வரையறை, பொருள்கள், தொடர்வினை, மாறுநிலை நிறை - அணுக்கருப்பிளவு | 10th Science : Chapter 6 : Nuclear Physics
அணுக்கருப்பிளவு
1. வரையறை
யுரேனியம் உட்கருவினை நியூட்ரான்
கொண்டு தாக்கும் போது ஒப்பீட்டளவில் சமமான நிறைகொண்ட இரண்டு சிறு உட்கருக்களாகப்
பிளவுற்று, சில நியூட்ரான்களையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது என்பதனை 1939 இல் ஜெர்மன் அறிவியல் அறிஞர்கள் ஆட்டோஹான் மற்றும் F. ஸ்ட்ராஸ்மன் கண்டறிந்தனர்.
கனமான அணுவின் உட்கரு, பிளவுற்று இரண்டு
சிறு உட்கருக்களாக மாறும் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படும்
நிகழ்வு ‘அணுக்கருப் பிளவு' என்றழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு
யுரேனியம் 235 (U235) இன் அணுக்கரு பிளவு
92U235 + 0n1 → 56Ba141 + 36Kr92 +
30n1 + Q (ஆற்றல்)
ஒவ்வொரு பிளவிற்கும் 3.2 × 10-11 J அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது. அணுக்கருப் பிளவினைப் படம் 6.2 விளக்குகிறது.
2. பிளவுக்குட்படும்
பொருள்கள்
கதிரியக்கப் பொருள் ஒன்று
நியூட்ரான்களை உட்கவர்ந்து நிலைநிறுத்தப்பட்ட பிளவுகளை ஏற்படுத்துமானால் அப்பொருள்
பிளவுக்குட்படும் பொருள் எனப்படும். எடுத்துக்காட்டு: யுரேனியம் 235 (U235) புளுட்டோனியம் 239 மற்றும் புளுட்டோனியம் 241
(Pu239 மற்றும் Pu241)
யுரேனியத்தின் எல்லா ஐசோடோப்புகளும், நியூட்ரான்களை
உட்கவர்ந்து பிளவுக்குட்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, இயற்கையில்,
99.28% யுரேனியம் 238 தனிமமும், மீதமுள்ள 0.72% யுரேனியம் 235
தனிமமும் கிடைக்கிறது. இவற்றில் யுரேனியம் 238
பிளவுக்குட்படுவதில்லை. அதே வேளையில் யுரேனியம் 235
பிளவுக்குட்படும் பொருளாகும்.
பிளவுக்குட்படாத சில கதிரியக்கத்
தனிமங்களை நியூட்ரான்களை உட்கவரச் செய்வதன் மூலம் பிளவுக்குட்படும் பொருள்களாக
மாற்றமுடியும். இவை வளமிக்க பொருள்கள் வளமைப் பொருள்கள்) என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு
: யுரேனியம் 238, தோரியம் 232,
புளுட்டோனியம் 240
3. தொடர்வினை
யுரேனியம் (U-235) அணுக்கருவினை
நியூட்ரான் கொண்டு தாக்கும் போது பிளவுக்குட்பட்டு மூன்று நியூட்ரான்கள்
வெளியேற்றப்படுகின்றன. இந்த மூன்று நியூட்ரான்களும் அடுத்து வரும் மூன்று
யுரேனியம் உட்கரு பிளவிற்குக் காரணமாக அமைந்து ஒன்பது நியூட்ரான்களைத் தருகின்றன.
இந்த ஒன்பது நியூட்ரான்களும் மீண்டும் அடுத்த 27
நியூட்ரான்கள் உருவாகக் காரணமாகின்றன. இதேபோல் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
எனவே இது தொடர்வினை என்றழைக்கப்படுகிறது. தொடர்வினையில் தன்பரவுதல் நிகழ்வின்
மூலம் நியூட்ரான்களின் எண்ணிக்கை பெருக்குத் தொடர்வரிசையில் மிகவேகமாக
பெருக்கமடைகின்றது.
தொடர்வினையினைக் கட்டுப்பாடான
தொடர் வினை மற்றும் கட்டுப்பாடற்ற தொடர்வினை என இரண்டு வகைகளாகப்
பிரிக்கலாம்.
அ) கட்டுப்பாடான
தொடர்வினை
கட்டுப்பாடான தொடர்வினையில்
வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ‘ஒன்று’ என்ற அளவில்
பராமரிக்கப்படுகிறது. அதாவது, உட்கவரும் பொருட்களைக் கொண்டு
வெளிவரும் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினைக்கு அனுமதித்து,
மற்ற நியூட்ரான்கள் உட்கவரப்படுகின்றன. ஆகையால் இவ்வினையானது
கட்டுப்பாடான வினையாக தொடர்கிறது. இத்தொடர்வினையின் மூலம் வெளியேற்றப்படும் ஆற்றல்
ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கரு உலையில் முழுவதும்
நிலைநிறுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க
கட்டுப்பாடான தொடர்வினையே பயன்படுத்தப்படுகிறது.
ஆ) கட்டுப்பாடற்ற
தொடர்வினை
இவ்வகை தொடர்வினையில் நியூட்ரான்கள்
பெருக்கமும், அதன் காரணமாகப் பிளவும் அதிகமான பிளவுப் பொருள்களும் உருவாகின்றன. இதன்
முடிவில் ஒரு வினாடிக்குள் அதிகமான ஆற்றல் வெளியேறுகின்றது. இவ்வகை தொடர்வினையைப்
பயன்படுத்தி அணு குண்டு வெடித்தல் நிகழ்த்தப்படுகிறது. படம் 6.3 கட்டுபாடற்ற தொடர்வினையினைக் குறிக்கிறது.
4. மாறுநிலை நிறை
அணுக்கரு பிளவின் போது 2 அல்லது 3 நியூட்ரான்கள் வெளியாகின்றன. ஆனால் எல்லா நியூட்ரான்களும் அடுத்தடுத்த
பிளவினை உண்டாக்கும் என்பதனை உறுதியாகக் கூற இயலாது. சில நியூட்ரான்கள் பிளவு
அமைப்பிலிருந்து வெளியேறுகின்றன. இதனை நியூட்ரான் கசிவு எனலாம். மேலும் சில
நியூட்ரான்களை பிளவுக்கு உட்படாதப் பொருள்கள் உட்கவர்கின்றன.
இவ்விரு காரணிகளால் நியூட்ரான்
இழப்பு ஏற்படுகிறது. தொடர்வினை நிகழ்வதற்கு அணுக்கரு பிளவு மூலம் உருவாகும்
நியூட்ரான்களின் உற்பத்தி, இழப்பை விட அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு நிகழ, பிளவுக்கு
உட்படும் பொருளின் நிறையானது, ஒரு குறிப்பிட்ட நிறை
மதிப்பிற்குச் சமமாக இருக்க வேண்டும். இந்நிறை ‘மாறுநிலை
நிறை’ எனப்படுகிறது.
தொடர்வினையைத் தொடர்ந்து நிலை
நிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின் குறைந்த அளவு நிறையை ‘மாறுநிலை நிறை'
என அழைக்கலாம். இது அதன் சூழல், அடர்த்தி
மற்றும் பிளவுக்குட்படும் பொருளின் அளவு ஆகியவற்றைச் சார்ந்தது.
மாறுநிலைநிறையை விடப் பிளவுப்
பொருள்களின் நிறை குறைவாக இருந்தால் அதனை குறைமாறுநிலை நிறை (Subcritical Mass) எனலாம்.
மாறுநிலை நிறையை விடப் பிளவுப் பொருள்களின் நிறை அதிகமாக இருந்தால் அதனை மிகை
மாறுநிலை நிறை அல்லது மீமாறுநிலை நிறை (Supercritical Mass) என
அழைக்கலாம்.
செயல்பாடு 6.2
மணிகள் அல்லது பாசிகளைக் கொண்டு
தொடர்வினைக்கான மாதிரியினை உருவாக்குக
‘கட்டுப்பாடற்ற தொடர்வினை' என்ற தத்துவத்தின் அடிப்படையில் அணு குண்டு செயல்படுகிறது. கட்டுப்பாடற்ற தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும், அணுக்கருப்பிளவு வினையும், பெருக்குத்தொடர் முறையில் (GP) கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன. மிகக் குறுகிய காலத்தில் அதிக ஆற்றலுடன் கூடிய பெரு வெடிப்பு நிகழ்கிறது.
அமைப்பு
அணுகுண்டில் குறைமாறுநிலை நிறை
கொண்ட பிளவுக்கு உட்படும் பொருளின் ஒரு சிறுபகுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த
சிறுபகுதியானது உருளை வடிவ வெற்றிடத்தைக் கொண்டுள்ளது. வெற்றிடத்திற்குப்
பொருந்தும் வகையில், உருளை வடிவப் பிளவுக்குட்படும் பொருள் ஒன்று வைக்கப்படுகிறது. இதன் நிறை,
மாறுநிலை நிறையைவிடக் குறைவாக இருக்க வேண்டும். அணு குண்டு
வெடிப்பிற்காக இந்த உருளையானது வெற்றிடத்திற்குள்ளே ஊடுருவச் செய்யப்படுகிறது.
இவ்விரு பகுதிகளும் ஒன்றாகச் சேர்ந்து மீமாறுநிலை நிறையை (supercritical
mass) அடைந்தவுடன் அணுகுண்டு வெடிப்பு நிகழ்கிறது. இதனைப் படம் 6.4 காட்டுகிறது.
அணுகுண்டு வெடிப்பு நிகழ்வின் போது
மிக அதிக அளவு ஆற்றலுடன் வெப்பமும் ஒளியும், கதிரியக்கமும் வெளியாகின்றன. மிகக்குறுகிய
வினாடிகளுக்குள் கட்டுக்கடங்காத அழுத்தமும், வெப்பமும் மிக
அதிக அளவில் உயர்கிறது. அனைத்து உயிரினகளுக்கும் தீங்கிழைக்கக்கூடிய காமாக்
கதிர்வீச்சுகள் இத்துடன் வெளியாகின்றன. 1945 இல் இரண்டாம்
உலகப்போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதிகளில் இவ்வகையான
அணுகுண்டுகள் வீசப்பட்டன.
உங்களுக்குத் தெரியுமா?
எலக்ட்ரான்
வோல்ட்
அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின்
ஆற்றலை அளவிடும் அலகு எலக்ட்ரான் வோல்ட் [eV] ஆகும். அதாவது ஒரு வோல்ட் மின்னழுத்தத்தினைப்
பயன்படுத்தி முடுக்குவிக்கப்படும் ஓர் எலக்ட்ரானின் ஆற்றலாகும்.
1eV = 1.602 × 10-19 ஜூல்.
1 மில்லியன்
எலக்ட்ரான் வோல்ட் = 1 MeV = 106 eV
(மெகா எலக்ட்ரான் வோல்ட்)
அணுக்கரு பிளவின் மூலம் வெளியேற்றப்படும்
சராசரி ஆற்றல் 200 MeV.