Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | தேசியச் சின்னங்கள்

பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தேசியச் சின்னங்கள் | 6th Social Science : Civics : Term 2 Unit 1 : National Symbols

   Posted On :  04.07.2023 12:13 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்

தேசியச் சின்னங்கள்

கற்றல் நோக்கங்கள் • இந்தியாவின் இயற்கை தேசியச் சின்னங்களை அறிதல். • இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளல். • இந்தியாவின் பிற தேசிய சின்னங்களை அறிந்து அவற்றைப் போற்றுதல் • இந்திய தேசிய விழாக்களை அறிந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்ளல்.

குடிமையியல்

அலகு 1

தேசியச் சின்னங்கள்


 

கற்றல் நோக்கங்கள்

• இந்தியாவின் இயற்கை தேசியச் சின்னங்களை அறிதல்.

• இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளல்.

• இந்தியாவின் பிற தேசிய சின்னங்களை அறிந்து அவற்றைப் போற்றுதல்

• இந்திய தேசிய விழாக்களை அறிந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்ளல்.

 

நுழையுமுன்

இப்பாடம் இந்தியாவின் இயற்கை தேசியச் சின்னங்கள் மற்றும் பிற தேசியச் சின்னங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. பல்வேறு தேசிய விழாக்களை விவரிக்கிறது.

வேலனும் பொன்னியும் புலிவனம் என்ற காட்டுக்குக் காணுலா சென்றிருந்தார்கள். காட்டுக்குப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுடைய மனது உற்சாகத்திலும் சாகச உணர்விலும் வானத்தில் பறக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு வழிகாட்டியாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர் வீணா வந்திருந்தார். அந்தக் காட்டின் ஊடாக பழம்பெருமை வாய்ந்த ஆறு ஒன்று பாய்ந்து கொண்டிருந்தது. கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகளும் அந்தக் காட்டில் இருந்தன.

திட்டமிட்டபடி காட்டின் எல்லைவரை அவர்கள் வாகனத்தில் சென்றடைந்துவிட்டார்கள் "உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்" பார்க்க குட்டி என்றபடியே, அந்தக் காட்டைப் ஆவலுடன் வந்திருக்கும் ஆராய்ச்சியாளர்களை வனத்துறை அலுவலர் மணிமாறன் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவரிடம் வேலனையும் பொன்னியையும் வீணா அறிமுகப்படுத்தி வைத்தார். இனிமேல் காட்டுப் பாதைக்குள் வழக்கமான வாகனங்கள் செல்ல முடியாது. மின்கலன்களால் இயங்கும் புகை வெளியிடாத, கண்ணாடியால் மூடப்பட்ட வாகனத்தில்தான் செல்லமுடியும். வனத்துறை அலுவலர் மணிமாறனுடன் வீணா குழுவினர் காட்டின் எல்லையில் நின்றிருந்த அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள்.

"நாம் இப்போது காட்டுக்குச் செல்கிறோம். புலியைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கும். அதிர்ஷ்டமிருந்தால் பார்க்கலாம். ஒரு புலியைப் காட்டின் மையஅச்சு புலிதான் என்றாலும், எண்ணற்ற பறவைகள், பூச்சிகள், ஊர்வன, நீர் - நிலம் இரண்டிலும் வாழும் இருவாழ்விகள் எனப் பலவும் சேர்ந்ததுதான் ஒரு காடு. புலியைப் பற்றி மட்டுமே யோசிக்காமல் காட்டில் தென்படும் உயிரினங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் நேரில் பார்த்து ரசிக்கலாம். அதேநேரம் காட்டுக்குள் சத்தமாக பேசக் கூடாது" என்றார் மணிமாறன்.

இன்னும் சிறிது நேரத்தில் ஒரு அழகான தாமரைத் தடாகத்தை பார்க்க இருந்தார்கள். அந்த வாகனம் மெதுவாகவே சென்றது. தாமரைத் தடாகத்தில் தாமரை மலர்கள் அழகுற மலர்ந்து சிரித்தன. "தாமரையில் பல வகைகள் உண்டு. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள தாமரையை செந்தாமரை என்கிறோம். தனித்தன்மை மிகுந்த வடிவமைப்பைக் கொண்டது தாமரை மலர்" என்று வீணா கூறினார்.

அந்தத் தடாகத்துக்கு அருகிலிருந்த ஒரு பெருமரத்துக்குப் பின்னால், மயில் ஒன்று தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. மரத்தின் இந்தப் பக்கம் இருந்து சத்தம் போடாமல் வேலனும் பொன்னியும் அதை ரசித்தார்கள். "மணிமாறன் மாமா, மழை வந்தா மயில் தோகை விரித்து ஆடும் என்று சொல்வார்கள். அப்போ இப்போது மழை வருமா" என்று பொன்னி கேட்டாள்.

“வரலாம் மழை வந்தால் மயில் தோகை விரித்து ஆடும் என்பது உண்மைதான். மயில் தோகை விரித்து ஆடுவதைக் கண்ட குறுநில மன்னன் நடுங்குகிறதோ ஒருவர் மயில் குளிருக்கு எனக் கருதி தன் போர்வையைக் கொடையாக அளித்தாராம். இவர் பெருமை வாய்ந்த சங்ககால தமிழகத்தைச் சேர்ந்தவரும், கடையெழு வள்ளல்களுள் மதிப்பிற்குரிய ஒருவருமான பேகன் என்னும் குறுநில மன்னன் ஆவார்.


உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

"மயில் நம் தேசியப் பறவைன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நம் பாரம்பரியத்திலும் கலைகளிலும் மயிலுக்கு நீண்டகாலமாக இடம் இருந்திருக்கு. அழகும் கம்பீரமும் நிறைந்த அந்தப் பறவை நாடு முழுவதும் காணப்படுவதே, அது தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம்." என்றார் மணிமாறன்.

அந்த வனத்திற்குள் சிறு இயந்திர ஒலிகூட எழாமல் வாகனம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது. இரு புறங்களிலும் காணப்பட்ட வனத்தின் காட்சிகளைக் கண்கொட்டாமல் ரசித்தபடி வந்தனர்.

"இப்ப நாம் ஆற்றின் கரையை நெருங்கிட்டோம். இனிமே சிறிது தொலைவுக்கு ஆற்றின் கரையோரமாகத்தான் போகணும். இந்த ஆற்றில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு புதிய விலங்கை உங்களுக்குக் காட்டப் போகிறேன். சத்தமில்லாமல் காத்திருந்தால், நிச்சயமாக அதைப் பார்க்கலாம். எல்லோரும் உங்கள் பைனாகுலரை (Binocular) எடுத்துக்குங்க" என்றார் மணிமாறன்.

காட்டுக்குப் போவதென்றால் பைனாகுலருடன்தான் வரவேண்டுமென்று வீணா முன்னதாகவே சொல்லியிருந்தார். வேலனும் பொன்னியும் தெரிந்தவர்களிடம் அதைக் கேட்டு வாங்கி வந்திருந்தார்கள். பைனாகுலரைக் கண்ணில் பொருத்தி, ஆற்றை நோக்கிச் சாய்ந்தவாறு புதர் போல மண்டியிருந்த ஒரு மரத்தின் இடைவெளி வழியாகப் பார்த்தார்கள். "ஏதோ கரியால் முதலை மாதிரி ஓர் உயிரினம் நீந்திப் போகுது போலிருக்கிறதே" என்று வீணா கூறினார். காலை சூரியன் எதிர்ப்புறத்தில் இருந்து அடித்ததால், தெளிவாகப் பார்க்க முடியவில்லை. "சூரியன் கண்ணில் படாத மாதிரி நின்றுகொண்டு கவனமாகப் பாருங்கள், அது கரியால் இல்லை." என்றார் மணிமாறன்.

"ஆமா, அது ஏதோ மீன் போலல்லவா இருக்கிறது" என்றார் வீணா. "அது மீன் இல்லை, நீர்வாழ் பாலூட்டியான ஓங்கில் (டால்பின்)"

"என்னது டால்பினா? கடலில் தாவித் தாவி விளையாட்டு காட்டுமே, அது எப்படி ஆற்றுக்கு வரும்? ' என்று வேலனும் பொன்னியும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.

"நம் நாட்டில் ஆற்று ஓங்கில்களும் வாழ்கின்றன. தொலைவிலிருந்து வெளியே பார்க்கும்போது, நீருக்கு நீண்டிருக்கும் அதன் நீண்ட வாயும் கரியால் முதலையின் வாயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். ஆனால், இரண்டும் வேறுவேறு. வௌவால்களைப் போலவே இந்த ஓங்கில்களும் மீயொலி அலைகளைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன, இவற்றின் பார்வைத்திறன் குறைவு"

" ரொம்ப சுவாரசியமான தகவலா இருக்கே" என்றான் வேலன்.

"அது சரி, நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த ஆற்றின் பெயர் என்ன தெரியுமா?"

"கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்" என்று பாரதியார் புகழ்ந்து பாடினாரே, அந்த கங்கை ஆறுதானே? இங்கே வர்றதுக்கு முன்னாடியே இந்தக் காட்டைப் பற்றி சில விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டுப் போ என்று அப்பா சொல்லியிருந்தார். அதனால படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். நான் சொன்னது சரியா?" என்று கேட்டாள் பொன்னி.

"சந்தேகமே இல்லாமல் சரி."

"2,525 கி.மீ. தொலைவுக்குப் பாயும் இந்தியாவின் நீளமான நதியும் இதுதான் தெரியுமா?" என்று ஆச்சரியப்படுத்தினான் வேலன்.

"பிரம்மபுத்திரா 3,848 கி.மீ நீளமுடையது என்றாலும் அது இந்தியாவில் பாயும் தொலைவு குறைவுதான். அதனால், வேலன் சொன்னதும் சரிதான்" என்றார் வீணா.

"நிறைய விஷயங்களைப் பார்த்துட்டோம். இப்போதைக்கு இந்த மாம்பழங்களைச் சாப்பிட்டுப் பசியாறுங்கள்" என்று மாம்பழத் துண்டுகளை எல்லோருக்கும் கொடுத்தார் மணிமாறன்.

" இந்த மாம்பழம் ரொம்ப சுவையாக இருக்கே. இது என்ன வகை?" என்று கேட்டார் வீணா.

“இமாம்பசந்த் முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள். இந்தக் காட்டின்


எல்லையில் உள்ள தோப்பில் விளைஞ்சது" என்றார் மணிமாறன். மாம்பழங்களைச் சுவைத்துக்கொண்டே மீண்டும் வண்டியில் ஏறி அவர்கள் புறப்படத் தயாரானார்கள்.

'"அடுத்து இன்னொரு ஆச்சரியமான விஷயத்தைப் பார்க்கப் போறோம்" என்றபடியே வாகனத்தைக் காட்டின் ஒரு பகுதியையே ஆக்கிரமித்திருந்த ஆலமர விழுதுகளைச் சுற்றி ஓட்டினார் மணிமாறன். அடுத்தடுத்து விழுதுகள் வந்துகொண்டே இருந்தன. எல்லா விழுதுகளையும் சுற்றி முடித்து, புறப்பட்ட இடத்துக்கே அவர்கள் வந்தபோது "இவ்வளவு பெரிய ஆலமரமா?" என்று வேலனும் பொன்னியும் வியந்துபோனார்கள்.

"ஆமாம், இந்த ஆலமரம் ரொம்பப் பெரிசு. இந்தக் காட்டின் மூதாய் மரம் என்றுகூட இதைச் சொல்லலாம். இந்த ஆயிரக்கணக்கான பறவைகள் மரத்தில் தஞ்சமடைகின்றன. கொல்கத்தாவின் அவுரா பகுதியில் அமைந்துள்ள இந்தியத் தாவரவியல் பூங்காவில் உள்ள உலக சாதனை படைத்த ஆலமரத்தைப் போன்றதொரு ஆலமரம் இது." என்றார் மணிமாறன்.

"அடையாறு தியசாபிகல் சொசைட்டியிலும் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அதை நான் நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்." என்றாள் பொன்னி.

"கொஞ்சம் பொறுமையா போவோம், ஆலமரத்தின் பின்பக்கமா பாருங்க ஒரு சின்ன யானை மந்தை மலை மேல ஏறிக்கிட்டிருக்கு." என்றார் மணிமாறன்.

“காட்டு யானைகள் ஆக்ரோஷமா இருக்கும்னு சொல்வாங்களே. நமக்கு ஆபத்தில்லையா?" என்று பயத்தை வெளிப்படுத்தினான் வேலன்.

"முதல் விஷயம், காட்டில் எந்த உயிரினத்துக்கும் நாம் தொந்தரவு கொடுக்கக் கூடாது. காடு உயிரினங்களின் வீடு. அதுக்கப்புறம்,நம்மை பாதுகாப்பா வைச்சுக்கிட்டு உயிரினங்களை ரசிக்கலாம். அவசர காலத்தில் அறிவுபூர்வமாகவும் சாதுர்யமாகவும் நம்மை எப்படிப் பாதுகாத்துக்கணும்னு தெரிஞ்சிருக்கணும் அதுக்காகத்தான் காட்டுக்குள் போகும்போது காடுகளிலேயே காலம்காலமா வாழ்ந்துவரும் பழங்குடி வழிகாட்டிகளைப் பயன்படுத்துறோம்" என்றார் மணிமாறன்.

"எவ்வளவு பெரிய உயிரினம் என்றாலும், அவற்றை மதிக்கிறவரை, நம்மை அவை எதுவும் பண்ணாதுன்னு சொல்ல வர்றீங்களா மாமா?"

"நிச்சயமா, இப்போ அந்த யானைகளைப் போல நாமும் மலை மேல ஏறலாம். மலை மேல இன்னுமொரு ஆச்சரியம் உங்களுக்குக் காத்திருக்கு" என்று மணிமாறன் கூறினார்.

காட்டுக்குள் இருந்த மலைப்பகுதியில் குறிப்பிட்ட தொலைவு அவர்கள் மேல ஏறிய பிறகு, ஒரு சமவெளி போன்ற சிறு பரப்பு வந்தது. அங்கே வண்டியை நிறுத்திவிட்டு, பைனாகுலர் வழியாக ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார் மணிமாறன், அங்கே பாருங்க".

அங்கே தரையில் காய்ந்த இலைகள், சருகுகளைக் கொண்டு கூம்பு வடிவத்தில் கட்டப்பட்ட கூடு போலிருந்தது. "இது எந்த உயிரினத்தோட கூடாக இருக்கும்னு நினைக்கிறீங்க" என்று மணிமாறன் கேட்டார்.

"தரையில் பறவைகளும் கூடு கட்டும். ஆனா, இது வித்தியாசமா இருக்கே?" என்றார் வீணா.

"அது ஒரு பாம்போட கூடு, கருநாகத்தின் (King Cobra) கூடு,

"என்னது பாம்பு கூடு கட்டுமா, நாங்க கேள்விப்பட்டதேயில்லையே?" என்றான் வேலன்.

"உலகிலேயே கூடு கட்டி, அதில் முட்டை வைத்து இனப்பெருக்கம் செய்யும் பாம்பு வகை இது. அதேபோல ரொம்ப சாதாரணமா 18 அடி நீளம் வளரும். நஞ்சு கொண்ட பாம்புகளில் உலகிலேயே நீளமானது இது" அவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தினார் மணிமாறன்.

"அடர்ந்த காட்டுக்குள்ளும் பார்த்துட்டோம், மலை மேலயும் ஏறிட்டோம். ஆனா, புலி மட்டும் இன்னும் தென்படவே இல்லையே" என்று சோர்வுடன் கூறினாள் பொன்னி.

"கவலைப்படாதே பொன்னி, எத்தனையோ ஆச்சரியமான விஷயங்களை இந்தக் காட்டில் நாம பார்த்துட்டோம். புலி ரொம்ப கூச்ச சுபாவம் கொண்ட உயிரினம். அவ்வளவு எளிதா வெளியே வராது. இந்த மலைச்சரிவில் பாறைகள் நிறைந்த ஓர் இடம் இருக்கு. கீழே இறங்கும்போது அங்கே புலி இருக்கான்னு பார்ப்போம்" என்றார் மணிமாறன்.

அவர் சொன்ன இடத்திலும் புலி இல்லை. குழந்தைகள் இருவரும் பல்வேறு ஆச்சரியங்களை அன்றைக்குப் பார்த்திருந்தாலும், புலியைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை மட்டும் அவர்களுக்குத் தீரவில்லை.

"நான் போகும் ஒவ்வொரு காடும் புதுசு புதுசாகத்தான் இருக்கு. ஆராய்ச்சியாளரான எனக்கே தெரியாத பல விஷயங்களை இன்றைக்கு மணிமாறன் சாரும், நிறைய பழங்குடிகளும்எனக்குக்கத்துத்தந்திருக்காங்க. ஆராய்ச்சிக்காகப் பல முறை காட்டுக்கு வந்து போயிருந்தாலும் என்னால் புலியைப் பார்க்க முடிந்ததில்லை. இன்னொரு முறை புலியைப் பார்ப்போம், கவலைப்படாதீங்க" என்று அவர்களைச் சமாதானப்படுத்தினார் வீணா.

அவர்கள் திரும்பி வந்த வழியில் ஓங்கிலைப் பார்த்த அதே இடத்துக்கு வந்தவுடன் ஓய்வெடுப்பதற்காக வண்டியை சற்று நிறுத்தினார்கள். பொன்னி கீழே இறங்கி கண்களில் பைனாகுலரை பொருத்திbபுதரில் இருந்த இடைவெளிகள் வழியாக ஆற்றைப் பார்த்தாள். அவளால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. "மாமா, மாமா, அங்க பாருங்க, அங்க பாருங்க" என்று கிசுகிசுக்கும் குரலில் கூறினாள். எல்லோரும் கண்களில் பைனாகுலரைப் பொருத்தி புதருக்குப் பின்னால் இருந்து பார்த்தார்கள். புலி ஒன்று தன் மூன்று குட்டிகளுடன் ஆற்றில் நீர் அருந்திக்கொண்டிருந்தது. அழகு நிறைந்த அந்தக் காட்சியைத் தன் கேமராவில் பதிவு செய்துகொண்டார் வீணா. அந்தப் புலிகள் நீர்


அருந்தித் திரும்பும்வரை கண் கொட்டாமல் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"இதுதான் இந்தியக் காடுகளின் நிஜ ராஜா" என்றார் மணிமாறன்.

"நீங்கள் சொல்றது 100 சதவீதம் உண்மை" என்று ஆமோதித்தார் வீணா.

பிறகுவண்டியில் ஏறிகாட்டின்எல்லைக்குத் திரும்பும்போது வீணா ஒரு கேள்வி கேட்டார்."குழந்தைகளா இன்னைக்கு நீங்க நேரில் பார்த்த உயிரினங்கள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு தெரியுமா?" என்று கேட்டார் வீணா.

"என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை?" என வேலன் கேட்டான்.

"சீக்கிரம் சொல்லுங்க. நாங்க ரொம்ப ஆவலா இருக்கோம்" என்றாள் பொன்னி.

"இன்றைக்கு நாம பார்த்த எல்லாமே, இந்தியாவோட இயற்கை தேசியச் சின்னங்கள் என்கிற சிறப்பு அங்கீகாரம் பெற்றவை". "ரொம்பச் சரியா சொன்னீங்க வீணா, பாருங்க நான்கூட அதை யோசிக்கலை" என்றார் மணிமாறன்.

 

தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள்



Tags : Term 2 Unit 1 | Civics | 6th Social Science பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 2 Unit 1 : National Symbols : National Symbols Term 2 Unit 1 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள் : தேசியச் சின்னங்கள் - பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்