகா! என்ன சுகம் தெரியுமா?

ஓநாய்: ஓ! அப்படியா! அவ்வளவு சுகமான வாழ்க்கையா! தயவு செய்து என்னையும் அழைத்துச் செல், நண்பா.

நாய்: வா நண்பா! என்னுடன் உன்னை அழைத்துச் செல்கிறேன். இன்றிலிருந்து உனக்கு நல்லகாலம்தான்.

ஓநாய்: இதோ, இப்போதே புறப்படுகிறேன். அது சரி, அது என்ன உன் கழுத்தில் ஒரு கருப்புப் பட்டை தொங்குகிறதே!

நாய்: அது ஒன்றுமில்லை, வா. 

ஓநாய்: ஒன்றுமில்லை என்றால், கழுத்தில் எப்படி பட்டை வந்தது?

நாய்: என்னைச் சங்கிலியால் கட்டிப் போடுவதற்கு வசதியாகக் கழுத்தில் போடப்பட்ட பட்டை. அவ்வளவுதான்! 

ஓநாய்: என்ன, கட்டிப் போடுகிறார்களா! அப்படியானால், உன் விருப்பப்படி எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே போக முடியாதா?

நாய்: ஊ... கும், எப்பொழுதும் நம் விருப்பம்போல போக முடியாது. அதிலென்ன பிரமாதம்?

ஓநாய்: என்ன பிரமாதமா? அதுதான் எனக்குப் பெரிய காரியம். எப்படிப்பட்ட வாழ்க்கையாய் இருந்தாலும் சரி, என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். வீட்டில் மாட்டிக் கொண்டு விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவதைவிடச் சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல், நான் போகிறேன்.

திறன் : முற்றுப்புள்ளி, வினாக்குறி ஆகிய நிறுத்தக்குறியீடுகளை அறிந்து படித்தல்

உன்னை அறிந்துகொள்


நாம் பொருள் உணர்ந்து படிப்பதற்கு நிறுத்தக்குறிகள் உதவுகின்றன. 

? - வினாக்குறி 

, - காற்புள்ளி 

; - அரைப்புள்ளி

: - முக்காற்புள்ளி

. - முற்றுப்புள்ளி

! - வியப்புக்குறி


விளையாடலாம், வாங்க!

சொன்னால் செய்வேன்!

குழந்தைகளை வட்டமாக ஓடவிட வேண்டும். ஆசிரியர் நடுவில் நிற்க வேண்டும். ஆசிரியர் ஒரு பாடலைப் பாட வேண்டும். ஆசிரியர் பாடுவதை நிறுத்தியவுடன் எல்லாக் குழந்தைகளும் அப்படியே நிற்க வேண்டும். உடனே ஆசிரியர் ஒரு விலங்கின் பெயரைச் சொல்ல, அந்த விலங்கு போல ஒலி எழுப்ப வேண்டும். எ.கா. பசு - என மா, மா என ஒலி எழுப்புதல், இவ்வாறு வேறு வேறு விலங்குகள் பெயர் சொல்லலாம். இவ்விளையாட்டில் அனைத்துக் குழந்தைகளையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும்..



Tags : Term 2 Chapter 7 | 3rd Tamil பருவம் 2 இயல் 7 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 2 Chapter 7 : Naayum onaayum : Naayum onaayum Term 2 Chapter 7 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 7 : நாயும், ஓநாயும் : நாயும், ஓநாயும் - பருவம் 2 இயல் 7 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 7 : நாயும், ஓநாயும்