பெருங்கடலின் வெப்பநிலை
கடல்
நீரின் குளிர்ந்த நிலை அல்லது வெப்பமான நிலையை அளந்து கூறுவதே பெருங்கடல்
வெப்பநிலை எனப்படும். பொதுவாக வெப்ப நிலையானது வெப்பமானியைப் பயன்படுத்தி 'டிகிரி
செல்சியஸ்' என்ற அலகில் கூறப்படுகிறது. பெருங்கடல் நீரானது
அதிகபட்ச வெப்பத்தை சூரியனின் வெப்ப கதிர்வீசல் மூலமாக பெறுகிறது. நீரின் வெப்பம்
மற்றும் குளிர்ச்சி அடையும் திறன் நிலத்தின் தன்மையிலிருந்து குறிப்பிட்ட அளவு
வேறுபடுகிறது.
பெருங்கடலின் வெப்பநிலை கிடைப்பரவலை
பாதிக்கும் காரணிகள்
அட்சக்
கோடுகள், வீசும் காற்று பெருங்கடல் நீரோட்டங்கள் மற்றும்
தல வானிலை ஆகியவை பெருங்கடலின் வெப்ப பரவலைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.
1. அட்சகோடுகள்
புவியின்
மீது சூரிய கதிர்கள் சாய்வாக விழுவதால் கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை
புவியிடைக் கோட்டிலிருந்து துருவத்தை நோக்கி செல்லச்செல்ல குறைகிறது.
2. வீசும் காற்றுகள்
காற்று வீசும் திசை
பெருங்கடலின் வெப்ப பரவலை வெகுவாக பாதிக்கிறது. நிலப்பகுதியிலிருந்து பெருங்கடல்
அல்லது கடலை நோக்கி வீசும் காற்று பெருங்கடல் நீரின் வெப்பத்தை உயர்த்துகிறது.
குளிர்காலத்தில் பனிமூடிய பகுதிகளிலிருந்து கடலைநோக்கி வீசும் காற்று கடல் நீரின்
வெப்பத்தை குறைக்கிறது. வியாபாரக்காற்று வீசும் பகுதிகளில் கடற்
கரையிலிருந்து வீசும் காற்று கடலின் கிளர்ந்தெழும் (upivelling)
குளிர்ந்த
நீரை மேலும் உயர்த்துவதால் கடல்நீரின் வெப்ப அளவு குறைகிறது. அதேசமயம்
கடலிலிருந்து வீசும் காற்று வெப்பநீரை ஒரே பகுதியில் குவிப்பதால் கடல்நீரின்
வெப்பநிலையை குறிப்பிட்ட அளவு உயர்த்துகிறது.
3. பெருங்கடல் நீரோட்டங்கள்
வெப்ப
நீரோட்டங்கள் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு பெருங்கடல் நீரின் வெப்பத்தை
அதிகரிக்கச் செய்யும் அதே வேளையில் குளிர் நீரோட்டங்கள் பெருங்கடல்நீரின்
வெப்பத்தைக் குறைக்கின்றன. கல்ப் நீரோட்டம் (வெப்ப நீரோட்டம்) வட அமெரிக்காவின்
கிழக்குக் கடற்கரை மற்றும் ஐரோப்பாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வெப்பத்தை
அதிகரிக்கின்றது. லாபரடார் குளிர்நீரோட்டம் வட அமெரிக்காவின் வடகிழக்கு
கடற்கரையின் வெப்பத்தைக் குறைக்கிறது.
4. இவற்றைத் தவிர சிறிய காரணிகளான கடலடி
மலைத்தொடர்கள், உள்ளூர் வானிலை மாற்றங்களான புயல்,
சூறாவளி,
ஹரிகேன்,
மூடுபனி,
மேகமூட்டம்,
ஆவியாதல்,
திரவமாதல்
போன்றவையும் கடல்நீரின் மேற்பரப்பு வெப்பத்தை பாதிக்கின்றன.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில்
கடல் மேற்பரப்பின் வெப்பநிலை செல்சியஸில் காட்டப்பட்டுள்ளது. (படம் 5.12)
ஜுலை
மாதத்தில் கடல்மேற்பரப்பின் வெப்ப நிலையையும் (படம் 5.13)
ஜனவரி
மாதத்தில் உள்ள கடல் மேற்பரப்பின் வெப்பநிலையையும் காட்டுகிறது. குளிர் வெப்பநிலை
ஊதா நிறத்திலும், மிதமான வெப்பநிலை பச்சை நிறத்திலும்,
அதிக
வெப்பநிலை மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலும்,
நிலப்பகுதி
கருப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளது. தினசரி வெப்ப நிலை வீச்சும் வருடாந்திர
வெப்பநிலை வீச்சும் நிலப்பகுதியைக் காட்டிலும் பெருங்கடல்களில் மிகவும் குறைவு.
உண்மையில் புவியிடைக் கோட்டுப் பகுதியில் பெருங்கடல்களின் வெப்பம் அதிகம் கிடையாது (27°
செல்சியஸ்
முதல் 30° செல்சியஸ் வரை ) ஆனால்
புவியிடைக் கோட்டுக்கு சற்று வடக்கில் தான் வெப்பம் அதிகம் காணப்படுகிறது. மிகக்
குறைவான வெப்பநிலை - 1.9° செல்சியஸ் துருவங்களுக்கு
அருகில் காணப்படுகிறது. வட கோளத்தில் பெருங்கடல்களில் அதிக பட்ச மற்றும் குறைந்த
பட்ச வெப்பநிலை முறையே ஆகஸ்ட் மாதத்திலும்,
பிப்ரவரி
மாதத்திலும் காணப்படுகிறது. இதற்கு எதிர்மறையாக தென் கோளத்தில் பதிவாகிறது.
பெருங்கடல்களின் செங்குத்து வெப்ப பரவல்
பெருங்கடலின்
இரண்டறக் கலந்த மேற்பரப்பு நீர் அடுக்கு 20°
செல்சியஸ்
முதல் 25° செல்சியஸ் வரையிலான
வெப்பநிலையை கொண்டிருக்கும். இந்த அடுக்கின் ஆழம் பருவ காலத்திற்கு ஏற்ப
மாறுபடும். இந்த செங்குத்து பரவல் அயனமண்டலத்தில் 200
மீட்டர்
ஆழம் வரை காணப்படுகிறது. இந்த அடுக்கின் கீழ் தான் வெப்பநிலை சரிவு அடுக்கு (Thermocline
layer) காணப்படுகிறது. இது 200
மீட்டர்
முதல் 1000 மீட்டர் ஆழம் வரை
வேறுபட்டுக் காணப்படுகிறது. தனித்துவம் வாய்ந்த இந்த அடுக்கில் ஆழம் அதிகரிக்க
அதிகரிக்க வெப்பநிலை வேகமாகக் குறைகிறது. வெப்பநிலை சரிவு அடுக்குக்குக் கீழ் 4000
மீட்டர்
வரை வெப்பநிலைக் குறைகிறது. அதற்கும் கீழ் பெருங்கடலின் வெப்பநிலையானது 4°
செல்சியஸ்
என்ற அளவில் நிலையாக இருக்கும் ( படம் 5.14).
உங்களுக்குத் தெரியுமா?
நிலத்தினால்
பகுதியாக சூழப்பட்டக் கடல்களில் அதன் கடலடி நிலத்தோற்றங்கள்,
கடலடி மலைத் தொடர்கள்,
ஆழம்
குறைவான நீர்பகுதி ஆகியவை பிறக்கடல்நீர் எளிதில் கலப்பதைத் தடுக்கிறது.
எடுத்துக்காட்டாக,
செங்கடலில்
1,800 மீட்டர் ஆழத்தில் உள்ள நீரின் வெப்பநிலை அதே
ஆழத்தில் உள்ள இந்தியப்பெருங்கடல் நீரின் வெப்பநிலையைக்காட்டிலும் அதிகம்.
தகவல் குறிப்பு
கடல்
நீரின் ஆழம் பாதோம் ( fathom ) என்ற
அலகில் அளக்கப்படுகிறது. ஒரு பாதோம் என்பது 6
அடி
அல்லது 1.8 மீட்டருக்கு சமம்.